பாஞ்சாலி சபதம்-9

எரிதழல் கொண்டு வா!

பெண்ணடிமைத்தனம் இடைக்காலத்தில் தோன்றிய வழக்கே தவிர, வேத நெறிப்படியானது இல்லை என்பதைப் பாரதி பதிவு செய்து விட்டான். கற்றுணர்ந்த பெரியவர்களும் தீமை நடக்கும்போது கையைப் பிசைந்து கொண்டு தீங்கு தடுக்கும் திறம் இல்லை என்று புலம்புவதையும் காட்டுகிறான். ஆட்சியாளர்களின் மனப்போக்குக்கு ஏற்பவே சட்டங்களும் நீதி சொல்பவரும் வளைந்து கொடுக்கிறார்கள் என்ற அவலத்தையும் சுட்டிக் காட்டி விட்டான்.

இந்த நெருக்கடி தருணம் வரை, சரியோ தவறோ, அண்ணன் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொண்டிருந்த பீமன் இப்போது முடிவுகளுக்கு தான் சம்பந்தப்படாதது போலப் பேசுகிறான். Blame Game. பழி சுமத்தும் விளையாட்டு.

"சூதர் மனைகளிலே-அண்ணே!
தொண்டு மகளிர் உண்டு,
சூதிற் பணயம் என்றே-அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.
ஏது கருதி வைத்தாய்?-அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்?
மாதர் குல விள்க்கை-அன்பே
வாய்ந்த வடிவழகை

…….

சக்கரவர்த்தி என்றே-மேலாம்
த்ன்மை படைத்திருந்தோம்;
பொக்கென ஓர் கணத்தே-எல்லாம்
போகத் தொலைத்து விட்டாய்!
நாட்டை எல்லாம் தொலைத்தாய்-அண்ணே!
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமை அடிமை-செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்!
துருபதன் மகளைத்-திட்டத்
துய்மன் உடன்பிறப்பை,
இரு பகடை என்றாய்-ஐயோ!
இவர்க்கடிமை என்றாய்!
இது பொறுப்பதில்லை-தம்பி!
எரி தழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான்- அண்ணன்
கையை எரித்திடுவோம்!"

ஒரு வேளை தருமன் பாஞ்சாலியை வைத்து வென்று, தோற்றது அனைத்தையும் மீட்டிருந்தால், பீமனுக்கு இந்த தர்ம ஆவேசம் வந்திருக்குமா என்று நினைக்கத் தோன்றுகிறது! தேர்தலில் கட்சி வென்றால் அவரவர் தன்னால்தான் என்று பெருமை பீற்றிக்கொள்வது, தோல்வி ஏற்பட்டால், ஒருவன் தலையைப் போட்டு உருட்டுவது என்பதற்கான அடிப்படை மனோபாவம் அன்று தொட்டு இருந்திருக்கிறது!

அருச்சுனன் சமாதானப்படுத்துகிறான். "கோபத்தினால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாய். யார் முன்னால் இப்படிப் பேசுகிறோம் என்று யோசித்தாயா?" என்று சொல்லி விட்டு தொடர்கிறான். "எல்லாம் நல்லதுக்குத்தான்" என்ற ரீதியில்.

விதி உலகத்துக்கு நம்மால் ஒரு பாடம் புகட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியை அமைத்திருக்கிறான்!

"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்"எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்.

தொடர்கிறான்:

‘கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்.காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனு உண்டு காண்டீவம் அதன் பேர்’ என்றான்.

சபையில் நிகழும் அநீதி பொறுக்காமல் விகர்ணன் எழுகிறான். "பாஞ்சாலி கேட்பது நியாயம்தானே?" என்கிறான். கூடி இருந்த மன்னர்களிடம், "இது தகுமா?" என்று முறையிடுகிறான். அவையில் ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுகிறது.

"இது அடுக்காது. உலகு இந்தக் கொடுமையை மறக்காது. போர்க்களத்தில்தான் இந்தப் பழி தீரப்போகிறது" என்று சில மன்னர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

சபையை அலட்சியம் செய்து, விகர்ணனுக்கு தனக்கே உரிய முறையில் பதில் கொடுத்து விட்டு பணியாளை அழைத்து பாஞ்சாலியின் உடையைக் களைய உத்தரவிடுகிறான் துரியோதனன்.

இறுதியில் நடந்தது என்ன..? அடுத்த வாரம் முடித்து விடுவோம்.

About The Author