பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (4)

ஏ.கே. செட்டியார் வெளியிட்ட ‘மகாமேரு யாத்திரை!’ (பகுதி – 1)

Sunrise at Artic
ஆர்க்டிக்கில் சூரியோதயம்

கோவில்களைக் கட்டுவதற்கும், கட்டிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும், தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த அற்புதமான குலம், செட்டியார் குலம். இவர்களின் பணிகளைப் போற்றுவார் இன்று இலர். தமிழகத்தின், இன்றைய பல துரதிர்ஷ்டங்களில் இதுவும் ஒன்று!

‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று புகழப்பட்ட திரு.ஏ.கே.செட்டியார் (தோற்றம்: 3 நவம்பர் 1911. மறைவு 10 செப்டம்பர் 1983) சிறந்த தேசபக்தர். நேதாஜியைப் படம் எடுத்தவர். ‘குமரி மலர்’ என்ற அற்புதமான பத்திரிகை மூலம் தமிழ்ப் பணி ஆற்றியவர்.

வெள்ளை வெளேரென்று, தும்பைப் பூப் போலச் சட்டையும் வேட்டியும் அணிந்து வருவார். தும்பைப் பூப் போன்ற, ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளின் மேல் தேனை ஊற்றிக் கொண்டு சாப்பிடுவார். மென்மையான குரல்! எப்போதும் புன்முறுவல்தான்! அழகிய வெள்ளைப் பற்கள் தெரிய அவர் பேசுவதைக் கேட்பதும் ஓர் இனிய அனுபவம்! ‘குமரி மலர்’ சந்தாவைத் தானே நேரில் பெற வருவார்.

அவரது குமரி மலர் பத்திரிகை, ஒரு பெரும் பொக்கிஷம்! பார்த்துப் பார்த்துப் பழைய கட்டுரைகளை வெளியிடுவார். அவரது குமரிமலர் பத்திரிகையில் வெளி வந்த, ஓர் அற்புதமான கட்டுரையைப் பார்ப்போம்!

கட்டுரையின் தலைப்பு : மகா மேரு யாத்திரை (1934).
எழுதியவர் : ஆர்.அனந்த கிருஷ்ண சாஸ்திரி.

நார்வே தேசத்தில், ட்றோணியம் என்ற கடற்கரை நகரிலிருந்துதான், மகாமேரு பிரதேசத்திற்குப் புறப்பட வேண்டும். மகாமேரு பிரதேசத்திற்கு, ஆர்க்டிக் பிரதேசம் என்று பெயர் வழங்குகிறது. இவ்விடத்திலிருந்து மகாமேரு, சுமார் ஆயிரம் மைல் தூரத்திலிருக்கிறது.

ட்றோணியத்திலிருந்து யாத்திரை செய்த கப்பல், தபால் கொண்டு போவது. ஆகையால், ஒவ்வோரிடத்திலும் தபாலைக் கொடுத்து வாங்கச், சுமார் அரை மணி நேரம் வரை நிற்கும். அப்பொழுது நான் கீழே இறங்கி, அந்தக் கிராமங்களைச் சுற்றிக் கொண்டு வருவேன். தலையில் தலைப்பாகையும், கழுத்தில் சால்வையும் அணிந்து கொண்டுள்ள, மஞ்சள் நிற மனிதனை அத்தேசத்தார் பார்த்திராததினால் என்னைப் பார்த்து வியப்புற்றனர்! சிலர், கப்பல் அதிகாரியிடத்தில் போய் என் வரலாற்றை வினவியதுமுண்டு.

கப்பல் ஏறின முதல் நாளில் கப்பல் அதிகாரியைச் சந்தித்து, மறுநாள் காலையில் தண்ணீரில் ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லப் போனேன். தண்ணீரில், வைகறையில் ஸ்நானம் செய்தலென்பதை அவர் கேட்டிராதவர். ஆதலால் அஞ்சி, உடலுக்குத் தீமை வந்தால் தாம் பொறுப்பேற்க நேருமாகையால், நான் எவ்வளவு தூரம் பிரார்த்தித்தும், சாவியைக் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். அவருடைய மனைவியிடத்தில் சென்று சிறிது நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்த பிறகே, இந்தியாவில் குளிர்காலத்தில் கூடப் பலர் கங்கை முதலான நதிகளில், வைகறையில் நாலு மணிக்கு ஸ்நானம் செய்யும் வழக்கத்தையும், இந்துக்களின் ஆசாரத்தையும் சொல்லி உறுதிப்படுத்தினேன். அவ்வம்மை தயையால், தண்ணீர் அறைச் சாவியை வாங்கி, மறுநாள் வைகறையில் ஸ்நானம் செய்தேன். பிறகு ஜபம், பூஜை முதலிய எல்லாம் முடிந்து வெளியில் வந்தவுடன், எனக்கு ஸ்நானத்தினால் கெடுதல் உண்டா என்று பார்க்கப் பலர் வந்தார்கள்.

