படைப்பைப் பலியிடாதே !

நண்பகலில் ஓரூரில் ஓர்குயவன் குடிசைமுன்
நற்பசியில் ஓர்துறவியார்
நாவறட்சி தீரநீர் வேண்டுமென் றேகேட்க
நயமிக்க கலயத்திலே

பண்புடன் மோர்தந்தான் குயவனும் துறவியும்
பசியாறி யேமகிழவும்
பக்கத்தில் கட்டியுள ஆட்டுக்கி டாநெற்றி
பளிச்சிடும் பொட்டை நோக்கி

நண்பனே ஆட்டுக்குத் திலகமேன் எனவினவ
நாளைஎம தூர்விழாவினில்
நாங்கள் அம்பாளுக்குப் பலியிட வேயிதனை
நான்வளர்க்கி றேனென்றிட

திண்ணமுடன் துறவியக் கலயத்தைப் போட்டுடைத்தச்
சில்லுக ளைப்பொறுக்கியே
தந்தனன் நீதந்த கலயத்தை என்றந்தக்
குயவனி டம்நீட்டினார்.

உடைத்திட்ட கலயத்தின் சில்லெலாம் முயன்றெனால்
உருவான கலயமாமோ
உருக்குலைந் திட்டதை ஏற்கமுடி யாதென்றே
உறுதியாய் அவன் கூறிட

படைத்திட்ட மண்கலம் உடைந்ததற் கேமிகவும்
பதறுகின் றாய்நண்பனே
படைத்துலகு காக்கின்ற ஆதிபராசக்தியவள்
படைத்த உயிர் கொல்லலாமோ

கிடைப்பதற் கரியஉயிர் அம்பாளின் முன்னிலையில்
கிடந்துபலி யாகலாமோ
கருணையே உருவான தெய்வமொரு போதுமிக்
கொடுஞ்செயல் ஏற்றிடாதே!

திடமிக்க துறவியின் உரைகேட்ட குயவனும்
திருந்திதூ யவனாகினான்
திருதிரு வெனவிழித்த ஆட்டுக்கிடா வதனைக்
கட்டியே முத்தமிட்டான்!

About The Author