நீல நிற நிழல்கள் (2)

மணியின் கையில் இருந்த டெலிபோன் ரிஸீவர், ஓர் உயிருள்ள ஜந்து மாதிரி நடுங்கியது.

மனசுக்குள் பிரளயம் நடந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அண்ணிக்கு விஷயம் தெரிந்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பில் உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டான். டெலிபோனில் தொடர்ந்து பேசினான்.

"தகவல் கொடுத்ததற்கு நன்றி!"

"எப்போது வருகிறீர்கள்?"

"உடனே!"

"தாமதம் செய்துவிடாதீர்கள்! அடுத்த விமானம் பிடித்துப் புறப்பட்டு வாருங்கள்!"

"சரி… சரி!…"

ரமணி ரிஸீவரை வைத்தான். மாசிலாமணி கேட்டார், "போன் பம்பாயில் இருந்துதானே?"

"ஆ… ஆமா!…"

"ஹரி பேசலை போலிருக்கே…?"

"இ… இல்ல…!"

"பின்னே பேசினது யாரு?"

"பாம்பே சில்வர் ஸாண்ட் ஓட்டலிலிருந்து பேசறாங்க. அண்ணன் ஹரி அங்கேதான் தங்கியிருக்காராம். ஒரு மணி நேரமா வீட்டுக்கு போன் பேச ட்ரை பண்ணினாராம். லைன் கிடைக்கலையாம். அதுக்குள்ளே யாரோ ஒரு ஃப்ரெண்ட் வந்ததனால அவர் கூட வெளியே புறப்பட்டுப் போயிட்டாராம். போகும்போது ஓட்டல் ரிசப்ஷன்ல நம்ம வீட்டு போன் நம்பர் கொடுத்து, லைன் கிடைச்சதும் அவர் வந்து சேர்ந்துட்டதா தகவல் கொடுக்கச் சொன்னாராம். அதுக்குத்தான் போன் பண்ணியிருந்தாங்க."

கீதாம்பரி உஷ்ணமாய்ப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுப் பொருமினாள்.

"அவருக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டா போதும். வீட்ல இருக்கிற எல்லாரையும் மறந்துடுவார். லைன் கிடைக்கலைன்னா என்ன, கொஞ்சம்நேரம் வெயிட் பண்ணி போன் செய்யக் கூடாதா?"

"ஹரி மறுபடியும் போன் பண்றதா சொல்லியிருக்கானாமா?" என்று திலகம் கேட்க, ரமணியின் தொண்டைக்குள்ளேயே ஹரிஹரனின் மரணச் செய்தி ஒரு கசப்பு மருந்து மாதிரி சிக்கியிருக்க, பேச முடியாமல் திணறினான்.

"என்னடா பேச்சையே காணோம்?"

"வந்து… வெளியே போயிருக்கிற அண்ணன் திரும்பி வர்றதுக்கு லேட்நைட் ஆயிடுமாம். நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு போன் பண்றதா சொன்னாராம்."

"பார்த்தீங்களா அத்தே உங்க புள்ளையை!"

"கோபப்படாதேம்மா! ஹரி பத்திரமா பம்பாய் போய்ச் சேர்ந்த தகவல் நமக்குக் கிடைச்சாச்சு. இப்போதைக்கு இந்த சந்தோஷம் போதும்! நாளைக்குக் காலையில அவன் போன் பண்ணிப் பேசும்போது ஆக்ரோஷமா ஒரு சண்டை போடு."

"நாளைக்கு அவர் போன் பண்ணினா நான் பேசப் போறதில்லை. நீங்களே பேசுங்க!" சொன்ன கீதாம்பரி இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெள்ள எழுந்தாள்." அவருக்கு என்னிக்குமே பிஸினஸ்தான் பெரிசு. ஊர்ல பொண்டாட்டிகிட்டே ரெண்டு வார்த்தை பேசறதுக்காக டைரியில் நேரத்தை நோட் பண்ணிக்குவார். இப்போ வெளிநாட்டுப் பயணம். ஊர் மண்ணை மிதிக்கிற வரைக்கும் பொண்டாட்டி ஞாபகம் வராதே!"

