பார்கவி பக்கங்கள்-13

சுவாமிஜியிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

“திருடுவது பாவம் என்று ஏன் சமயங்கள் சொல்லுகின்றன? இது எனது, அது உனது என்று சொல்வது எல்லாம் மனதின் கற்பனைகளேதான் அல்லவோ? உண்மையில், என் பொருள் ஒன்றை எனது உறவினர் ஒருவர் சொல்லாமல் எடுத்துக் கொண்டால் அது திருட்டு ஆகாதே? பறவைகள் நம் பொருளைப் பறித்துச் சென்றால் அதைத் திருட்டு என்றா சொல்கிறோம்?”

சுவாமிஜி சொன்னது:

“எல்லா செயல்களையும் எல்லா சமயங்களிலும் திருட்டு என்று சொல்வது பொருந்தாதுதான். ஆனால், வேறு விதமான சூழ்நிலையில் ஒவ்வொரு செயலையும் தவறானது, பாவமானது என்று கூட சொல்ல வேண்டியிருக்கும். பிறருக்கு துன்பம் விளைவிக்கும் செயலைச் செய்யக்கூடாது. உடலளவிலோ, தார்மிக அடிப்படையிலோ உங்களைப் பலவீனப் படுத்தும் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. அத்தகைய செயல் பாவகரமானது. அதற்கு எதிரிடையான செயல் புனிதமானது.. இதை யோசித்துப் பாருங்கள். உங்களிடமிருந்து யாராவது ஒரு பொருளைத் திருடிக் கொண்டால் உங்களுக்கு வருத்தமாக இருக்கிறது அல்லவா? உங்களுக்கு எது பொருந்துமோ, அது உலகம் பூராவுக்கும் பொருந்தும். பிறருக்கு துன்பம் விளைவிக்கும் அளவுக்கு நீங்கள் கெட்டவராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்தான் என்றாலும், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எந்த பாவச்செயலுமே பெரிதில்லை என்ற நிலைக்கு வந்து விடுவீர்கள். நல்லது, தீயது என்ற வேறுபாடு இல்லாவிட்டால் சமூக வாழ்க்கையே சாத்தியமில்லாமல் போய் விடும். சமுதாயத்தில் வாழும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நீங்கள் ஒரு காட்டில் வசித்துக் கொண்டிருந்தால் ஆடையில்லாமல் நாட்டியம் ஆடிக்கொண்டு கூட இருக்கலாம். அதனால் யாருக்கும் கெடுதல் இல்லை; யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் ஊருக்குள் அப்படிச் செய்தீர்களானால், உங்களைக் கைது செய்து கொண்டுபோய்விடுவார்கள்!

(Ref: Hari Pada Mitra in “Reminiscences of Swami Vivekananda”)

About The Author