பந்தல்கால்கள் (4)

பரக்கத்நிஸா, பையன்களும், பெண்களுமாய் ஒரு கூட்டத்தைத் திரட்டி வந்தாள். வரிசை போல ஒவ்வொருவரையும் நிற்க வைத்து, காக்கா – கொழுந்தனுக்கு அறிமுகம் செய்தாள். வரிசையில் நின்ற அத்தனை பேருமே பரக்கப் பரக்க முழித்துக் கொண்டு, தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பார்த்து, பயந்த சிரிப்பாய்த் தெவுங்கி நின்றார்கள். பரக்கத் நிஸாவின்பேரன் – பேத்திகள் முதலாகத் தங்கைப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதரர் பிள்ளைகள் என நின்றிருந்தார்கள். மனசுக்குள்ளே கிடக்கும் எதிரே உட்கார்ந்துள்ள ஜரீனா பீவியின் பெயர் மட்டும் இன்னும் நினைவில் தட்டுபபடவில்லை. பாதாளக் கிணற்றுக்குள் கிடக்கும் வாளியைத் தேடித் தேடி இழுத்தும், கொண்டிக்குள் மாட்டி இழுபடாததைப் போல, அவள் பெயர் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டுப்பட்டு நழுவியது ஹக்கீமுக்கு.

அறிமுகம் முடிந்ததும் பிள்ளைகள் விட்டாப் போதும் என்று பறந்தோடின. அபுல்ஹஸன் இருக்குமிடம் நோக்கி ஜரீனா பீவி கேட்டாள், "நீங்க தங்கச்சி மாப்பிள்ளதான, உங்க கல்யாணத்துக்கு வந்திருக்கேன். என்னைத் தெரியுதா?"

"ஞாபகமே இல்ல. பாத்த உணர்வு கூட வரமாட்டேங்குது!"

"அது சரி அப்போ பெண்டாட்டி மயக்கத்துலதான இருந்திருப்பீங்க. எங்கள பாத்தா ஞாபகம் வைப்பீங்க?"

உடனே அபுல்ஹஸன் கேட்டான், "உங்க பேரு என்ன மச்சி?"

"ஜரீனா" அந்த நொடியில் தான் ஹக்கீம் மச்சானின் நெஞ்சிலும் அவள் பெயர் சிக்கிக் கொண்டது. அவள் வாயின் ஒலி கிளம்பும்போதே அவள் பெயரின் எழுத்துக்கள் ஒருங்கு கூடிவிட்டன.

நிக்காஹ் நேரம் நெருங்கி இருந்தது. அவர்கள் நால்வரும் எழுந்தார்கள். பெரியார் திருமண மண்டபம் பலவகைப் பிரிவுகளாக மேலும் கீழுமாய், அங்கேயும் இங்கேயுமாய் பிரிந்திருக்க அவர்கள் நிக்காஹ் நிகழவிருக்கும் மைய மண்டபத்தை நோக்கி மெல்ல மெல்லச் சென்றார்கள். இரண்டு திருமணங்களுக்குமான கூட்டம் மண்டபத்தையே நெருக்கியிருந்தது. உள்ளே நுழைய வழியில்லை. அதற்காக அவர்கள் மெனக்கிடவும் இல்லை.

ஜபருல்லாவின் கையைப் பற்றி ஒருவர் வழிமறித்தார். அவர் தாஹீர். இருவரும் பரஸ்பரம் உரையாடியபோது, அபுல்ஹஸனை மேலும் கீழுமாகப் பார்த்த தாஹீர், "இவங்க யாரு?" என்று ஜபருல்லாவிடம் கேட்டார் "இவரு நம்ம தங்கச்சி மாப்பிள்ளை!" எனவும், "ஓ! மச்சானாச்சே!" என்று வியந்த விரிவடைந்த விழிகளால் மகிழ்ச்சிப் பரவசமாகி அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். "இது எங்க முக்தார் சின்னாப்பா மவன்" என்று தெளிவுபடுத்தினான் ஜாபர்.

முக்தார் சின்னாப்பா? ஆம். அப்படி ஒருவர் இருந்து, இறந்தார். ஆனால் ஒருமுறையும் நேர்முகமாய்ப் பார்த்தறியவில்லை. ஏதோ மனவருத்தம். அடர்ந்த வனத்திற்குள் கிடந்த புதர்போல அறியவொண்ணாத வருத்தம். ஒட்டுதல் இல்லாமலே இருபது வருடங்களாக விலகி இருந்து விட்டாராம். ஏதோ ஒரு மழைக்காலத்தில் திடும்மென்று ஊர்ப்பக்கமாய் வந்த அவர், ஒரு மின்னல் வெட்டிய பொழுதில் அபுல்ஹஸன் வீட்டுக்கு வந்ததாகவும் – அது அவன் வெளியே போயிருந்த நேரம் – கைக்குழந்தையின் கையில் ஒரு ஐம்பது ரூபாயைத் திணித்துவிட்டு, பொதுவான நலம் விசாரித்தவராய், மறு மின்னல் வருவதற்குள் அவர் விரைந்து போய்விட்டதாகவும், அபுல்ஹஸனின் மனைவி ஒரு முறை அவனிடம் சொல்லியிருந்ததை இப்போது ஞாபகம் செய்து கொண்டான். அதை விடவும் ஒரு மனிதரைப் பற்றி நினைத்துப் பார்க்க அல்லது சொல்ல, எவ்வித ஞாபக சுவடுகளும் மீதப்படவில்லை என்பதையும் இந்த நேரத்தில் அவன் அதிகமாய் யோசித்தான். தாஹிர் அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினார். இவருடனான இந்த ஒரு கைப்பரிச்சயம்தான் தாஹிரையும் நினைவு கொள்ள வேண்டிய ஒற்றைத்துளி அம்சம் என்று நீண்டு விடலாம் என எண்ணினான் அபுல்ஹஸன்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author