பயணம்

பாதை எதுவெனத் தெரியாதாயினும்
தொடருமென் பயணம்
முடிவிலி நோக்கி….

மனம் மட்டும்
போன காலத்தின் பின்னாலும்
வருங்காலத்தின் முன்னாலும்
போய்த் திரும்பும் நிமிடத்தில்
களைப்பின்றி….

ஒரு வெயில் கால
நடைப் பயணத்தில்
நிழலாய்த் தொடரும் கிழ நாயொன்று
சற்றே தொடர்ந்துவிட்டுத்
திரும்பிப் போனது
மனம் அதன் பின்னாலும் போய் வந்தது

பிசாசுகள் அலைவதாய் சொல்லப்பட்ட
ஒரு நடுநிசியில் வாய்த்த பயணத்தில்
நான் மின்மினிகளோடு அலைந்தேன்….
அது நான் எப்போதோ செய்த கடல் பயணத்தில்
அலைகளாய் ஆடிய மனதை ஒத்திருந்தது

எல்லா இரயில் பயணங்களும்
அரசியலோ பொதுநலமோ
பேசியபடியே முடிகிறது

கொஞ்சம் பயமாகவும்
பஞ்சுப் பொதிக்குள்
தலை செருகி அதன்
ஈரமுணர முயற்சிப்பதாகவே
அமைகிறது இறங்கும் வரை
விமானப்பயணங்கள்…

பாதைகளோடு நடப்பதில்
பயணம் இனிப்பதில்லை
தெரியா இடம்
இல்லா பாதை
போய் வந்தால்
சொல்வதற்கான அனுபவங்கள்

திரும்பவே முடியா பயணமொன்று
அமையலாம் பாதைகளும்
போகுமிடமும் தெரியாததாயிருக்கக்கூடுமது…
தனியாகவே போயாகவேண்டும்
அவ்வனுபவம் சொல்ல
வரவும் கூடும் நான்….
அதுவரை
கொஞ்சம் நடக்கலாம் வாங்க….

About The Author