பின்னோக்கி எழும் அதிர்வுகள் (1)

ஜனவரி 2, 2008.

அன்பார்ந்த கந்தவேளுக்கு,
வணக்கம்.

உனக்கு எழுதும்போது இப்படி வணக்கம் சொல்லிவிட்டுத்தான் எழுத வேண்டுமா என்று யோசனை வந்து விட்டது எனக்கு. ஏனென்றால், அந்த வணக்கத்திற்கு நீ தகுதியுடையவன்தானா என்று இப்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.

நீதான் எதையுமே பொருட்படுத்துபவனாகத் தெரியவில்லையே? வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் பொருட்படுத்தி வாழ்பவன்தான் மனிதன் என்று நான் நினைக்கிறேன். எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல், எந்தச் சுரணையும் இல்லாமல், விட்டேற்றியாக இருப்பவன் எந்த மனிதக் கணக்கில் சேர்த்தி என்று கொள்ள முடியும்?

இந்த மாதிரியான எண்ணங்களை என் மனதில் ஏற்படுத்திய பொறுப்பும் உன்னுடையதுதான் என்று நான் சொல்வேன். என்ன வேணாலும் சொல்லிக்கோ, எனக்கென்ன… என்று நீ சொல்வது என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி சமயங்களில் நீ சிரிக்கும் ஒருமாதிரியான சிரிப்பும் என் கண் முன்னே வரத்தான் செய்கிறது. அதைக் கண்டு உன்னை ஓங்கி அறையலாம் என்றும் எனக்குத் தோன்றத்தான் செய்கிறது. அறைஞ்சா அதையும்தான் நான் வாங்கிக்குவேன், என்னை என்ன பண்ணச் சொல்றே? என்று நீ கேட்பதும் எனக்குப் புரிகிறது.

தொலைபேசியில் பேசுவோம் என்றால் வசதியாக அதை வைத்துக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறாய் நீ! அது இருந்தால்தானே தொல்லை. அவனுக்கு டெலிபோன் இல்லப்பா…என்று சொல்லி விட்டால் பிரச்னையில்லையே!! பலே ஆள்தான் நீ! உனது காரியங்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களை முன்னக்கூட்டியே நீ நன்றாகத் திட்டமிட்டிருக்கிறாய் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? எது எதில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று இந்த ரீதியில் யோசித்த நீ, கொஞ்சம் உனது சிந்தனையை உனது முன்னேற்றத்திற்கு உகந்ததாக சீர்படுத்திச் சிந்தித்திருந்தாயானால் என்றோ நீ மேலே வந்திருப்பாய். இப்படி உன்னை உரிமையோடு விமர்சிப்பதற்கும், திட்டுவதற்கும், எனக்குப் பூரண உரிமையிருக்கிறதுதான்.

அது உன்னோடு ஏற்பட்ட நட்பு காரணமாக, பல வருடப் பழக்கம் காரணமாக ஏற்பட்டது என்று நீ நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்த உரிமை நானாக எடுத்துக் கொண்டது. இனி நீ உருப்பட மாட்டாய் என்று நான் முடிவு செய்துவிட்ட அன்றுதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஏனென்றால் என் வயிற்றெரிச்சல் தீர வேண்டுமே? அதை நான் எங்கே கொண்டு போய்க் கொட்டுவது? பொம்பளை மாதிரி உட்கார்ந்து கொண்டு அழுவதற்கு நான் தயாரில்லை. குறைந்த பட்சம் உன்னை மனதாரத் திட்டிய திருப்தியாவது கிடைக்கட்டும் என்பதுதான் எனது இப்போதைய முடிவு.

எது சொன்னாலும், என்ன சொன்னாலும் நீ அசையப் போவதில்லைதான். எல்லாமே உதிர்த்தவனுக்கு என்ன இருக்கிறது? அம்மணமாய் நடு ரோட்டில் நின்றாயிற்று. பிறகு உனக்கென்ன வந்தது? பார்ப்பவர்கள்தான் கண்களை மூடிக் கொள்ள வேண்டும். அல்லது விலகி ஓட வேண்டும். அதுதானே? இப்பொழுது நீ எதிர்பார்ப்பதும் அதுதானே? எல்லாரும் தொலைஞ்சு போறான் என்று விட்டு விட்டால் உன் பாடு ஜாலிதான். அக்கடா என்று உட்கார்ந்து விடுவாய். நிம்மதியாகத் தூங்குவாய். இப்பொழுதே நன்றாகத் தூங்கக்கூடிய நீ, அப்படியென்றால் கேட்க வேண்டுமா? இன்னும் ஒரு ஹாஃப் ஊற்றிக் கொண்டு சந்தோஷமாய் உளறிக்கொண்டு தூங்கிப் போவாய்.

