பஞ்சு மனசு

"நான் எதிர்பார்த்ததுதான் இது…" என்றேன் நிதானமாக. கண்களில் நீர்தளும்ப என்னையே பார்த்தவாறிருந்தாள் விமலா.

எனக்குப் பரிதாபமாயிருந்தது.

அன்றாட வாழ்க்கையில் நல்லதும், கெட்டதுமான எத்தனையோ எதிரி வினைகள்! வேண்டாதவற்றை, மேலே வந்து விழும் தூசியைப் போல் நினைத்துத் தட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான். காயமாய் நினைத்துச் சொறிய ஆரம்பித்தோமானால், ஆழமான புண்ணில் தான் போய் முடியும்…

பல தடவை சொல்லியிருக்கிறேன் நான்; அவள் மனது புரிந்து, அதன் மென்மை அறிந்து….. வெளியாளுக்கு என்ன வந்தது? எதிராளியிடம் எப்படி இதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?
இப்படித்தான் அது கடைசியில் முடியும் என்று நான் நினைத்தது போலவே ஆகிவிட்டது. என்னுள் அந்த நினைப்பு தூண்டப்பட்டதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

விமலா அவளது அலுவலகம் பற்றியும் சக பணியாளர்கள் பற்றியும், அவர்களின் பேச்சு, நடத்தை செயல் முறை ஆகியவை பற்றியும் அவ்வப்போது என்னிடம் எடுத்துக் கூறியும், விவாதித்திருந்ததுமான விஷயங்கள் என்னுள் சில அனுமானங்களை, ஏற்படுத்தியிருந்தன. அவை இப்போதைய நிகழ்விலும் என்னை ஒரு தீர்மானத்துக்கு இட்டுச் சென்றிருந்தன. அவ்வளவே.
"கண்ணைத் துடைத்துக் கொண்டு போய் வேலையைப் பார். அல்லது படுத்து ரெஸ்ட் எடு" என்றேன். அவள் அசைவதாயில்லை.

மாறாக, உள்ளே தீ கனன்று கொண்டிருப்பதுபோல் காணப்பட்டாள்.

"நான்தான் சொன்னேனே… எங்க ஆபீசே ரொம்ப மோசம்னு…. நேர்ல ஒண்ணு பேசறது. மறைவா ஒண்ணு… இப்படி எல்லாருமே ரொம்பக் க்ரூகட்… வெஞ்சன்ஸ்… சின்சியரா வேலை செய்றவங்க… ஒழுக்கமானவங்க இவங்களெல்லாம் இந்த ஆபீசுக்கு லாயக்கில்லே…. அட்ஜஸ்ட்மென்ட்டுங்கிற பேர்ல, பதிலுக்கு பதில் தப்புத் தப்பா பேசிக்கிட்டு ஈஈஈன்னு இளிச்சிக்கிட்டு… இத்யாதி… இத்யாதி… இருக்கிறவங்கதான் இங்கே லாயக்கு…"- கொட்டித் தீர்க்க வேண்டுமென்று பொங்கியது போல் பிரலாபித்தாள்.

"இப்போ இவ்வளவு சொல்ற நீ, சம்பளப் பணத்தை கை நீட்டி வாங்கினபோது கேர்புல்லா இருந்திருக்க வேண்டாமா?" – கேட்டேன் நான்.

"அங்கே வச்சு எண்ணிப் பார்க்கத்தாங்க செஞ்சேன்…. சரியாத்தான் இருந்தது. அந்தக் கேஷியர் கூடச் சொன்னாரு. "கூடுதலா இருந்தா வச்சிக்குங்க மேடம்… குறைய இருந்தா மட்டும் கேளுங்க…"ன்னு அசடு வழிஞ்சாரு. நோ தேங்க்ஸ்… சரியாயிருக்குன்னு பட்டுன்னு சொல்லிட்டு வந்திட்டேன். என் கெட்ட நேரம் பாருங்க… வீட்ல வந்து எண்ணினா நூறு ரூபாய் அதிகமா இருக்கு."

"அவரு பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம, அங்கேயே உட்கார்ந்து, நிதானமா இன்னொரு முறை எண்ணி நூறு ரூபாய் அதிகமாயிருக்குன்னு அப்போவே மூஞ்சிக்கு முன்னாடி எடுத்து நீட்டியிருந்தேன்னா வழியற அசடைத் துடைச்சிருந்திருப்பாரு…. அதிலயும் தவறிட்டே. சரி, போகட்டும்னு வேற ஒரு வழி சொல்லிக் கொடுத்தேன். நீ முந்திக்கோன்னு அதையும் மிஸ் பண்ணிட்டே…" சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள் விமலா.

