பாதை தெரியுது பார்!

நமது நாட்டிலுள்ள எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினை தோன்றுவதற்கும் முற்றுவதற்கும் காரணங்கள், தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தீர யோசியாமல், அவ்வப்போதைய மன அவசங்களுக்கேற்ப (according to whims and fancies) முடிவெடுத்தல், தெளிவற்ற சிந்தனை, மேம்போக்காக ஏதாவது கருத்தைச் சொல்லி வைத்தல், அந்தந்த சந்தர்ப்பத்தை சமாளிப்பதற்கேற்ப, தொலை நோக்கில்லாத தீர்வுகளை செயல்படுத்துதல் ஆகியவையே.

உதாரணத்துக்கு, ஒரே ஒரு பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..

இது குறித்து நம் மனத்தில் எழும் சிந்தனைகள்:

1) சமுதாயத்தில் பொறுப்பு மிக்க மருத்துவ சேவையில் ஈடுபடப் போகும் மாணவர்கள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக (மொட்டை அடித்துக் கொண்டு, காதில் பூ வைத்துக் கொண்டு, நாமம் போட்டுக் கொண்டு, அடிப்பிரதக்ஷ¢ணம் செய்து) போராடுவது சரியான அணுகுமுறையா?

2) ஒவ்வொரு மாணவரும் அரசாங்க மானியத்தில் (15 லட்சம் என்கிறார்களே?) படித்துக் கொண்டு, கிராம சேவைக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பது என்ன நியாயம்? இத்தனைக்கும் அத்தனை பேரும் மேட்டுக் குடியினர். ஏழை எளியவர்கள் எத்தனையோ பேர் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்க, ஒரு வருஷம் படிப்புக் காலம் கூட ஆகிறது என்று (தவறாக) சொல்லி இவர்கள் போராடுவது சமூக நீதிக்குப் புறம்பாக அல்லவா இருக்கிறது?

3) கிராமப்புறத்துக்குப் போய்ப் பணியாற்ற மருத்துவர்கள் மறுத்து விட்டால் நாட்டின் உயிர்நாடிகளான கிராம மக்களின் நிலை என்னாவது?

சரியான சிந்தனைகள்தாம். இது குறித்து மேலும் ஆழ்ந்து சிந்திக்கும்போது நமது மனதில் தோன்றும் எண்ணங்கள்:

1) போராட்டம் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் கருத்துக்களை முன்வைத்து நியாயம் காண்பது நம் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா? (போபால் வாயுக் கசிவில் பாதிக்கப் பட்டவர்கள் இன்னும் இழப்பீட்டுக்குக் காத்திருக்கிறார்கள்.)

எரிவதற்குள் நல்ல கொள்ளி என்பது போல், பஸ் எரிப்பு, சைக்கிள் செயின், வீச்சரிவாள் இல்லாமல் நாமம் போட்டுக் கொள்ளும் போராட்டம் அறப் போராட்டம் போல் அல்லவா தெரிகிறது?

மாணவர்களுக்கு என்ன முன்னுதாரணங்கள் கிடைக்கின்றன? அவர்களது ஹீரோக்கள் என்ன செய்கிறார்கள்? வக்கீல்கள் கார் டயரில் காற்றைப் பிடுங்கி விடுகிறார்கள். நீதிபதியை மொத்துகிறார்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்டையைக் கிழிக்கிறார்கள்; மைக்கை உடைக்கிறார்கள்; நாற்காலியை வீசி எறிகிறார்கள்; செருப்பை அல்லது குறைந்த பட்சம் தொப்பியைத் தூக்கி அவைத் தலைவர் மேல் வீசுகிறார்கள். இந்த நிலையில் இளம் மாணவர்கள் மீது மட்டும் குற்றம் சொல்வது எப்படி சரியாகும்?

2) அடிப்படையாக சிந்திக்கப்பட வேண்டிய பரிமாணங்கள் சிலவும் உள்ளன.

அ)அடிமட்டக் கல்வியே அத்தனை பேருக்கும் கொடுக்க இயலாத நிலையில் உயர்தொழில் படிப்புக்கு இவ்வளவு மானியம் தர வேண்டுமா?
(இது ஆராய வேண்டிய விஷயம் என்கிறோமே தவிர இது குறித்து மேம்போக்காக கருத்து தெரிவிக்க நாம் விரும்பவில்லை)

ஆ) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்களே? இதைத் தடுக்க வழியில்லையா?

