பாதாள லோகத்தில் மாயசீலன் – 5

மாயசீலனும் தன் நண்பர்கள் பிறரும் வேட்டையாடச் சென்றதும், மலைச்சாமி சமையல் செய்துவிட்டுப் படுத்தான். அப்பொழுது திடீரென்று குடிசைக் கதவு தட்டப்பட்டது.
"சீக்கிரம் கதவைத் திற!" என்று வெளியிலிருந்து உத்தரவு பிறந்தது.

குரல் தன் நண்பர்களுடையது இல்லை என்று புரிந்துகொண்ட மலைச்சாமி, "யார் நீ? எதற்காக இவ்வளவு அதிகாரமாய்க் கதவைத் திறக்கச் சொல்கிறாய்?" என்று கேட்டான்.
அப்போது கதவு திறந்தது. "என்னை உள்ளே தூக்கிச் செல்" என்று மீண்டும் அதே குரல் உத்தரவிட்டது.

கண்மூடிப் படுத்திருந்த மலைச்சாமி, கதவு திறக்கப்பட்டதை அறியாமல், "நீ என் எஜமானன் அல்ல. உத்தரவு போடாதே!" என்றான். அப்போது, அதுவரை மலைச்சாமி பார்த்திராத சித்திரக்குள்ளனாகிய குறளிக் கிழவன் ஒருவன் குடிசைக்குள் ஏறி வந்தான். அவனுடைய தாடி ஐந்து அடி நீளத்துக்கு அவன் பின்னால் தரையில் புரண்டது. குறளிக் கிழவன், மலைச்சாமியின் முடியைப் பிடித்து உயரத் தூக்கி ஆணியிலே அவனைத் தொங்கவிட்டான். பிறகு, நான்கு பேருக்கும் சேர்த்துச் சமைத்து வைத்திருந்த அவ்வளவு சாப்பாட்டையும் சாப்பிட்டு, பானங்கள் யாவற்றையும் குடித்து முடித்தான். போதாதென்று, போகும்பொழுது அந்தக் கிழவன், மலைச்சாமியின் முதுகிலிருந்து நீளமாய்த் தோலையும் உரித்தெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

ஆணியில் தொங்கிய மலைச்சாமி, நெடுநேரம் துடித்துத் தன் முடியில் ஒரு பிடியை இழந்து கடைசியில் தன்னை விடுவித்துக் கொண்டான். உடனே, அவசர அவசரமாய் மீண்டும் ஒரு தரம் சாப்பாடு தயாரிக்க முற்பட்டான். அவன் வேலை செய்து கொண்டிருக்கையில் நண்பர்கள் திரும்பி வந்தனர்.

"இன்னுமா நீ சாப்பாடு தயாரிக்கவில்லை!" என்று அவர்கள் வியப்புடன் கேட்டனர்.

"சற்றுக் கண்ணயரலாமென்று படுத்தேன். வேலையை மறந்து தூங்கிவிட்டேன்" என்று மலைச்சாமி இளித்தான். பின்னர், எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டனர்.
அடுத்த நாள், பச்சையப்பனைச் சமைக்கச் சொல்லிவிட்டு, மற்ற மூவரும் வேட்டையாடச் சென்றனர். பச்சையப்பனும் அதற்கு முன் நாள் வேட்டையாடி வந்த முயல் கறியைச் சுவைபடச் செய்து வைத்தான். பிறகு, அசதி தீரப் படுத்துக் கொண்டான். திடுமென அப்பொழுது கதவு தட்டப்பட்டது.

"கதவைத் திற!" என்று வெளியிலிருந்து உத்தரவு வந்தது. பச்சையப்பன், "நான் என்ன உன் வேலையாளா, நீ சொன்ன உடனே வந்து கதவைத் திறக்க? முதலில் நீ யார்? அதைச் சொல்" என்றான்.

"என்னை உள்ளே தூக்கிச் செல்" என்று மீண்டும் அந்தக் குரல் ஆணையிட்டது. பச்சையப்பன் எரிச்சலடைந்தான்.

"அட, எவனடா அவன், தூங்கும்பொழுது வந்து விளையாடுவது?! போ பேசாமல்" என்றான் பச்சையப்பன்.

அப்போது குடிசைக் கதவைத் திறந்து கொண்டு, முன்நாள் வந்த அதே குறளிக்கிழவன் குடிசைக்குள் ஏறி வந்தான். வந்தவுடனே, தூங்கிக் கொண்டிருந்த பச்சையப்பனின் முடியைப் பிடித்து உயரத் தூக்கி ஆணியில் மாட்டினான். பிறகு, முன்நாள் செய்தது போலவே அங்கு இருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டு, பானங்களையும் குடித்துத் தீர்த்தான். கடைசியில் அந்தக் கிழவன், பச்சையப்பன் முதுகிலிருந்தும் நீளமாய்த் தோலை உரித்துக் கொண்டு புறப்பட்டான். அதுவரை பச்சையப்பன் தன் சக்தி, புத்தி எதையும் பயன்படுத்த முடியாமல் திறனற்று இருந்தான். அந்தக் கிழவன் ஏதோ மாய வித்தை தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.