பால், பழம், பச்சைக் காய்கறி ஆகிய உணவைப் பார்த்து, நான் ஒரு ஸித்த புருஷன் என்றும், கீழ் நாட்டில் அவதரித்திருப்பதாகவும் சொல்லலாயினர். என்னைப் போல் இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் உண்டு என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. இதை வழக்கத்தினால் சம்பாதிக்கலாம்; இஃது ஒன்றினாலேயே மோக்ஷம் கிடைத்து விடாது என்று நான் அவர்களுக்குக் கூறுவேன். என்ன சொன்னாலும் அவர்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை.

பிறகு, மெள்ள மெள்ள 66ஆவது கோடு (லாடிடியூட்) தாண்டினேன். கணித சாஸ்திர வித்வானாகிய பாஸ்கராசாரியார், சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் எழுதிய ‘சித்தாந்த சிரோமணி’ என்னும் நூலில், 66ஆவது கோடு தாண்டி வடக்கே போகப் போகப், பகல் நேரம் மிகுதியாகவும், மேருவில் ஆறு மாதம் ஒரே பகலாகவும் இருக்கும் என்று கூறியது ஞாபகத்துக்கு வந்தது. பகல் அதிகரிக்கலாயிற்று.

ட்றோம்ஸோ என்கிற இடத்தில், 68ஆவது கோட்டில், மே மாதம் 14ஆந் தேதி இரவு 11-45 மணிக்கு, மேற்கு நோக்கி நின்று சூரியன் வரவை எதிர்பார்த்தேன். ஈசுவரக் கிருபையினால், அன்று வானில் மேகம் பரவுவதும் பனி விழுவதும் இன்றி இருந்தது. மேலைக் கடலிலிருந்து ஓர் ஒளிப்பிழம்பு தோன்றி, உடனே வடக்கே ஓடிவிட்டது. இதைத்தான் ‘பாதி ராத்திரி உதய ஸுர்ய’ னென்றும், மேற்கில் உதித்துக் கிழக்கில் அஸ்தமனமாகிறதென்றும் வேதம் கூறுகிறது. இந்த ட்றோம்ஸோவில் பாதி ராத்திரியில் உதித்த ஸூர்யன், உடனே அஸ்தமனமாகாமல் சரியாக நூற்றொரு நாட்கள் வானில் குயவன் சக்கரத்தையொப்பத் தணிந்து சுழற்றிக் கொண்டு, ஆகஸ்டு மாதம் கடைசியில் கிழக்கே அஸ்தமனமடைகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் 101 நாட்கள், சூரியன் ஒளியின்றி ஒரே இரவாக இருக்கும். இந்த இடத்தில்தான் முன்னையோர் ‘சதராத்திரக்கிரது’ நடத்தியதாக ‘ச்ரௌத சூத்திரங்கள்’ கூறுகின்றன. 101 நாட்கள் ஒரே இரவாயிருக்கிற வேறோரிடம் இதற்கு நேரே கீழ்ப் பூமியிலாகும். அந்தப் பூமி, அமெரிக்காவின் வட பாகத்தில், ஆர்க்டிக் பிரதேசத்தில், அலாஸ்கா என்கிற இடமாகும். ஆரியர் அந்தப் பிரதேசத்தில் பண்டைய நாளில் வசித்து வந்ததாகச் சரித்திரங்களினால் விளங்கவில்லை. ஆகையால், இந்தப் பிரதேசத்திலேயே ஓர் இரவு முதல் நூறு இரவு வரையில் நம் பெரியோர் யாகம் நடத்தியிருக்க வேண்டும். இதை மனதிற் கொண்டு ருக் வேதத்தைப் படித்தால், அதில் வர்ணித்திருக்கிற சூரிய வர்ணங்கள், ஆறு மாதம் சூரியனும் ஆறு மாதம் சூரியனில்லாத காலமும், பலவித உதய காலமும், மூன்று முதல் ஐந்து வரையிலுள்ள ருதுக்களும் கணித சாஸ்திர முறைப்படி நன்கு விளங்கும்.

ஆர்க்டிக் பிரதேசத்தில், சூரியன் எப்பொழுதும் மறைவின்றியிருப்பதால், பூமியில் உள்ள நிலங்களில் தானியங்கள் மும்முறை விதைத்து அறுவடை செய்யப்படுகிறது. ஆகையால் உணவுப் பண்டங்களுக்கு குறைவேயில்லை. தக்ஷிணாயனத்தில் ஒரே பனி மழை; அப்பொழுது பயிர்த் தொழில்கள் நடப்பதில்லை. கைத்தொழில் வேலைகள் நடக்கும். ஒரே இராத்திரிக் காலங்களில் சூரிய ஒளியே இல்லாததால், சந்திரனுடைய நிலவாலும், விடியற்காலப் (அருணோதய) பிரகாசத்தினாலும், மகா மேருவிலிருந்து ஒரே ஒளிப் பிழம்பு தெற்கே பார்த்து வீசும் பிரகாசத்தினாலும் (ஆறோ போரியாலிஸ்) இருட்டே தெரிவதில்லை. நம் தேசத்தில், சூரியனை மறைத்து இருளுடன் மழை பெய்யும் காலத்துப் பகல் போல இருக்கும். ஆனால் அடிக்கடி ஒளி மாறும்.

– அடுத்த இதழில் கட்டுரையின் இறுதிப் பகுதி தொடரும்

About The Author