"நான் மிஸ் பண்ணலைங்க… நீங்க சொன்ன மாதிரி ஆபீஸ் காசு நமக்கெதுக்குன்னு நானே முந்திப்போய் கொடுக்கத்தான் போனேன்… தூரத்திலேயே என்னைப் பார்த்துட்டு அவரும் கேட்டுட்டே வந்து நின்னாரு. எடுத்துக் கொடுத்திட்டேன். அதுக்கு மேலே என்ன?" கேள்வியோடு நின்றாள் அவள்.

நான் அமைதியானேன். இவளுக்கு எப்படிச் சாமாதானம் சொல்வது? என்ன சொல்லி இவளைச் சரிப்படுத்துவது?

எனது அலுவலகத்தில், வங்கியிலிருந்து ஒருமுறை சம்பளப் பணம் வாங்கி வந்தபோது ஒரே ஒரு ரூபாய் அதிகமாய் இருந்தது. நூறு, இருநூறு என்றுதான் அதிகமாய் இருக்க வேண்டுமா? ஒரு ரூபாய் அதிகமாய் இருந்தால் ஆகாதா? இருந்தது நம்புங்கள். உடனே கொண்டு போய் திரும்பக் கொடுத்தேன் நான். நாணயம் என்னவோ ஒன்றுதான்… ஆனாலும் அதைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுத்த நாணயம் இருக்கிறதே! அதுதான் பெருமை. வங்கியே வியந்து போனது அன்று. காரணம், எங்களுக்குத்தான் அதிகமாகக் கொடுக்கப்பட்டது என்பதை அவர்கள் கண்டுபிடித்த, ஒரு ரூபாய்தானே…. என்று சும்மா விட்டிருந்ததுதான். அது போலி் நாணயமாய்க் கொண்டு போய்த் திருப்பிக் கொடுத்தும் பயனில்லையென்றால்?

"மனுசங்கன்னா நாலுவிதமாத்தான் இருப்பாங்க…. இதெல்லாம் சகஜம், விட்டுத்தள்ளு…." என்று ஒரே போடாய்ப் போடலாமா?

"உன் பேர்லதான் மிஸ்டேக். சம்பளத் தேதியன்னைக்கு ஏன் லீவு போட்டே…? ரெண்டு நாள் கழிச்சு பேமென்ட் வாங்க.. அதிலே தேவையில்லாப் பிரச்சனை வர, தேவையா இதெல்லாம்?" என்று தேவையில்லாமல் கத்தி அடக்கலாமா?

"சரியாத்தான் இருந்ததுன்னு… ஒரே பேச்சா சொல்லி, சாதிச்சிருந்தா… இந்தச் சங்கடம் உண்டா? "

"உங்க ஆபிசே மோசம்ங்கிறியே… உங்க ஆபிசிலேயே திகிடுமுகடான ஆம்பளை ஒருத்தன் இப்படி வாங்கியிருந்தான்னா, நிச்சயம் இப்படித்தான் சொல்லியிருப்பான்… என்று சொல்லி பிரச்சனையை திசை திருப்பி ஆறப் போட்டுவிடலாமா?" பலவாறு யோசித்தவனாய் இருந்தேன் நான்.
ரொம்பவும் மனசு சோர்ந்து போனவளாய், அப்படியே அமர்ந்திருந்தவள், பின்பு துவண்டு, சரிந்து தன்னையறியாமல் கண்ணயர்ந்து போயிருந்தாள்.

காதோர முடிக்கற்றையோடு, வழிந்தோடிய வியர்வைக் கோட்டிற்கு மேலே ஒரு ஈ அமர்ந்து பறந்து கொண்டிருந்தது.

"ச்சூ…" என்று ஆவேசத்தோடு விரட்டினேன் அதை. எனக்குள் சிரிப்பு ஈயை விரட்ட கையசைவு போதாதா? ம்ஹூம். அது அவள் மேல் எழுந்த இரக்கத்தின் வெளிப்பாடு.

"என்னங்க… என்னாச்சு?" என்று திடுக்கிட்டு எழுந்தவள், மீண்டும் அப்படியே கண்ணயர்ந்து போனாள். பார்க்கப் பாவமாயிருந்தது எனக்கு.

அந்தக் கேஷியர் யாரிடமோ சொன்னாராம்….

"நானா கேட்ட பின்னாடிதான் கொடுத்தாங்க. அவங்களாகக் கொண்டு வந்து திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?"- எப்படி வார்த்தை பாருங்கள்! பஞ்சு மனசு இதில்தான் பொசுங்கியது. நரம்பில்லாத நாக்கு என்னமும் பேசுமோ? அந்த நபர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுதானே? உண்மையிலேயே வில்லங்கமான ஆபீஸ்தான். விமலா சொன்னது முற்றிலும் சரி. அப்படியில்லாவிட்டாலும் மனிதர்கள் இப்படித் தவறாக நினைத்துவிடுகிற சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

நினைத்துக் கொண்டேன் நான். அருகே நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் விமலா.

About The Author