பாஞ்சாலி சபதம் (7)

பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

"இதென்னடா வல்லடி வழக்காய் இருக்கிறது?" என்று யோசிக்கிறான் துரியோதனன். "அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வந்து இங்கு நிற்கிறாய்; பிள்ளைகள் போலக் கதைகள் பேசுகிறாய்!" என்று தேர்ப்பாகனைக் கடிந்து கொண்டு விட்டுத் தொடர்கிறான். "எல்லாக் கேள்வியையும் கேட்கட்டும்; சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லட்டும்; சம்மன் அனுப்பி ஆகி விட்டது; கோர்ட்டில் ஆஜர் ஆகிப் பேசிக் கொள்ளட்டும்!" என்ற தோரணையில் பேசுகிறான்.

"வேண்டிய கேள்விகள் கேட்கலாம்-சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம்-மன்னர்
நீண்ட பெரும் சபைதன்னிலே-அவள்
நேரிடவே வந்த பின்புதான் –சிறு
கூண்டிற் பறவையும் அல்லளே?-ஐவர்
கூட்டு மனைவிக்கு நாணமேன்?-சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்குமுன் -அந்த
மொய்குழலாளை இங்கு இட்டு வா!".

"அவளை அழைச்சிட்டு வரலைனா உன்னைச் சின்னாபின்னமா ஆக்கிடுவேன்" என்கிறான்.

மீண்டும் போகிறான் தேர்ப்பாகன். திரெளபதி தன் கட்சியைச் சொல்லி வாதிடுகிறாள்.

"நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத்
தாயத்திலே விலைப் பட்டபின் என்ன
சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்?"

"அவரே அடிமை. அவர் மற்றொருவரைப் பணயம் வைக்க என்ன உரிமை இருக்கிறது? அவருக்கு மனைவி கிடையாது. என்னைப் பொறுத்த வரையில் என் நிலை நான் துருபதன் மன்னன் மகள் என்பதுதான்!"

"அடேங்கப்பா! இவள் கேட்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாவிட்டால் நான் மறுபடியும் இவள் கிட்ட வந்து மாட்டிக்க மாட்டேம்ப்பா! அவன் என்னைக் கொன்றே போட்டாலும் போடட்டும்!" என்று எண்ணியபடி, மீண்டும் சபைக்குச் சென்று நடந்ததைக் கூறுகிறான் தேர்ப்பாகன்.

"எத்தனை தடவை சென்று கேட்டாலும் அவள் இதையேதான் சொல்லுவாள்! நீங்க சொல்றதைப் போய்ச் சொல்லறேன்; அவள் வரல்லைனா நான் என்ன செய்வேன்?" என்கிறான்.

துரியோதனன், தம்பி துச்சாதனனைஅனுப்பி வைக்கிறான். துச்சாதனன் எப்படிப் பட்டவன்? "தீமையில் அண்ணனை வென்றவன்; கல்வி எள்ளளவேனும் இல்லாதவன்; கள்ளும், ஈரக் கறியும் விரும்புவோன்; புத்தி விவேகம் இல்லாதவன்; அண்ணன் எது சொல்லினும் மறுக்கிலான்."

இவன் திரெளபதியிடம் சென்று, தீமொழிகள் பேசி அவளை அழைக்கிறான். அவள் சொல்கிறாள்:

"கேள்! மாதவிலக்காதலால் ஓராடைதன்னில் இருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபை முன் என்னை அழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே, சோதரர் தம் தேவியினைச் சூதில் வசமாக்கி, ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல் மன்னர் குலத்து மரபோ? அண்ணன்பால் என் நிலைமை கூறிடுவாய்; ஏகுக!" என்கிறாள். எதுவும் கொடியவன் செவியில் ஏறவில்லை. கக்கக்க.. என்று கனைத்து அருகில் வந்து பாஞ்சாலி கூந்தலினைக் கையினால் பற்றிக் தர தர என்று இழுக்கிறான்.

"தாய் பிறன் கைபடச் சகிப்பவனாகி வாழும் வாழ்க்கை நாய்ப் பிழைப்பு" என்று சத்ரபதி சிவாஜியாக முழங்கிய பாரதி, வழி நெடுக இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்த மக்களைப் பார்த்துக் காறி உமிழ்கிறான். சுதந்திரப் போரைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தங்கள் குடும்பம் தங்கள் வேலை என்று இருந்தவர்களுக்கு சூடு கொடுக்கிறான் போலும்!

"ஊர்மக்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து, தரையில் கிடத்திவிட்டு, இந்த தங்கமான பெண்ணை அவள் அந்தப்புரத்தில் சேர்த்திருக்க வேண்டாமா? வீரமில்லா நாய்கள்!" அவர்கள், "என்ன கொடுமை இது?" என்று தங்களுக்குள் பேசியபடி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். நெட்டை மரங்கள் என நின்று புலம்பினர். "பெட்டைப் புலம்பலினால் பிறருக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா?" என்று சவுக்கடி கொடுக்கிறான் பாரதி.

துரியோதனன் சபையில் இழுத்து வந்து நிறுத்தப்படுகிறாள் பாஞ்சாலி. அதன் பின் நடந்தது என்ன?

அடுத்த வாரம் பார்ப்போம்.

About The Author