பத்திரமா பாத்துக்கங்க.. ப்ளீஸ்!

வெந்ததும் வேகாததுமாய் வாயில் திணித்துக் கொண்டு, தலையை வாருவதற்கு நேரமில்லாமல் கோதிக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடித்துச் சென்று, அலுவலக இருக்கையில் அமர்ந்தால், இந்தக் கால அம்மாக்களுக்கு வரும் நினைவுகள் எவை தெரியுமா? “காப்பகத்தில் இருக்கும் குழந்தை பால் குடித்ததா? நாப்கின் மாற்றினார்களா? சளிக்கு கொடுத்த மருந்துகளைக் கொடுத்தார்களா?” போன்றவைதான்.

கூட்டுக் குடும்பம் சிதைந்து, பொருளாதார நிர்பந்தத்திற்காகப் பெண்களும் வேலைக்குப் போக வேண்டிய இன்றைய சூழலில், குழந்தைகளைக் காப்பகத்தில் விடுதல் என்பது பழக்கமாகி விட்டது. தாத்தா – பாட்டி, சித்தி – சித்தப்பா, மாமா – அத்தை என்று உறவுகள் சூழ வளர வேண்டிய குழந்தைகள், கடமைக்காகப் பணியாற்றும் ஆயாக்களிடம் வளரப் பழகிக் கொண்டு விட்டனர். அது போகட்டும்! இதற்காகக் கவலைப்படுவதை விட்டுவிட்டு குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை எப்படி எல்லா தரப்பினரிடமும் வளர்ப்பது என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் நல்ல சுத்தமான சுற்றுச்சூழலில் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளக்கூடிய காப்பகத்தைக் கண்டறிவது அவசியமாகும்! முக்கியமாக, ஒன்றரை வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பக்கம் பக்கமாக அரசாங்கமும் மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் யோசிக்கவே ஆரம்பித்துள்ளனர்.

 நீங்கள் ‘டி.வி’ அல்லது ‘ஃப்ரிஜ்’ வாங்கும் போது ஒரு வாசகம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ‘திஸ் வே அப்’ என்று படம் போட்டிருப்பதோடு ‘ஹேண்டில் வித் கேர்’ என்றும் போட்டிருக்கும். ஒரு அஃறிணைப் பொருளைத் தூக்குவதற்கோ அல்லது கையாள்வதற்கோ கொடுக்கப்படும் பாதுகாப்புக் கூட ஒரு குழந்தையைத் தூக்கும்போது கொடுக்க வேண்டும் என்று நமக்கு நினைக்க நேரமில்லை!

வீட்டில் கைக்குழந்தைகள் இருந்தால் பெரியவர்கள் சொல்வார்கள், “குழந்தையின் தலை நிற்கவில்லை.. ஜாக்கிரதை! தலையைப் பிடித்துத் தூக்கு” என்று. தலை நிற்கவில்லையா என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அதை அலட்சியப்படுத்துவோம். ஆனால் அதுதான் உண்மை!

குழந்தைகளின் உடம்பு பஞ்சு போல் மென்மையாக இருக்கும். உடம்பு மட்டுமல்ல, உடம்பினுள் இருக்கும் எலும்பு முதலிய உறுப்புகளும் மிக மிக மென்மையாகவே இருக்கும். அதனால் குழந்தையை மிக மிக மிருதுவாகக் கையாள வேண்டும்.

‘குட்டிக் கடவுளாக’ எண்ணப்படும் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதை விரிவாக எடுத்துச் சொல்லப் போகிறது இந்தக் கட்டுரை.

குழந்தைகளைத் தூக்கும் முறை:

உங்கள் குழந்தைகளைப் பாசத்துடன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டு, மார்பினில் படுக்க வைத்துக் கொள்ளுங்கள். அல்லது குழந்தையைத் தோளின் மீது சாய்த்துக் கொள்ளுங்கள். நினைவிருக்கட்டும்! குழந்தையின் தலை உங்கள் தோளின் மீது பத்திரமாகப் பொருந்தியிருக்க வேண்டும் அல்லது உங்கள் கைகளையே தொட்டிலாக அமைத்துக் குழந்தையை அதில் கிடத்துங்கள். குழந்தை உங்களைப் பார்த்துச் சிரிப்பதற்கும், பேசுவதற்கும் இது துணை செய்யும்.

படத்திலிருப்பது போன்று ஒரு ‘தொங்கு தூளி’ அமைத்துக் குழந்தையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

இவை போன்ற பாதுகாப்பான முறைகளில், குழந்தையின் உடலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாதபடி குழந்தையைக் கையாளுங்கள்.

குழந்தைகளைத் தூக்கும் போது ஏன் குலுக்கக் கூடாது?

குழந்தைகள் என்ன உண்டியலா அல்லது மருந்து பாட்டிலா குலுக்குவதற்கு? அவர்கள் மிருதுவான ரோஜா இதழ் போன்றவர்கள். எனவே குழந்தைகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். குழந்தையின் தலைதான் மற்ற உறுப்புக்களை விட அளவில் பெரியது. அதனால், தலை, எவ்வித ஆதாரமும் இல்லாமல் நிற்க முடியாது. குழந்தையின் கழுத்துத் தசைகள் வலுவற்று இருக்கும் அல்லவா! அவற்றால் தலையைத் தாங்க முடியாது. பிறந்து மூன்று மாதங்களுக்கு தலை நிற்காது. இதை நீங்கள் உணர்ந்து கொள்வதோடு, குழந்தைகளைத் தூக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள்!

