நோய்களை விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள்

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி : ஆய்வில் தகவல்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை ‘ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ‘ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா. ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர் கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது.

நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது.

இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது. இது குறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது : "பிரித்தானியாவில் குழந்தைகள் மோசமான உணவு, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது. ஆனால், ஆரோக்கியமான உணவு முறை நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்."

படித்த பத்திரிகை செய்தி ஒன்று

‘நொறுக்குத்தீனி (குப்பை உணவு என்றுகூட சொல்லலாமோ?) என்பது எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதை அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களுக்கு சொல்வதே இல்லை’ என அறிவியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மையத்தின் பரிசோதனை மையம் சொல்கிறது. அந்த மையத்தின் ஆய்வு முடிவுகள் எதிர்பார்த்ததுதான்… கவலை தருவதுதான். இந்த ஆய்வின் முடிவை நொறுக்குத்தீனியை தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்ப்பதும் மறுப்பதும் கூட எதிர்பார்த்ததுதானே. ஆனால் அவர்கள் உண்மையை மறுக்கிறார்கள். நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது. அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர அது காரணமாக அமைகிறது.

நொறுக்குத் தீனியாகக் கருதப்படும் பர்கர், உருளைக்கிழங்கு வறுவல், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இந்த அறிவியல் சுற்றுப்புற சூழல் மையம், விரைவு உணவகங்களில் விற்கப்படும் தீனிகளை சோதனை செய்தது. அவைகள் அழகாக அடுக்கப்பட்டும் கட்டப்பட்டும் விற்கப்படுகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உணவு உட்பட, பல்வேறு நொறுக்குத் தீனிகளையும் குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பெரிய வர்த்தக வளாகங்களில் மட்டுமின்றி ஆங்காங்கே தனியாகவும், பல்பொருள் அங்காடிகளின் வெளியே பெட்டிக்கடைகள் போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் தயாரிப்பது, பெரிய நிறுவனங்கள் மூலம் மட்டுமின்றி குடிசைத் தொழில்கள் போலவும், மாநிலம் முழுவதும் பெருகிவிட்டன.

நொறுக்குத்தீனி என்பது சுருக்கமாகச் சொன்னால் சக்தி கொடுக்கும் கேலரி எதுவுமே இல்லாத குப்பை உணவுகள்தான். அவைகள் ஊட்டச்சத்து எதுவுமில்லாத கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலியவை கலந்த உணவுதான். இதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உணவு கட்டப்படும் உறைகள் மீது எந்த அளவிற்கு சர்க்கரை, உப்பு போன்றவை கலந்துள்ளன என்பதை தெளிவாகக் குறிப்பிடுவதில்லை. நாம் விரும்பி விழுங்கும் வறுவல்களில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான உப்பு கொழுப்புகள் எந்த அளவு இருக்கின்றன என்று விளக்கப்படுவதில்லை. ஒரு சீசாவிலான கோலாவில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான சர்க்கரை அளவைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கிறதென்பதும் நமக்கு சொல்லப்படுவதில்லை. நிறுவனங்கள் இதை விளம்பரப்படுத்தும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் இதை நம் உடல்நலத்தின் அக்கறையால் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

நொறுக்குத்தீனியை விற்கும் நிறுவனங்கள் உண்மையை மறைப்பது மட்டுமல்லாது, தவறான செய்திகளையும் வெளியிடுகிறார்கள். உதாரணமாக, நம் உணவில் கலந்திருக்கும் டிரான்ஸ்பேட் என்ற கொழுப்பு சக்தியைப் பற்றியது. ட்ரான்ஸ்பேட் நொறுக்குத் தீனிகளில் அதிகமாக இருந்தாலும் அந்த அளவை அவர்கள் குறிப்பிடுவதே இல்லை. இந்திய சட்டங்களும் இதை வெளியிடவேண்டுமென்று வற்புறுத்துவதில்லை. தவிர, டிரான்ஸ்பேட் 0.2 கிராமுக்குக் குறைவாக இருந்தால் அது உடல் நலத்திற்கு ஏற்றதென்று விளம்பரங்கள் கூட செய்யலாமென அனுமதிக்கிறது

நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவில், இரண்டு சதவீத, ‘டிரான்ஸ்பேட்’ என்ற கொழுப்பு சத்து இருந்தாலே அதிகம். ஆனால், வெளிநாட்டு பாஸ்ட்புட் உணவுகளிலும், பாக்கெட் நொறுக்குத் தீனிகளிலும் அளவுக்கு அதிகமான டிரான்ஸ்பேட் உள்ளது. இதுவே, உடல் எடையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களினால் கவர்ச்சி உணவுகளை உட்கொள்வதற்கு பெரியவர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே, குழந்தைகளின் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

அறிவியல் சுற்றுப்புற மையத்தின் ஆய்வில் முக்கிய இரண்டு விஷயங்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை.

ஒன்று, இந்த நொறுக்குத்தீனிகள் நமக்கு இரத்த அழுத்தத்திலிருந்து புற்றுநோய் வரை பல நோய்களின் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் அதிகம். தவறான உணவுகளும், தவறான வாழ்க்கைமுறைகளுமே பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஆகவே, இந்திய உணவு தர சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, நமது பாரம்பரியமான உணவுகள் பலதரப்பட்டவையாக இருந்தாலும் – ‘எதிலுமே அளவு’ என்ற நிதானத்துடனும், உணவில் அனைத்து கூட்டுப்பொருட்களும் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் தயாரிக்கப்படுபவை. பிரச்சினை எப்படி வருகிறதென்றால் ஒரு புதிய உணவு pizza (பீட்ஸா) போன்றவை வந்தவுடன் அதில் மயங்கி அதை நமது உணவுப் பழக்கமாகவே ஆக்கிக் கொள்வதுதான். நாம் எதை சாப்பிட வேண்டும் என்பது நம் கையில்தானே இருக்கிறது? நவீனப் பெயர்களில் வரும் நொறுக்குத் தீனிகளா அல்லது பாரம்பரியம் வாய்ந்த நம் இந்திய உணவுகளா?

(நன்றி : பாடம் மாத இதழ்)

(ஆதாரம்: சுனிதா நாராயண் அவர்களின் ‘டவுன் டு எர்த்’தில் வந்த ஆங்கிலக் கட்டுரையும் மற்றும் பல பத்திரிகை செய்திகளும்)”

About The Author