பாஞ்சாலி சபதம் (5)

கலி மகிழ்ந்தான்!

துரியோதனன் சபை. சகுனி யுதிஷ்டிரனைச் சூதுக்கு அழைக்கிறான். யுதிஷ்டிரன், ”உன் மனத்தில் வன்மம் இருக்கிறது. எங்கள் வாழ்வைக் கெடுக்க நினைக்கிறாய். சூதினால் எங்களைக் கவிழ்க்கப் பார்க்கிறாய்” என்று சொல்லிச் சூதாட வர மறுக்கிறான். கலகல என்று நகைக்கிறான், சகுனி. ”நீ ஒரு பிசுனாரி என்பது எனக்குத் தெரியாமல் போச்சுப்பா! இவ்வளவு பெரிய மண்டபத்தில் பட்டப் பகலில், இவ்வளவு பேர் கூடி இருக்க, உன் சொத்தை அபகரித்து விடுவேன் என்று எப்படி நினைக்கிறாய்?”

”பாரத மண்டலத்தார்-தங்கள்
பதிஒரு பிசுனன் என்று அறிவேனோ?
சோரம் இங்கு இதிலுண்டோ? – தொழில்
சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ?
மாரத வீரர் முன்னே – நடு
மண்டபத்தே;பட்டப்பகலினிலே
சூர சிகாமணியே – நின்றன்
சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ?”

இப்படிச் சொல்லி எள்ளி நகையாடுகிறான்.

செல்வம், பெருமை இவற்றைக் காப்பதற்காக சூதுக்கு வர நான் மறுக்கவில்லை. ஓதலாலும், உணர்த்துதலாலும், உண்மை சான்ற கலைத்தொகை யாவும் சாதல் இன்றி நான் அரசாண்டு வருகிறேன். எனக்கு இடர் செய்பவர் என்று நான் கருதுவது, என் செல்வத்தினை வஞ்சனையால் கொள்பவர் அல்லர், ஆனால், நான்மறை நெறியைக் கொல்பவர்கள், கலைத் தொகை மாய்ப்பார், என் உயிர்ப் பாரத நாட்டுக்கு பீடை செய்யும் கலியை அழைப்பாரே எனக்கு இடர் செய்பவர்கள். இந்த தீய சிந்தனையை விட்டு விடு”என்று இறைஞ்சிக் கேட்கிறான்.

பல விதங்களில் வஞ்சகமாகப் பேசி யுதிஷ்டிரனைச் சூதுக்கு இணங்க வைத்து விடுகிறான் சகுனி.

“ மாயச் சூதினுக்கே – ஐயன்
மனம் இணங்கி விட்டான்;
தாயம் உருட்டலானார் – அங்கே
சகுனி ஆர்ப்பரித்தான்!
நேயமுற்ற விதுரன் போலே
நெறி உளோர்கள் எல்லாம்
வாயை மூடி விட்டார் – தங்கள்
மதி மயங்கி விட்டார்”

இப்போது சகுனிக்காகப் பந்தயப் பணம் துரியோதனன் வைக்கிறான். “ஒருவன் ஆடப் பணயம் இன்னொருவன் வைப்பது எப்படி சரியாகும்?” என்று யுதிஷ்டிரன் கேட்ட கேள்விக்கு, ”மாமன் ஆடப் பணயம் மருகன் வைக்கொணாதோ? இதில் வந்த குற்றமேதோ?” என்று ஒரே அடியாக அடித்து விட்டான் துரியோதனன்.

ஒவ்வொரு உடைமையாகப் பணயம் வைக்கிறான் தருமன். ஒவ்வொன்றையும் இழக்கிறான்.

”மாடிழந்து விட்டான்; – தருமன்
மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான்; – தருமன்
ஆளிழந்து விட்டான்!

பீடிழந்த சகுனி – அங்குப்
பின்னும் சொல்லுகின்றான்;
நாடிழக்கவில்லை, – தருமா!
நாட்டை வைத்திடென்றான்!

இந்தத் தருணத்தில் விதுரன் துரியோதனனுக்கு நல்ல புத்தி சொல்ல விழைகின்றான்.

“தம்பி மக்கள் பொருள் வெகுவாயோ
சாதற்கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ?
நாதன் என்றுனைக் கொண்டவரன்றோ?”

சினந்து சீறுகிறான் துரியோதனன். சிற்றப்பன் என்றும் பாராமல் அவமதித்துப் பேசுகிறான்.

“நன்றி கெட்ட விதுரா! – சிறிதும்
நாணமற்ற விதுரா!
தின்ற உப்பினுக்கே – நாசம்
தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும் – எங்கள்
அழிவை நாடுகின்றாய்!
மன்றில் உன்னை வைத்தான் எந்தை
மதியை என் உரைப்பேன்!

ஐவருக்கு நெஞ்சும் – எங்கள்
அரமனைக்கு வயிறும்
தெய்வம் அன்று உனக்கே – விதுரா!
செய்து விட்டதேயோ?”

“விதி வழி தெரியும். என்றாலும் வெள்ளை மனம் படைத்ததனால் சொல்ல வந்தேன்! சரி, சரி, இங்கு பேசிப் பயன் இல்லை என்று உன் புத்திப்படி நடந்து கொள்” என்று சொல்லி விதுரன், வாய் மூடி, தலை குனிந்து, இடத்தில் அமர்ந்தான்.

“பதிவு றுவோம் புவியில் எனக் கலி மகிழ்ந்தான்!
பாரதப் போர் வரும் என்று தேவர் ஆர்த்தார்!”

(தொடரும்)

About The Author