நோவுக்கஞ்சி

மந்தைப்பக்கம் ஒதுங்கியும்
ஊர்க்குளத்துல குளிச்சும்
பொதுக்கிணத்துத் தண்ணிய
மோண்டு மோண்டு குடிச்சும்
வைரம் பாய்ஞ்ச உடம்புகள்
ஊரையே வளைய வரும்.

திருவிழாக் கேலி
தெருக்கூத்து
பஞ்சாயத்துக் கூட்டம்
பத்தாதுன்னு-ஊர்
ஒத்துமையக் காட்ட
காலரா மெல்லத்
தட்டும் ஒவ்வொரு
வீட்டுக் கதவையும்.

குசலம் விசாரிக்க
வந்தவனுக்கு அம்மையும்
எட்டிப் பார்த்தவனுக்கு
காமாலையும்னு வந்து
ஊரே நோவுல சாகும்.

வேப்பெண்ணெய் ஒருநாளு
வெந்தயக்களி மறுநாளு
வேகவச்ச பூண்டு
பால்பெருங்காயம்னு
பச்சமருந்தத் தின்னு
கேப்பை ரொட்டியில
நோவ ஓட்டும்
நொந்த ஜனங்க பூமியிது.

About The Author

1 Comment

  1. Kaa.Na.Kalyanasundaram

    கவிதை மிகவும் அருமை. கிராமத்து யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது.

Comments are closed.