பார்கவி பக்கங்கள் (5)

குறையொன்றுமில்லை!

தீண்டத்தகாதவர் எனக் கருதப்படும் வகுப்பைச் சேர்ந்த அன்பர் ஒருவருக்குத் திருப்பதி சென்று கோவிந்தனைத் தரிசித்து விட வேண்டுமென்று அபரிமிதமான ஆவல். அந்தக் காலத்தில் – பிரிட்டிஷ் இந்தியாவில் – இந்த வகுப்பினர் கோவிலுக்குச் செல்வது சட்டப்படிக் குற்றம். என்றாலும், தீராத பக்தி காரணமாக அவர் திருப்பதி செல்லத் துணிந்து விட்டார். இரு முறை குளியல், நெற்றியில் திருமண், தினப்படிப் பிரார்த்தனை, விலக்க வேண்டிய அனைத்தையும் விலக்கி, நோன்பிருந்து, திருப்பதிக்குச் சென்று விட்டார். "கோவிந்தா! கோவிந்தா!" என்று கூவியபடியே மெய்யுருகிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில் காவலர்கள் அவரைக் "கையும் களவுமாக" (களவு – இங்கு இறைவனின் இருதயம்!) பிடித்துவிட்டார்கள். போலீஸில் ஒப்படைத்தார்கள்.

நீதிமன்றத்தில் அவருக்காக வாதாட யாரும் முன்வரவில்லை. இரண்டு காரணங்கள்; ஒன்று: அந்தக் காலத்தில் அநேக வழக்கறிஞர்கள் தீண்டாமையில் நம்பிக்கையுள்ளவர்கள். இரண்டாவது காரணம், காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கம் காரணமாக வக்கீல்கள் கோர்ட்டுக்குச் செல்வதற்குத் தடை விதித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் நமது அன்பருக்காக வாதாட வக்கீல் ஒருவர் வந்தார். அவர் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்தாம். காங்கிரஸில் முன்னணித் தலைவரும் கூட.

அவர் குற்றம் சாட்டப்பட்டவரைக் கேள்விகள் கேட்டார். நடுங்கிக் கொண்டே பதில் சொன்னார் பின்னவர்.

"நீ கோவிலுக்குள் போனது உண்மையா?"

"ஆமாம்!"

"கோவிலுக்குப் போவதற்கு முன் என்னென்ன செய்தாய்?"

"குளித்தேன். துவைத்த உடைகளைப் போட்டுக் கொண்டேன்! நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டேன்!"

"கோவிலில் என்ன செய்தாய்?"

"சாமி கும்பிட்டேன்!"

"எப்படிக் கும்பிட்டாய்? உனக்கு சுலோகம் தெரியுமா? மந்திரம் தெரியுமா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்!"

நீதிபதி பக்கம் திரும்பினார் வக்கீல். "கனம் கோர்ட்டார் அவர்களே! குற்றம்சாட்டப்பட்டவர் கூறுவதிலிருந்து, கோவிலின் புனிதத்தன்மை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெளிவாகிறது!" என்று சொல்லி முடித்தார். கோர்ட் ஒப்புக் கொண்டது. கைதி விடுதலை. அந்த வக்கீல் ராஜாஜி.

கட்சிக்காரர்கள் பெரிதாகப் பிரச்சினை பண்ணி விட்டார்கள். காந்திஜி வரையில் கொண்டு சென்று விட்டார்கள்.

"ராஜாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்!" என்று.

அவர்கள் ஏமாற்றம் அடையும் வகையில் காந்திஜி ராஜாஜியின் செயலை ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் வெகுவாகப் பாராட்டியும் விட்டார். "எந்த விதியையுமே வார்த்தை அளவில் பார்க்காமல் அதன் உட்கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்! ராஜாஜி வாதாடியிராவிட்டால், அந்த அன்பர் ஜெயிலுக்குப் போயிருப்பார். இது கட்சியின் தீண்டாமை எதிர்ப்புக் கொள்கைக்கு விரோதமானது. ஒத்துழையாமை என்பதற்குப் பதிலாக, நாம் பிரிட்டிஷ் அரசின் தவறான சட்டத்துக்கும், ஆதிக்க வெறியர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தவர்களாக ஆகியிருப்போம்!" என்றார்.

ஒரு துணைக்கதை. ராஜாஜி எழுதிய ‘குறையொன்றுமில்லை’ பாடல் ஞாபகம் இருக்கிறதா? எம்.எஸ்-ஸின் குயில் குரலில் பாடப்பட்ட அது, உலக அளவில் பிரசித்தம்! அதில்,

"திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா! – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்!
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை – கண்ணா"

என்ற வரிகள் வரும்.

மேற்சொன்ன சம்பவத்தை மனத்தில் கொண்டுதான் ராஜாஜி இந்த வரிகளை எழுதினார் என்று சொல்லப்படுகிறது!

–அடுத்த பக்கம் அடுத்த வாரம்!

About The Author

2 Comments

Comments are closed.