பாஞ்சாலி சபதம் (3)

சகுனியும் துரியோதனனும் திரிதராஷ்டிரனிடம்..

சகுனியிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான் துரியோதனன். "தீச்செயல், நற்செயல் ஏதேனும் ஒன்று செய்து, அவர்கள் செல்வம் கவர்ந்து அவர்களை நடுத் தெருவில் விட வேண்டும்" என்ற தன் உள்ளக்கிடக்கையைச் சொல்லி, அதற்கான உபாயம் சொல்லுமாறு வேண்டுகிறான்.

"அட, இதுக்கா அலட்டிக்கிறே! இது ஒன்றும் பிரமாதமில்லே!" என்று சொல்லி, உபாயம் சொல்கிறான் மாமன் சகுனி. போர் புரிவோம் என்றால் அதில் வெற்றி தோல்வி யாருக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சூதுக்கு அழைத்து அவர்களை வஞ்சகமாக வென்று செல்வம் அத்தனையும் கவர்ந்து விடலாம் என்பது சகுனியின் திட்டம். ஆனால் இதற்குத் தந்தை திரிதராஷ்டிரனின் சம்மதம் தேவை.

இன்றைய வணிக விற்பன்னர்களுக்கு இணையான பேச்சுத் திறம் பெற்றவன் சகுனி. இவர்கள்தான் எஸ்கிமோக்களிடம் கூட குளிர் பதனப் பெட்டி விற்று விடும் வல்லமை படைத்தவர்களாயிற்றே!

எப்படி அணுகுகிறான் சகுனி, பார்ப்போம்!

துரியோதனனைத் தந்தையிடம் அழைத்துச் சென்று நிறுத்துகிறான்.

"மைத்துனரே! கேட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் பிள்ளை,

"உண்ப சுவையின்றி உண்கின்றான்-பின்
உடுப்பது இகழ உடுக்கின்றான்-பழ
நண்பர்களோடு உறவு எய்திடான்-இள
நாரியரைச் சிந்தை செய்திடான்-பிள்ளை
கண் பசலை கொண்டு போயினான்-"

திரதராஷ்டிரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு என்ன குறை? எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. நினைத்த பொருள்கள் எல்லாம் கிடைப்பதற்கு எதுவும் தடை இல்லை. அற்புதமான ஆடைகள்; அமுதை ஒத்த உணவு!

துரியோதனனின் மனத்தில் வீசிக் கொண்டிருந்த மவுனப் புயல் அவனுக்குத் தெரியவில்லை. தொடர்கிறான்:" இத்தனைக்கும் மேலாக இன்னும் அப்பாண்டவச் சகோதரர் உனக்குக் கிடைத்திருக்கிறார்களே!" என்கிறான்.

அதுதானே பிரச்சினை? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது துரியோதனனுக்கு. சினந்து வெறியோடு பேசுகிறான். அவனைக் கொஞ்சம் அடக்கி விட்டு, சகுனி தொடர்கிறான்:-

"பாண்டவர்செல்வம் விழைகின்றான்-புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்-மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் –உங்கள்
நேமி செலும் புகழ் கேட்கின்றான்-குலம்
பூண்ட பெருமை கெடாதவாறு-எண்ணிப்
பொங்குகின்றான்; நலம் வேட்கின்றான்-மைந்தன்
ஆண் தகைக்கு இஃது தகும் அன்றோ?-இல்லை
யாம் எனில் வையம் நகும் அன்றோ?"

திரிதராஷ்டிரனுக்கு சகுனியின் மீதுதான் கோபம் வருகிறது."அட, பிள்ளையை நாசம் புரியவே, ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய்!" என்று கடிகிறான். "சகோதரர்களுக்குள்ளே பகை கொள்ளலாமா? பிள்ளைப் பருவத்திலிருந்தே இவன் அவர்களுக்குப் பல தீங்குகள் செய்திருந்தும், அவர்கள் இவன் மீது பகை பாராட்டியது உண்டா? தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்?"

மேலும் சொல்கிறான்:-

"மயல்
அப்பி விழி தடுமாறியே-இவன்
அங்கும் இங்கும் விழுந்து ஆடல் கண்டு-அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித்-திடில்
தோஷம் இதில் மிக வந்ததோ?"

"தவறி விழுபவர் தன்னையே-பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ?"

"கண்ணனுக்கு உபசாரங்கள் செய்தார்கள் என்கிறாய். பின் அண்ணன் தம்பி ஒருவருக்கு ஒருவரா உபசாரம் செய்து கொள்வார்கள்?"

திரிதராஷ்டிரன் இப்படிப் பேசவும் துரியோதனனுக்குக் கோபம் சுருக்கென்று தலைக்கேறுகிறது. அவன் பேசுவதில் சிலவற்றை பாரதியின் கவிதை வரிகளிலேயே கேட்போம்:-

"பாம்பைக் கொடி என்று உயர்த்தவன்-அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்-அட!
தாம் பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை- மிக்க
சருக்கரை பாண்டவர்-அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கிறான்- திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான்.

மாதர்தம் இன்பம் எனக்கு என்றான்-புவி
மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான்-நல்ல
சாதமும் நெய்யும் எனக்கு என்றான்-எங்கும்
சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் –அட!
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல்-வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ?-உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை
சொல்ல இனி இடம் ஏதையா?"

"முடிவாக ஒன்று சொல்கிறேன். நமக்குத் தீங்கு வராமல் வெற்றி பெறுவதற்கு வழி ஒன்று உண்டு. சூதுக்கு அவர்களை அழைத்து அதில் தோற்க வைத்து விடலாம். இதற்குத் தடை எதுவும் சொல்லாமல் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்"

திரிதராஷ்டிரன் என்ன செய்கிறான் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

About The Author