நேதாஜி நினைவில்

கானக நடுவில் அலைந்து
கடுந்துயர் பலவும் தாங்கி
சேனையும் ஒன்று நிறுவி
செகமெலாம் ஜெய்ஹிந்த் முழங்கி
ஊனுயிர் பொருட்கள் யாவும்
உவப்புடன் தாய்க்குத் தந்து
வானகம் வியக்கும் பெருமை
வள்ளலே நீயே பெற்றாய்;

தங்கமே காய்ச்சினாலும்
தன்மையில் உயர்தல் போல
மங்கிடாக் கீர்த்தி பெற்றாய்;
மாந்தருள் முதல்வனானாய்;
சிங்கமீ தேறி அன்னை
சீற்றமோ டுலவுகின்றாள்;
வங்கத்தாய் தந்த செல்வ
வடிக்கிறோம் கண்ணீர் நாங்கள்.

ஒற்றுமை இலட்சியத்தை
உருக்கொளச் செய்த மன்னா
பெற்றதாய் உவகைதுள்ளப்
பெருமிதம் கொண்டு நின்றாள்
நற்றவப் பயனாலுன்னை
நாங்களே இங்கு பெற்றோம்
கொற்றவன் காலதேவன்
கொய்தனோ உந்தன் உயிரை?

பொன்றினை என்று கொண்டு
புலம்புவோம் சிறிது நேரம்;
என்றுநீ வருவா யென்றே
ஏங்குவோம் மற்றகாலம்;
துன்பமே பரிசாய்க் கொண்டு
துடைத்தனை அன்னை கண்கள்;
உன்னையே பிரிந்து மாதா
உகுக்கிறாள் இன்று விழிநீர்.

About The Author