பார்கவி பக்கங்கள் (7)

எதிர்த்து நில்!

சுவாமி விவேகானந்தர் வட இந்தியாவில் ஓரிடத்தில் நில்லாது பயணம் செய்யும் துறவியாகத் திரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு குரங்குக் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. தடித் தடிக் குரங்குகள். அவரை நடக்க விடவில்லை. அவரைப் பார்த்து முறைத்தது ஒன்று. பல் இளித்தது ஒன்று. "உர், உர்" என்று சீறியது ஒன்று. காலைப் பிடித்து இழுத்தது ஒன்று. கழுத்தில் ஏறி அமர்ந்தது ஒன்று. விவேகானந்தர் பயந்து ஓட ஆரம்பித்தார். அவர் வேகமாக ஓட ஓட துரத்திக் கொண்டே பல குரங்குகள் வேகமாக வந்தன. கடிக்கவும் ஆரம்பித்து விட்டன. தப்பிக்கவே முடியாது என்று தீர்மானித்து விட்டார் சுவாமிஜி. மூச்சே நின்று விடும் போல் ஆகி விட்டது.

இந்த சமயத்தில் ஒரு சன்னியாசி எதிரில் வந்தார். "எதிர்த்து நில்!"("Face the Brutes!") என்று கம்பீரக் குரல் கொடுத்தார். ஸ்விட்ச் போட்டது போல நின்று விட்டார் சுவாமிஜி. திரும்பி நின்று அந்தக் குரங்குகளை முறைத்துப் பார்த்தார். கப்சிப்பென்று வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டன அவை.

அந்தச் சம்பவம் வாழ்க்கையில் அவருக்கு மறக்க முடியாத பாடத்தை சொல்லிக் கொடுத்ததாக சுவாமிஜி சொல்கிறார். விலங்குகளை எதிர்கொள்! துன்பங்கள், எதிர்ப்புகள், அச்சமூட்டுபவை அனைத்தையும் துணிந்து எதிர்கொள்! அச்சம், இடுக்கண், அறியாமை இவை நம்மை விட்டு விலகி ஓட வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று – எதிர்த்து நிற்பது! பிற்கால வாழ்க்கையில் சுவாமிஜி சந்திக்காத எதிர்ப்புகளா?

அவர் சன்னியாசி ஆகத் தகுதியில்லாத ஜாதி என்றார்கள் சிலர்; இந்திய நெறிகளை அமெரிக்காவில் எடுத்துச் சொல்வது பிடிக்காத மிஷனரிகள் எதிர்த்தார்கள். பொறாமை பிடித்த இந்தியர்களே எதிர்த்தார்கள். அவரது ஒழுக்கத்துக்கும் களங்கம் கற்பித்தார்கள். அவர் தமது ஆன்மீகப் பணியை ஆற்றுவதற்கு என்னென்ன இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். இத்தனையையும் எதிர்கொண்டு, 39 ஆண்டு கால வாழ்க்கையில் ஒரு மகத்தான சாதனையாளராக அவர் விளங்கினார் என்றால் அதற்குக் காரணம், "எதிர்த்து நில்!" என்ற மகாமந்திரம்தான்!

நம் வாழ்க்கைப் பயணத்துக்கும் இந்த மகாமந்திரத்தைத் துணை கொள்ளலாமே?

About The Author