நுண்செயலி

நுண்செயலி என்பது சிலிகான் சில்லுவின் (Silicon chip) ஒரு செயற்கை வடிவம்; இது கணினியின் மூளை போன்று செயல்படுவது. கணினியில் விரும்பிய செயல்களை மேற்கொள்ள, நிரல்களை வடிவமைக்க, நினைவகத்திலிருந்து (memory) தரவுகளைப் (data) பயன்படுத்த, வெற்றிகரமாக கணிதச் செயல்பாடுகளை நிறைவேற்ற என்று பல வழிகளிலும் இந்த நுண்செயலி பணியாற்றுகிறது.

தொடக்க காலக் கணினிகள் மிக மிகப் பெரியவை, ஓர் அறையையே அடைத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தன; ஏராளமான பெரிய இணைப்புக் கம்பிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு, உரிய சாதனம் அல்லது அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. இவ்வமைப்பே நுண்செயலி ஆகும்.

அமெரிக்காவின் இண்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுநரான மர்சியன் டெடோஃப் (Marcian Tedoff) என்பவர் 1969ஆம் ஆண்டு முதலாவது நுண்செயலியை உருவாக்கி அதற்கு இண்டெல்-4004 எனப் பெயரிட்டார். இது 1971ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்த நுண்செயலி சுமார் 200 டிரான்சிஸ்டர் திறனும், 0.16 அங்குல நீளமும், 0.125 அங்குல அகலமும் கொண்டிருந்தது. இதற்கான காப்புரிமையை இண்டெல் நிறுவனம் பெற்றது.

முதலாவது தனிநபர் கணினி (Personal Computer-PC) நுண்செயலிச் சில்லுவின் வேகம் வெறும் 10 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே. இச்சில்லுகள் PC-XT என அழைக்கப்பட்டன. பின்னர் 20-25 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட நுண்செயலிகள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னர் பெண்டியம்–I, பெண்டியம்-II, பெண்டியம்-III, பெண்டியம்-IV என நுண்செயலிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் வேகங்களும் சுமார் 3 ஜிகா ஹெர்ட்ஸ் அளவுக்கு உயர்ந்துள்ளன (1 ஜிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்குச் சமம்).

நுண்ணிய மின்னணுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், பல ஆயிரம் மின்னணுச் சுற்றுகள் (electronic circuits) ஒரு சின்னஞ்சிறிய நுண்செயலிச் சில்லுவில் இன்று அமைக்கப்படுகின்றன. இஃது ஓர் முழு மின்னணுச் சுற்று எனப்படுகிறது. தற்போது நுண்செயலியின் முன்னேற்றம் மனித வாழ்க்கையில் நம்ப முடியாத வளர்ச்சிகளை உருவாக்கியுள்ளது; மேலும் பல வளர்ச்சிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

About The Author

1 Comment

Comments are closed.