உன்னைக் கெடுத்ததே அந்தக் குடிதானே? என்ன நான் சொல்வது சரிதானா? இப்படி உன்னிடம் கேட்பது கூடப் பாவம்தான். ஏதோ பழைய பழக்கத்தில் சற்று அந்நியோன்யமாய்க் கேட்டு விட்டேன். இப்படியெல்லாம் சற்றுத் தளர்வாக ஜாடை காண்பித்தால்கூட நீ நெருங்க ஆரம்பித்து விடுவாய் என்பது எனக்குத் தெரியும். நீ பக்கத்திலேயே வரக்கூடாது என்றுதானே ஒரே ஊரில் இப்படித் தள்ளி வந்து நான் குடியிருக்கிறேன். குடியும் குடித்தனமுமாக நான் இருக்கிறேன். நீ குடியோடு மட்டும் இருக்கிறாய். இதுதான் நம் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்.

எழுதிக் கொண்டே போய் என்ன பயன்? என்ன எழுதினாலும் நீ அசரப் போவதில்லை. வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாவற்றையும்தான் நீ உதிர்த்தாயிற்றே? நன்றி, ஊன்றிப் படித்ததற்கு.

இப்படிக்கு,
உன் பழைய நண்பன்,
ராமலிங்கம்.

********

20 மார்ச் 2008.

அன்புள்ள சகோதரி, வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. ரெண்டு மாதம் முடிந்துவிட்ட தருவாயில் ஒரு பதில் கடிதம் போட வேண்டும் என்றாவது உங்களுக்குத் தோன்றியதே. அந்த மட்டுக்கும் சந்தோஷம்.
 
முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து விடுகிறோம் என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளையாவது எழுதத் தோன்றியதே என்று இருக்கிறது. ஆனால் அவை வெறும் வார்த்தைகள்தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்களால் நிச்சயம் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பதுபோல் ஒரு நிலைமை வந்தால், எனக்கு முன்னதாக நீங்கள் நிறையக் கடன் நிறுவனங்களுக்குத் தீர்த்து விட்டுத்தான் என்னிடம் வர முடியும், வருவீர்கள் என்பதை நான் அறிவேன். எனக்குக் கொடுப்பதாய் இருந்தால் என்றோ உங்கள் கணவர் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் மனசில் அந்த எண்ணமே இல்லை என்ற விஷயம்தான் இங்கு முக்கியம். கூடப் படித்த இவன் மட்டும் இத்தனை வசதியாய் இருக்கிறானே, நமக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைஞ்சா போயிடுவான் என்று திட்டமிட்டே அல்லது பழிவாங்குவதற்கென்றே உங்கள் கணவர் நிச்சயம் என் கடனைத் திருப்பித் தரமாட்டார். ஏமாற்ற என்று வாங்கியதுதானே? பிறகு என்னத்தைத் திருப்பித் தருவது?

என்னடா, ‘ர்’ போட்டு அழைக்கிறானே என்று பார்க்கிறீர்களா? உங்கள் முன் உங்களின் கணவர் பற்றிச் சொல்லும்போது அதுதான் மரியாதை. நான் அவனிடம் நேரில் பேசும்போது விஷயமே வேறு. அன்று உங்கள் கடனுக்காக வாசலில் கடன் பட்டவர்கள் காத்துக் கிடந்தபோது, கழுத்தில் கிடந்த தன் நகையைக் கழற்றிக் கொடுத்தாளே என் மனைவி, அது எதற்காக? எங்கள் இருவரின் நட்புக்காக. அதைப் பெரிதும் மதிப்பவள் அவள். ஆனால் சொன்னதுபோல் நீங்கள் நடந்து கொண்டீர்களா? உங்கள் கணவரின் கடனை அடைக்க நீங்கள் முயன்றீர்களா? உங்கள் நகைகளையெல்லாம் பாதுகாப்பாக உங்கள் பிறந்தகத்தில் சேர்ப்பித்து விட்டதாகவும், எப்படியோ போங்க, எனக்குத் தெரியாது என்று நீங்கள் தற்போது உங்கள் பிறந்த வீட்டில்தான் இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.
 