இ) கிராமப்புறத்தில் ஓராண்டு தங்கியிருந்து பணி புரிய வேண்டுமானால் அங்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்குப் பதிலாக, கிராம மக்கள் அங்கேதானே நிரந்தமாக வசிக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் நாட்டின் இரண்டாம் தரக் குடி மக்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படி யோசிக்கையில் நமக்குப் புலப்படுவது:

1) இந்த ஒரே ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அதில் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. பல வேறு பட்ட நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படிச் செய்வதில்லை; செய்யவும் முடிவதில்லை. ஒரு அமைச்சரோ, அல்லது அவரது துறையில் உள்ள அதிகாரியோ (நல்லது என்று நினைத்தே செய்தாலும்) அது சட்ட வடிவம் பெறு முன், மக்கள் மன்றத்தில் அலசி ஆராயப் பட வேண்டும். முதியவர் சபையான ராஜ்ய சபையில் முதிர் சிந்தனையாளர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட விஷயத்தின் பல பரிமாணங்களையும் அறிந்தவர்களின் ஆலோசனைகளும் கலந்து கொள்ளப்பட வேண்டும். இன்றைய நிலையில் அப்படி நடக்கிறதா? இதை எல்லாம் பேச நேரம் எங்கே இருக்கிறது? ராஜ்ய சபையில் முதிர் அறிஞர்கள் என்ற அடிப்படையிலா மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? கிடையாதே? அப்படி தப்பித் தவறி விவாதம் என்று நடந்தாலும் சபைகளில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? (நந்திக்கிராமம் பற்றி எரிகிற பிரச்சினையாக இருந்த போது அது குறித்து அத்வானி பேசியபோது தென்பட்ட தலைகளை விரல் விட்டு எண்ணி விட முடிந்ததே?)

2) கிராம மக்களின் நிலை மோசமாக இருக்கிறது என்பது உண்மைதான். விவசாயத்துக்கு ஆதரவு கிடையாது. விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. டி.வியில் அறிவு ஜீவிகள் “நீ என்ன நினைக்கிறே? நான் என்ன நினைக்கிறேன்” என்று கையைக் காலை ஆட்டி சென்சேஷன் ஆக்குவதற்கும், அரசியல்வாதிகள் கழுகுகள் போல பறந்து வந்து வோட்டு சேர்க்க முனைவதற்கும்தான் பயன் படுகிறதே தவிர வேறென்ன நடக்கிறது?

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்று செயற்கையாக ஒரு திட்டத்தை உருவாக்கி பல கோடி ரூபாயில், குறைந்த அளவினருக்கு மூன்று மாத அளவுக்கு வேலை தருவது, Urban facilities for rural citizens என்று காகிதத் திட்டம் தீட்டுவது எல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரம்தான்.

சுருக்கமாக சொல்லப்போனால், மருத்துவ மாணவர் போராட்டம் என்ற ஒரு தனிப் பிரச்சினையை வைத்துக் கொண்டு நாம் இரு வேறு அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.

1கிராம மக்கள் நல வாழ்வு.
2.சட்டம் இயற்றும் மக்கள் மன்றங்கள், தீவிர ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் ஆசை அபிலாஷைகளைப் பிரதிபலிக்க வேண்டும்.

இவற்றுக்கு சரியான வழியை மகாத்மா காந்தி காட்டி வைத்திருக்கிறார்.

அவரது கருத்துப்படி, நாட்டின் வளர்ச்சி என்பது, இப்போது உள்ளது 20 சதவீதத்தினரின் செழிப்பான வாழ்வும் 80 சதவிதத்தினரின் வறுமையும் அல்ல. அல்லது பாடப் புத்தக பொருளாதார தத்துவங்கள் சொல்லுவது போல, Maximum benefit for the maximum number கூட இல்லை. அது சர்வோதயம் என்ற அனைவரது நலனும் அடங்கிய பொருளாதாரம். இன்னும் சொல்லப் போனால் அது நலிந்தவரின் நல் வாழ்வு. கடையனுக்கும் கடைத்தேற்றம்.

அதற்கான செயல் திட்டங்களையும் அவர் திட்டவட்டமாக வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

கிராமப்புற மேம்பாடு என்ற அளவில் அவரது திட்டங்களில் முக்கியமானவை:

கிராமக் கைத்தொழில்கள், மது விலக்கு.

சரியான அரசியல் அமைப்புக்கு அவர் காட்டிய வழி:

கிராமங்களை அடித்தளமாகக் கொண்டு, படிப்படியான அமைப்புகளாக, அடித்தட்டு மக்களின் உண்மைப் பிரதிநிதித்துவம் இருக்கும் கிராம சுயராஜ்ய அமைப்பு.

இவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா இல்லையா என்பதல்ல கேள்வி. நாடு பிழைக்க வேறு வழி இல்லை என்பது மட்டுமல்ல, நாம் சென்று கொண்டிருக்கிற பாதை தவறான பாதை என்பதும்தான் உண்மை.

இதை நாடாள்பவர்களும் நல்லெண்ணம் படைத்தவர்களும் சிந்திக்க மாட்டார்களா என்று ஏங்குகிறோம்.

*****

About The Author