மாசிலாமணி குறுக்கிட்டார். "மனசைப் போட்டுக் குழப்பிக்காதேம்மா! ஹரிக்குக் கொஞ்சம் ட்யூட்டி கான்ஷியஸ் அதிகம். யாராவது முக்கியமானவங்க வந்திருப்பாங்க. அதான் வெளியே போயிட்டான். நாளைக்குக் காலையில் போன் பண்ணும்போது சந்தோஷமா பேசும்மா! உன்மேல் அவனுக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா?"

"அதான் இப்ப தெரிஞ்சு போச்சே மாமா! உங்க மகனை நீங்கதான் மெச்சிக்கணும். மாமா! நாளைக்குக் காலையில் அவர் போன் பண்ணினா நிச்சயமா நான் பேச மாட்டேன்! நாளைக்கு மட்டும் இல்லை, அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்குப் போய் அங்கிருந்து போன் பண்ணினாக் கூட நான் பேச மாட்டேன்!"

திலகம் சிரித்தாள். "பார்க்கலாமா?… நாளைக்குக் காலையில எட்டு மணிக்கு டெலிபோன் மணி அடிச்சதும் வயித்துல புள்ளை இருக்கறதைக் கூட மறந்துட்டு ஓடி வந்து ரிஸீவரை எடுத்துப் பேசப் போறே!"

"மாட்டேன் அத்தே!"

"ஹரியோட குரல் கேட்காம உனக்குச் சாப்பாடு தண்ணி இறங்குமா என்ன? போய்ப் படுத்துக்கோம்மா! நாளைக்குக் காலையில பேசிக்கலாம்."

கீதாம்பரி, இடுப்பைப் பிடித்துக் கொண்டு மெள்ள நடந்து, ஹாலின் கோடியில் இருந்த தன்னுடைய படுக்கையறையை நோக்கிப் போனாள்.

அவள் அறைக்குள் அஸ்தமிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த திலகம், பின் கணவனிடம் திரும்பினாள். பொரிந்தாள்.

"உங்களை மாதிரியேதான் பிள்ளைகளும்! பிஸினஸ் விஷயமா வெளியூர் போனாப் போதும்; வீட்ல பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கிறதே ஞாபகத்துக்கு வராது. ஹரி நாளைக்குக் காலையில் போன் பண்ணட்டும்… அவனை ஒரு பிடி பிடிக்கிறேன்!"

ரமணி உடைந்த குரலில் கூப்பிட்டான்.

"அ… அ… அம்மா…!"

"நீ என்னடா சொல்லப் போறே? அண்ணன்காரனுக்கு வக்காலத்து வாங்கப் போறியா?" கேட்டுக்கொண்டே ரமணியின் முகத்தைப் பார்த்த திலகம் திடுக்கிட்டாள்.

ரமணியின் முகம் இருட்டுக்குப் போயிருக்க, கண்களில் நீர் கனத்துத் தெரிந்தது. நாசித் துவாரங்கள் விம்ம, உதடுகள் துடிப்பில் இருந்தன.

"டே… டேய்… ரமணி!… உனக்கு என்னடா ஆச்சு? ஏன் அழறே?"

"அ… அம்மா…!"

"சொல்லுடா!…"

குரலைத் தாழ்த்தினான் ரமணி. "அம்மா! நான் இ… இப்போ சொல்லப் போறதைக் கேட்டுட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடாதே! அப்பா, நீங்களும்தான்! அண்ணிக்கு இந்த விஷயம் இப்போதைக்குத் தெரியக் கூடாது!"

"டே… டேய்… ரமணி! உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பயம்மா இருக்கு. நீ… என்னடா சொல்லப் போறே?"