அப்படியிருக்கையில் உங்கள் வீட்டு முகவரியிலிருந்து எப்படி இந்தக் கடிதம் வருகிறது என்பது எனக்கு இன்னமும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை கந்தவேள் நீங்கள் எழுதுவதுபோல் எழுதியிருக்கிறானோ என்று தோன்றுகிறது. இந்தக் கடிதம் யார் கையில் கிடைக்கும் என்பதும், நிச்சயம் உங்களால் படிக்கப்படுமா என்பதுமே எனக்குச் சந்தேகம்தான். அவன் என்னமும் செய்யக் கூடும். பார்த்தீர்களா…உங்கள் கணவரின் ஃபிராடு பற்றிச் சொல்ல வருகையில் ஆட்டோமேடிக்காக வார்த்தை அவன் என்று வந்து விட்டது பார்த்தீர்களா? அது அப்படித்தான்! அவன்தான் உங்களையே சோரம் போகச் சொன்னவனாயிற்றே?

கடன் கொடுத்த கந்து வட்டிக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள்தான். அவர்கள் வாசலில் இருந்து கத்திக் குடியைக் கெடுத்தார்கள் என்றால் அது ஊர் அறிந்ததுதான். "உன் பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுய்யா…நீயெல்லாம் ஏன் உசிரை வச்சிட்டிருக்கே… கடனை அடைக்க வழி நா சொல்லித் தர்றேன்…" என்று அவர்கள் கேட்டபோதே கேட்டவனை ரெண்டாய்க் கூறு போட்டிருக்க வேண்டும். அது செய்யாமல் நின்றானே அவன்? அதற்குப் பெயர் இயலாமையா? அல்லது சம்மதமா?

மனிதர்கள் மனமறிந்து தவறு செய்யத் துணிந்து விட்டால், பிறகு எதற்கும் தயங்குவதில்லை என்பதுதான் உண்மை. இதையெல்லாம் உங்களுக்கு எழுதுவதற்கு எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் உங்களின் பாதுகாப்பான நிலை என்னை இதை எழுதத் தூண்டியது.

இத்தனை ஜாக்கிரதையாய் இருக்கும் நீங்கள் அன்று நாங்கள் நகையைக் கழற்றிக் கொடுத்தபோது வேண்டாம் என்று தடுத்திருக்க வேண்டுமல்லவா? எனக்கென்ன என்று இருந்துவிட்டு இன்று உங்களை மட்டும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திக் கொள்கிறீர்களே? இதுதான் ஒரு நல்ல மனைவிக்கு அழகா? தவறு தவறு. நல்ல என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. அப்படியிருந்தால்தான் உங்கள் கணவரை இப்படித் தவிக்க விட்டிருப்பீர்களா?

இதை எழுதும்போது கூட ஒன்று தோன்றுகிறது எனக்கு. என்னய்யா பேசிட்டே போற? உங்ககிட்டக் கையை நீட்டி நானா கடன் வாங்கினேன். போய் வாங்கினவன்ட்டக் கேளுய்யா என்று நீங்கள் சொல்லி விடுவீர்களோ என்று. சொன்னாலும் சொல்வீர்கள். ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீங்கள்தான் உங்களை ரொம்பவும் ஜாக்கிரதையான இடத்தில் நிறுத்திக் கொண்டிருக்கிறீர்களே? அது ஒன்று போதாதா? மனிதர்களுக்குச் சில அடையாளங்கள் போதும், அவர்களைப் பற்றி உணர…

ஆனால் உங்கள் இருவரைப் பற்றியும் உணராமல் ஏமாந்து நிற்பது நான்தான். நட்பு நட்பு என்று பெரிதாகக் கற்பனை செய்து கொண்டிருந்தது நான். ஆனால் வெறுமே காரியத்திலேயே கண்ணாக இருந்தது உங்கள் கணவர். இன்றைக்குக் கேட்டால் கிலோ என்ன விலை என்கிறான். வாயைத் திறந்து கேட்டால்தான் ஆயிற்றா? ஒரு மனிதனின் இருப்பு அனைத்தையும் உணர்த்தி விடாதா? என்ன புலம்பி என்ன செய்ய? ஒவ்வொரு கடிதமும் கடைசியில் வீண் என்ற எண்ணத்திலேயேதான் முடிகிறது. அந்த அளவுக்கான அவ நம்பிக்கையைத்தான் நீங்கள் இத்தனை நாள் ஊட்டியிருக்கிறீர்கள். வாழ்க. நன்றாக இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலுள்ள சக்தி உங்களைக் காப்பாற்றட்டும். நன்றி.

அன்புடன்,
ராமலிங்கம்

 
மீதி அடுத்த இதழில்
********

About The Author