நீரிலிருந்து தரையில் விழுந்த மீனைப் போல் திண்டாடித் திக்குமுக்காடினான். நெடுநேரம் துடித்தான். கடைசியில், ஒருவாறு ஆணியிலிருந்து தன் முடியை விடுவித்துக் கொண்டு தரையிலே விழுந்தான். பிறகு, மீண்டும் ஒரு தரம் அவசரமாய்ச் சாப்பாடு தயாரிக்க முற்பட்டான்.
வேட்டையாடி முடித்துத் திரும்பிய அவன் நண்பர்கள் வியப்புற்று, "இன்னுமா நீ சாப்பாடு செய்கிறாய்?" என்று கேட்டனர்.

"இல்லை… தாமதமாகச் செய்யத் தொடங்கினால், நீங்கள் வந்தவுடன் சுடச் சுடச் சாப்பிடலாம் இல்லையா? அதற்காகத்தான்" என்று சமாளித்தான் பச்சையப்பன். மலைச்சாமிக்கு மட்டும், என்ன நடந்திருக்குமென்று புரிந்தது. ஆனால், அதை வெளியில் சொன்னால் அவமானம் என்று அவன் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

மூன்றாம் நாளன்று மாடசாமி குடிசையில் தங்கி இருந்தான். அவனுக்கும் மலைச்சாமி, பச்சையப்பன் ஆகியோருக்கு நேர்ந்த கதிதான் நேர்ந்தது.

"நீங்கள் எல்லோரும் நேரத்தில் சாப்பாட்டைத் தயாரிக்காமல் தாமதம் செய்கிறீர்களே!" என்ற மாயசீலன், "நாளை நான் குடிசையில் இருக்கிறேன்; நீங்கள் மூவரும் வேட்டைக்குச் செல்லுங்கள்" என்றான்.

அதைப் போல் மற்ற மூவரும் வேட்டைக்குச் செல்ல, அன்று மாயசீலன் குடிசையில் தங்கினான். வேக வைத்தும், வறுத்தும், சுவையான சாப்பாடு தயார் செய்துவிட்டு உறங்கத் தொடங்கினான். அன்றும் கதவு தட்டப்பட்டது.

"கதவைத் திற" என்று வெளியிலிருந்து உத்தரவு பிறந்தது.

மாயசீலன், "இதோ வந்துவிட்டேன்" என்று பதிலளித்தவாறு எழுந்து சென்று கதவைத் திறந்தான். சித்திரக்குள்ளன் போல் உருவமும் ஐந்து அடி நீளத்துக்குத் தாடியும் கொண்ட விநோதக் கிழவன் எதிரே நிற்கக் கண்டான்.

அவன் மாயசீலனைப் பார்த்து, "என்னை உள்ளே தூக்கிச் செல்" என்றான். மாயசீலன் உடனே கிழவனை வீட்டுக்குள் தூக்கி வந்தான். ஆனால், கிழவனோ துள்ளி எகிறிக் கொண்டிருந்தான்.
மாயசீலன் அவனைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அதற்கு அந்தக் கிழவன், "எனக்கு வேண்டியது என்ன என்பதை விரைவில் தெரிந்து கொள்வாய்" என்று சொல்லித் துள்ளி எகிறி மாயசீலனின் சிண்டைப் பிடிக்கப் போனான்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட மாயசீலன், "ஓகோ! நீ இத்தகைய ஆளா!" என்று கூறியவாறு, கிழவனின் தாடியைப் பிடித்துக் கொண்டு விட்டான்.

பிறகு, கோடரியைக் கையில் எடுத்துக் கொண்ட மாயசீலன், கிழவனை மரத்தடிக்கு இழுத்துச் சென்றான். மரத்தை நடுவில் பிளந்து கிழவனுடைய தாடியை அதில் நுழைத்து இறுக முடிச்சுப் போட்டான்.

"என் சிண்டைப் பிடிக்க முயன்றாயே, திருட்டுக் கிழவனே! நான் திரும்பி வரும் வரை இங்கேயே இரு" என்று கூறிவிட்டு வீட்டுக்குள் திரும்பி வந்தான். சிறிது நேரம் கழித்து அவன் நண்பர்களும் வேட்டையாடிவிட்டுத் திரும்பினர்.

"சாப்பாடு தயாராக இருக்கிறதா?" என்று அவர்கள் கேட்டார்கள்.

"ஓ! தயாராகி நெடுநேரமாகிறதே!" என்று மாயசீலன் பதிலளிக்க மூவரும் வியப்புற்றனர். இவன் எப்படி அந்தக் கிழவனிடமிருந்து தப்பினான், ஒருவேளை இன்று அந்தச் சூனியக்காரன் வரவில்லையோ என்று மூவருக்கும் குழப்பம். ஆனாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாததால் அமைதியாகச் சாப்பிட்டனர்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், "வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்டுகிறேன்" என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்கு அவர்களை அழைத்து வந்தான். ஆனால், அங்கு மரத்தையும் காணவில்லை, கிழவனையும் காணவில்லை. கிழவன் மரத்தை வேரோடு பிடுங்கி இழுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான்!

மாயசீலன் அன்று நடந்ததையெல்லாம் தன் நண்பர்களிடம் விவரித்தான். உடனே நண்பர்களும், அந்தக் கிழவனால் தாங்கள் பட்ட இன்னல்களை மறைக்காமல் கூறினர்.

உடனே மாயசீலன், "இப்படிப்பட்ட கிழவனை நாம் சும்மா விடக்கூடாது. போய்த் தேடிப் பிடிப்போம். புறப்படுங்கள்" என்று கூறி நண்பர்களை அழைத்துக் கொண்டு கிழவனைத் தேடக் கிளம்பினான்.

–தொடரும்…

About The Author