பாபா பதில்கள் – மகான்களின் வழிகாட்டுதல்

Q. கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதால், சித்தர்கள், மகான்களின் அருளைப் பெற இயலுமா? மகான்களின் வழிகாட்டுதலில் தான் சத்குணங்களைப் பெற இயலுமா?

பல கோவில்களில், அமைதியடைந்த சித்தர்களின் சக்தி வேலை செய்து கொண்டிருக்கிறது. பழனிமலை முருகன் கோவில், திருவண்ணாமலை, திருப்பதி, இராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களெல்லாம் சித்தர்கள் ஒடுங்கிய இடம். அவர்களுடைய ஆத்மாவை அங்கு merge செய்து வைத்து விட்டு, அவர்கள் உலகில் எங்காவது உலவிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அந்தக் கோவில்களுக்குச் சென்று நீங்கள் கும்பிட்டாலும் அவர்களுடைய அருள் உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனெனில், அவர்கள் ஜீவன் முக்தர்களாகிவிட்டு, இந்த உலகத்தில் கலந்துவிட்டவர்கள். இந்த உலகத்தில் உள்ள காற்று, நெருப்பு, நீர் என்ற எல்லாவற்றிலும் அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இதைப் பார்த்து, அவர்களெல்லாம் சித்தர்களாகிவிட்டது உண்மையானால், நாமும் சித்தர்களாகிவிட முடியும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சித்தன் என்பவன் யார்? சித்தத்தை சிவன் பால் வைத்தவன் சித்தன். தெய்வத்திடம் எண்ணத்தை வைத்துவிட்டவன் சித்தன்.

பூ என்பது எப்பொழுதுமே நீரில் இருந்தால் அழுகிவிடும். எப்போதும் வெயிலிலே இருந்தால் வாடிவிடும். அதனால் வெயிலும் தேவை; நீரும் தேவை. அதனால் பூ- பூவாக இருக்கிறது. மழையோ, வெயிலோ எதுவுமே அதிகமாக இருந்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதைப்போலவே மனிதனிடமும், நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் இரண்டுமே உள்ளன. இறைவனின் படைப்பில் நல்ல குணங்கள் அதிகமாக வைக்கப் பெற்றவர்கள் தேவர்கள் ஆனார்கள். கெட்ட குணங்கள் அதிகம் அடைந்தவர்கள் அசுரர்கள் ஆனார்கள். உலகத்தில், வெளியில் இருக்கும் எல்லாமும் நமக்குள்ளும் இருக்கின்றன.

கிருஷ்ண பரமாத்மாவிடம் மூன்று குணங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். இறைவனையே எப்போதும் சிந்தித்து வாழ்ந்த தேவகிக்குப் பிறந்ததால் சத்வ குணமும், கொஞ்சம் கொஞ்சி, கொஞ்சம் அடித்து வளர்த்த யசோதையிடம் பால் குடித்தால் ரஜோ குணமும், அரக்கியான பூதகியிடம் பால் குடித்ததால் தமோ குணமும் வந்தது. அது போல நம்மிடமும் மூன்று குணங்களும் இருக்கின்றன. அதில் எந்த குணத்தை வெளியே கொண்டு வருகிறோமோ அதை வைத்துதான் நாம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கருதப்படுகிறோம்.

About The Author