"அ… அந்த ரூமுக்குப் போயிடலாம் வாங்க!…" ரமணி எழுந்து ஹாலின் இடது கோடியில் இருந்த அறையை நோக்கிப் போக,
வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொண்டே பதைபதைப்போடு மாசிலாமணியும் திலகமும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

************

டாக்டர் சதுர்வேதியின் ஜிப்பா பாக்கெட்டை மறுபடியும் உன்னிப்பாகப் பார்த்தாள் நிஷா.

அந்த நான்கைந்து ஈக்கள் விடாப்பிடியாக அங்கேயே வட்டமடித்தன.

‘அவருடைய பாக்கெட்டுக்குள் என்ன இருக்கிறது? எதற்காக இப்படி வியர்த்து வழிகிறார்?’ நிஷா, மனசுக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு டாக்டர் சதுர்வேதியையே பார்க்க, அவர் அவளை ஏறிட்டார்.

"பேட்டி இன்னிக்கு வேண்டாம்!"

"அப்படீன்னா, எப்ப வரட்டும் டாக்டர்?"

"உன்னோட போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போ! நானே உனக்கு போன் பண்ணித் தேதியையும் நேரத்தையும் சொல்றேன்."

"எனக்கு போன் இல்லை டாக்டர். அதுவுமில்லாம, அடுத்த வாரம் நான் மெட்ராஸ் போறேன். போனா பம்பாய் திரும்பப் பத்து நாளாயிடும். இன்னிக்கே நீங்க ஒரு அரைமணி நேரம் ஒதுக்கிக் கொடுத்தா போதும்! முக்கியமான சில கேள்விகளைக் கேட்டு என்னோட பேட்டியை முடிச்சுக்கறேன்."

"இன்னிக்கு முடியாது. நான் கொஞ்சம் பிஸி" சதுர்வேதியின் இடதுபக்க நெற்றி நரம்பு மெலிதாய்த் துடிப்பது தெரிந்தது.

"டாக்டர்! நான், மற்ற பத்திரிகை ரிப்போர்டடர்கள் மாதிரி இல்லை. பேட்டிக்காக ஒரு அரசியல்வாதியையோ, ஒரு நடிகையையோ இதுவரைக்கும் நான் தேடிப் போனதில்லை. விஞ்ஞானம், மருத்துவம் தொடர்பான வல்லுநர்களை மட்டும் தேடிப் போய்ப் பார்த்து பேட்டி எடுத்திருக்கேன். என்னோட பேட்டிக் கட்டுரைகள் பம்பாயிலிருந்தும் டெல்லியிலிருந்தும் வெளியாகிற பெரிய பெரிய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கு. அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க நீங்க விருப்பப்பட்டா கொண்டு வந்து காட்டறேன்."

"அதெல்லாம் வேண்டாம்!"

"நரம்பியல் நிபுணரான நீங்க, அந்த மெடிக்கல் செமினாரில் பேசும்போது மனிதனுடைய மூளைத்திறனை வருங்காலத்தில் அதிகரிக்கச் செய்ய வேண்டியது அவசியம்னு சொல்லி அது சம்பந்தமா ஒரு ‘ரிசர்ச்’ பண்ணிட்டு வர்றதாகவும் சொன்னீங்க… நீங்க அப்படிச் சொன்னது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. நீங்க இப்போ பண்ணிட்டிருக்கிற ரிசர்ச்சைப் பத்தின லிட்டரேச்சர் என்னான்னு சொன்னா பரவாயில்லை…"

"அதான் சொன்னேனே… இன்னிக்குப் பேட்டி கீட்டி எதுவும் வேண்டாம்! நீ மெட்ராஸ் போயிட்டு வந்ததும் எனக்கு போன் பண்ணு, டேட் சொல்றேன்."

"டாக்டர்!…"

உள்ளே டெலிபோன் அடித்தது.

சதுர்வேதி சற்றே பதற்றம் அதிகரித்தவராக "யூ மே கோ" என்று சொல்லிவிட்டு டெலிபோனை அட்டெண்ட் செய்வதற்காக உள்ளே போனார்.

நிஷாவின் பார்வை அவருடைய ஜிப்பா பாக்கெட்டுக்குப் போக, வட்டமடிக்கும் அந்த ஈக்கள் தெரிந்தன.

