பாடல் ரசிக்க வாரியளா? (2)

பெருவாயின் முள்ளியார் என்ற புலவர் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது ஆசாரக் கோவை. இதில் நூறு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் பல நூற்றுக்கணக்கான அறிவுரைகள் உள்ளன. இவற்றில் பல இந்தக் காலத்திற்கும் பொருத்தமானவை. இந்தக் கால சுய முன்னேற்ற நூல்களிலும் இது போன்ற அறிவுரைகளைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஆசாரக்கோவையிலிருந்து சில பாடல்களை இந்த வாரம் பார்க்கலாமா?

நன்றி யறிதல் பொறையுடமை இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.

நன்றியுணர்வு, பொறுமை, இனிய பேச்சு, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமை, கல்வி, எல்லோருடனும் இணக்கம், அறிவாற்றல், நல்லவர்களை விரும்புதல் ஆகிய எட்டு நல்ல குணங்களும் ஒழுக்கத்தின் விதைகள் என்பது இதன் பொருள்.

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

முந்தைய பாடலில் சொல்லப்பட்ட எட்டு நற்பண்புகளையும் கடைப்பிடித்தால் நீண்ட வாழ்வு, செல்வம், அழகு, நிலம், சொல்லாற்றல், கல்வி, நோயற்ற வாழ்க்கை, நல்ல மக்கட் பேறு ஆகியவை கிடைப்பது உறுதி என்கிறது இந்த இரண்டாம் பாடல்.

நல்ல வாழ்க்கை முறையை, பண்புகளைச் சொல்லித் தரும் இன்னொரு பாடலையும் ரசிப்போமா?

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை என்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத் – தங்கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.

எறும்பின் உணவு தேடும் சுறுசுறுப்பு, தூக்கணாம் குருவி போல வீடு கட்டும் திறமை, காக்கையைப் போல் பகிர்ந்துண்ணும் பண்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எல்லாக் காரியமும் கைகூடும் என்பது இப்பாடல் கூறும் அறிவுரை.

இப்படி நூறு பாடல்கள் ஆசாரக்கோவையில் உள்ளன.

அடுத்த வாரம் மீண்டும் சில பழைய பாடல்களுடன் சந்திப்போமா?

(மூலம்: ஆசாரக்கோவை பாடல்கள். நன்றி: திரு.ஆர்.நடராஜன் அவர்களுடைய விளக்க நூல்).

–அடுத்த வாரம்.

About The Author