கொஞ்சம் அலட்சியமாக எடுத்துக்கொண்டு, குழந்தையின் தலை முன்னும் பின்னும் ஆடினால் என்ன ஆகும் தெரியுமா? குழந்தையின் இளசான இரத்தக் குழாய்கள் கிழிந்து மூளையில் இரத்தக் கசிவு ஏற்படலாம். வெளியே நமக்குத் தெரியாததால் நாம் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் இதன் மூலம் குழந்தைகள் கண்பார்வை இழத்தல், கேட்கும் திறன் இழத்தல், வலிப்பு, கற்றலில் சிரமம், மூளை செயலிழத்தல் மற்றும் சில நேரங்களில் இறப்பு போன்ற ஈடுகட்ட முடியாத இழப்புகளைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.. ஜாக்கிரதை! மேலும் சிலர் சிரிக்க வைப்பதற்காகக் குழந்தைகளை ஒரு பந்து போல தூக்கிப் போட்டு பிடிப்பதைக் பார்த்திருப்பீர்கள்! குழந்தைகளும் மகிழ்ந்து சிரிக்கும். ஆனால் இது பேராபத்தை விளைவிக்கும். எனவே, குழந்தைகள் மூன்று வயது அடையும் வரை மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

குழந்தைகளை ஏன் குலுக்குகின்றனர்?

குழந்தைகள் கட்டுக்கடங்காமல் அழுதால் அல்லது பால் குடிக்க மறுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? குழந்தையை சமாதானம் செய்வதற்காக் குழந்தையைக் குலுக்குவீர்கள். அல்லது மேலும் கீழும் ஆட்டுவீர்கள்! நீங்கள் குழந்தையின் நன்மையைக் கருதி செய்தாலும், அது மோசமான விளைவைத் தரும்! கையை மீறி அழும் குழந்தைகளைக் கோபத்தில் அடிப்பதை விட, குலுக்குவது மேல் என்று நீங்கள் நினைத்தாலும் அது உடல் ரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் வந்தாலும் பதறிப்போய் குலுக்கி விடாதீர்கள்! 

அப்படியென்றால் குழந்தை அழுதால் என்ன செய்ய வேண்டும்?


குழந்தைகள் உங்களோடு எந்த முறையில் உரையாடுகின்றன தெரியுமா? பசியோ, தூக்கமோ, வலியோ எதுவாக இருந்தாலும் குழந்தைக்குத் தெரிந்த ஒரே மொழி அழுகைதான். எனவே குழந்தை அழுகிறது என்று கவலைப்பட வேண்டாம். மேலே கூறிய காரணங்களாக இருக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் பூர்த்தி செய்த பின்னரும், குழந்தை இடைவிடாமல் அழுதால் நீங்கள் இவற்றை முயற்சித்துப் பாருங்கள்:

1. பாசத்துடன் அணைத்துக் கொள்ளுங்கள்.

2. தொட்டிலில் இட்டு மென்மையாக ஆட்டுங்கள்.

3. இனிமையான குரலாக இருந்தால் பாடுங்கள்! அல்லது இசையை இசைக்க விடுங்கள்.

4. குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு இங்கும் அங்கும் நடந்து செல்லுங்கள்.

5. இப்போதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லையா? உடனடியாக டாக்டரை அணுகுங்கள்.

நீங்கள் ரிலாக்ஸ் செய்ய:

குழந்தையின் ஓயாத அழுகை உங்களை ‘மூட் அவுட்’ ஆக்கி விட்டதா…? உங்களை ரிலாக்ஸ் செய்ய சில ‘டிப்ஸ்’:

மூச்சை நீளமாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியே விடுங்கள். பின்னர் குழந்தையைப் பாதுகாப்பான இடத்தில் கிடத்தி விட்டு, அடுத்த அறைக்குச் சென்று ஒரு ‘கப்’ காபியுடன் அமர்ந்து ‘டி.வி’யைப் பாருங்கள். அல்லது ‘ரேடியோ’ கேளுங்கள். மனம் கொஞ்சம் அமைதியான பின் குழந்தையிடம் செல்லுங்கள்.

குழந்தையைக் கொஞ்ச நேரம் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பார்த்துக் கொள்ள விடுங்கள்.எப்போதும் குழந்தையிடம் கோபப்படாதீர்கள். உங்கள் கோபம் குழந்தையின் அழுகையை அதிகப்படுத்தும்.

குழந்தைகள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்! குழந்தைகள் நன்றாக விவரம் தெரிந்து, தம் தேவைகளை உணரும் வயது வரை, அவர்களைக் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது, இக்கால அம்மாக்களுக்கு மட்டுமல்ல, பேபி சிட்டர்களுக்கும் முதன்மையான கடமையாகும்!

Disclaimer : The images in this article are collected from various resource on the web. If there is any copyright violation, please inform the administration. Corrective actions will be taken.

About The Author

4 Comments

  1. ஆதி

    உங்களின் ஆலோசனை மிகவும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று.
    மேலும் நிறைய டிப் கொடுங்கள்.

Comments are closed.