டாக்டரின் முகம் சரியில்லை.

அவர் முகத்தில் ஏதோ தப்பு பண்ணிவிட்ட தவிப்பு.

‘என்னவாக இருக்கும்..? அதைத் தெரிந்துகொள்ளாமல் இங்கிருந்து போகக் கூடாது!’

நிஷா கண்களைச் சுழற்றிச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பார்வைக்கு யாரும் கிடைக்கவில்லை. உள்ளே டாக்டர், டெலிபோனில் யாரிடமோ இரைந்து பேசிக்கொண்டிருந்தார்.

நிஷா மெள்ளப் பக்கவாட்டில் நகர்ந்து போய், அங்கே சாத்திருந்த கதவைத் தள்ளிப் பார்த்தாள்.

கதவு சத்தமில்லாமல் உள்வாங்கிக் கொண்டது.

நிசப்தமான, அரையிருட்டான அறை.

இரண்டு பெரிய சைஸ் மர பீரோக்கள் சுவரோரமாய்த் தெரிந்தன. அறைக்குள் யாரும் இல்லை என்று ஊர்ஜிதமானதும், நிஷா சட்டென்று உள்ளே நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு மர பீரோவுக்குப் பின்னால் இருந்த இடைவெளியில் தன்னைச் செருகிக் கொண்டாள்.

‘இது உனக்கு வேண்டாத வேலை!’ என்று மூளையின் சில நியூரான்கள் நிஷாவை எச்சரிக்க, அவள் பொருட்படுத்தாமல் மூச்சை அடக்கிக்கொண்டு நின்றாள்.

இதயத்துடிப்பு உச்சத்திலிருக்க, டாக்டர் உள்ளே டெலிபோனில் பேசுவது தெளிவாகக் கேட்டது.

"நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு பேஷண்ட்டைக் கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்துடுங்க! பார்த்துடலாம்… "

"……."

"இன்னிக்கா? ஸாரி! இன்னிக்கு முடியாது. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். உங்களுக்கு ரொம்பவும் அவசரமாயிருந்தா வேற டாக்டரை பாருங்க!"

டாக்டர் ரிஸீவரை வைக்கும் சத்தம் சற்றுப் பலமாகவே கேட்டது. அதற்குப் பின் பங்களா முழுக்க ஒரு வேண்டாத நிசப்தம்.

நிஷா பீரோவுக்குப் பின்னால் சின்னச் சலனம் கூடக் காட்டாமல் அப்படியே நின்றாள்.

சில விநாடிகளுக்குப் பின்…

முன் அறையில் டாக்டரின் காலடிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து அவருடைய குரல்.

"ஆர்யா!… ஆர்யா!…"

"என்ன டாக்டர்!" உட்பக்க அறை ஏதோ ஒன்றிலிருந்து ஒரு பெண்ணின் குரல் நிசப்தத்தைக் கீறிக்கொண்டு வெளிப்பட்டது.

"அந்தப் பத்திரிகை ரிப்போர்ட்டர் பொண்ணு போயிட்டா போலிருக்கு. நீ மொதல் காரியமா ஒரு பூட்டை எடுத்துக்கிட்டுப் போய் காம்பெளண்ட் கேட்டைச் சாத்திட்டு வா! வேற யாராவது வந்துடப் போறாங்க."

"சரி டாக்டர்!" அந்த ஆர்யா குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே நிஷா ஒளிந்திருந்த அறைக் கதவைத் தள்ளியபடி உள்ளே வந்தார் டாக்டர் சதுர்வேதி. நிஷா பீரோவுக்குப் பின்னால் அழுத்தமாக ஒட்டிக் கொண்டாள்.

இதயத்துடிப்பு பந்தயக் குதிரையாக மாற, உடம்பில் இருந்த வியர்வைச் சுரப்பிகள் விழித்துக் கொண்டன.

பீரோவுக்கு வெகு பக்கத்தில் வந்தார் டாக்டர்.

(தொடரும்)

About The Author