பார்வையற்றோர் இனி தடங்கல்களுக்கு இடையேயும் நடக்கலாம்!

அன்றாட உலகில் உடல் மற்றும் உள்ளம் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் ஏற்படும் ஆயிரக்கணக்கான வியாதிகளால் அல்லல் படுவோர் ஏராளம்! இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் தீர்வு கண்டு விட முடியாது, என்றாலும் மனம் தளராமல் ஒவ்வொரு வியாதியையும் ஆராய்ந்து அது ஏற்படும் விதத்தையும் ஆழ்ந்து நோக்கி, சரியான மருந்துகளையும் இதர உதவிகளையும் கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இவர்களது கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கே ஒரு பெரிய பரிசாக அமைகிறது.

சமீபத்தில் டோரோண்டோவில் 2009 ஜூன் மாதம் கூடிய 4100 விஞ்ஞானிகளின் மாநாடு குறிப்பிடத் தகுந்த ஒன்று! ஏராளமான புதிய புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாள் தோறும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை வரும் வாரங்களில் பார்ப்போம். முதலில் பார்வை அற்றவர்களுக்கு வந்துள்ள மருத்துவ நற்செய்தியைப் பார்க்கலாம்.

பார்வையற்றோர் இனி தடங்கல்களுக்கு இடையேயும் நடக்கலாம்!

பார்வையற்ற ஒருவர் பல தடங்கல்கள் உள்ள ஒரு அறையில் தன் இஷ்டப்படி பார்வையுள்ள ஒருவர் போல நடக்கக் கூடிய அற்புதக் கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்! இது எப்படி சாத்தியம்?

வாதத்தால் அல்லது ரத்தக்குழாய் அடைப்பால் (stroke) பார்வை இழந்த ஒருவர் நாற்காலிகள், பெட்டிகள் ஆகியவற்றிற்கு இடையே எதன் மீதும் முட்டாமல் மோதாமல் தனது மூளையில் உள்ள மறைந்திருக்கும் பாதை வழிகளை உபயோகித்து நடந்து காண்பித்தார்.

இந்த விஞ்ஞான அற்புதம் உண்மையிலேயே நடந்து உலகையே அதிசயிக்க வைத்து இருக்கிறது! இந்த ஆய்வு ஆழ்மன மூளையில் (subconscious brain) உள்ள ஆதாரங்களை உபயோகித்து நம்மால் செய்ய முடியாது என்று சாதாரணமாக நாம் நினைக்கும் பல காரியங்களை சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது!

ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலின் இந்த அதிசய கண்டுபிடிப்பை கரண்ட் பயாலஜி (Current Biology) இதழ் பிரசுரித்துள்ளது. இதில் சோதனைக்கு உள்ளான நபரின் பெயரை டிஎன் என்று மட்டுமே அறிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்புகளால் மூளையின் இரு அரைக்கோளங்களில் உள்ள பார்வை புறணிகள் (visual (striate) cortex in both hemispheres) சேதமடைந்ததால் அவர் பார்வையை இழக்க நேர்ந்தது. அவரது கண்கள் சாதாரணமாக இருந்த போதிலும் கிடைக்கும் செய்திகளை அவரது மூளை பாகுபடுத்தி முறைப்படுத்தும் சக்தியை இழந்திருந்ததால் அவர் பார்வை அற்றவரானார். என்ற போதிலும் ‘பார்வையற்ற பார்வை’ எனப்படும் “blindsight” என்ற சக்தியை அவர் முன்னால் கொண்டிருந்தார். அதாவது எந்த இடத்திலும் அங்கு உள்ளனவற்றைப் பார்க்காமல் அதை ஊகித்து அறியும் சக்தி அவருக்கு இருந்தது.

உதாரணமாக அவரால் மற்றவரது முகபாவங்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடிந்தது! ஆனால் நடக்கும் போதோ ஒரு கைத்தடியின் உதவியுடன் பார்வை அற்றவர் போல நடந்தார். கட்டிடங்களின் ஊடே நடக்கும் போது மற்றவர்களின் வழிகாட்டுதல் அவருக்குத் தேவையாக இருந்தது!

விஞ்ஞானிகள் தங்கள் சோதனை முறைப்படி வெவ்வேறு தடைகளை ஆங்காங்கே வைத்து வீடியோ ரிகார்டிங் செய்யத் தொடங்கினர். பார்வையற்ற அவர் எல்லாத் தடைகளையும் சமாளித்து வெற்றிகரமாக நடந்து முடித்தார்.

நெதர்லாந்திலுள்ள டில்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தலைமை பெண் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்ரிஸ் டி ஜெல்டர் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூல் குழுவினர், ஒரு தாழ்வாரத்தில் சாதாரணமாக நடப்பது போல அவர் நடந்தாரே தவிர தான் ஒரு அரிய சாதனையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பது போல அவர் நடக்கவில்லை என்றனர்.

மூளை சேதமுற்றோருக்கு இது ஒரு மிக முக்கியமான செய்தியை அளிக்கிறது என்கிறார் அவர். பார்வை புறணி மொத்தமாக சேதம் அடைந்துள்ள போதிலும் எந்த வித பங்கமும் இன்றி நீங்கள் நடக்க முடியும் என்று அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார். பார்வை வழித்தடங்கள் நாம் நினைத்திருப்பதை விட அதிகமாகச் செயல்பட முடியும் என்பது தெரிகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் சோனல் ருகானி மூளை மிகவும் நெகிழக் கூடியது என்றும் இந்த சோதனை ஒரு முக்கிய முடிவைத் தெரியப்படுத்தி உள்ளது என்றும் கூறுகிறார்.

ரத்தக்குழாய் அடைப்பினால் பார்வை போனவர்களும், மூளை சேதமுற்றதால் விழிப் பார்வை இழந்தோரும் இனி கலங்க வேண்டாம். அவர்களுக்கு மூளையில் உள்ள பார்வைத் தடங்கள் உதவி செய்யும். அந்த உதவி மூலம் அவர்கள் நடக்கலாம் என்பதே இந்த புதிய கண்டுபிடிப்பின் சாராம்சம்!

About The Author

2 Comments

  1. P.Balakrishnan

    அமெரிக்காவில் ஒருசில லயன்ஸ் கிளப்கள் பார்வையற்றோர்களுக்கு உதவிட வழிகாட்டி நாய்களைப் பழக்குகின்றன. காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் உதவியாக இருக்கும் நாய்கள் ஒர்கின் டாக்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.

  2. megala.N

    பார்வை அற்றவர்களுக்கென புதிய கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்க்கு மிகவும் நன்மை அளிப்பதாக உள்ளது. கட்டுரை வெளியிட்ட நிலா சாரலுக்கு மிக்க நன்றி.
    நா.மேகலா
    பெங்களூர்- 56

Comments are closed.