பஞ்ச பூதங்கள்

காற்றெனும் அழகன் வீற்றுவரும்
காதல் பொன்ரதம் பூந்தென்றல்;
கூற்றுவன் காற்றின் வடிவெய்திக்
கொக்கரித் தார்பது சூறாவளி.
காலை எழுங்கதிர் பட்டவுடன்
கன்னி பனித்துளி புகையாவாள்;
மேலை மலைத்தொடர் தொட்டவுடன்
மேனி குளிர்ந்து மழை பொழிவாள்
மண்ணெணும் தேவி மகாராணி
மன்பதைக் கீவது பயிர்பச்சை;
பெண்ணிவள் சீற்றம் உற்றுநிலை
பெயர்ந்திடில் மரணம் பூகம்பம்.
நீரெனும் அன்னை அமுதூட்ட
நினைத்து சுரப்பது கருணைமழை;
போர் முரசறைந்து கோபமுடன்
பொங்கி புரள்வது பெருவெள்ளம்
ஆதவன் பூர்ணிமை மீனினத்தின்
ஆபரணம் திகழ் வானமகள்;
வேதனை மிஞ்சிய வேளையில் மின்
வெட்டி இடிக்குரல் மீட்டிடுவான்.

About The Author