பிறைக்கூத்து (1)

ஹஸீனா பெத்தா அப்போதுதான் தொழுகைப் பாயைச் சுருட்டிப் பரண்மேல் வைத்தாள். நவாஸ் உள்ளே நுழைந்தான். "பெத்தா உனக்கு விஷயம் தெரியுமா? இந்த வருஷம் வெள்ளிக்கிழமைதான் பெருநாளாம்!"

ஹஸீனா பெத்தாவுக்குப் பின் தலையில் அடிவிழுந்த மாதிரி இருந்தது. வருசம் தவறாமல் இந்த அடி விழுகிறது. நவாஸை முறைத்துப் பார்த்தாள். "ஏல இன்னிக்கு திங்கட்கிழமை. நோன்பு இருபத்தாறுதான் ஆச்சுது. அதுக்குள்ள பெருநா பிறை
உங்களுக்கு எப்படிலே தெரிஞ்சது? வந்து உளறிக்கிட்டு நிக்கியே!’

நவாஸ் ஆத்திரமாய்ச் சொன்னான், "நான் ஒண்ணும் உளரல. பஜார்ல எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கானுங்க."

"பஜார்ல என்னல? மக்காவுலேயே சொல்லட்டும்! மக்காவுலேயே சொல்லிட்டாங்கன்னாலும் அது சரியாகுமா? பிறை பாக்காம வெள்ளிக்கிழமைதான் பெருநாள்னு நாலு நாளைக்கு முன்னாலேயே வந்து சொல்றதுக்கு யாருக்குல என்ன அதிகாரமிருக்கு? என்னமோ பொறையே உங்கிட்ட நேர்ல வந்து வியாழக்கிழமை சாயந்திரமே நான் உன் கண்ணுக்குத் தெரிஞ்சிடுவேன்னு வாக்கு கொடுத்துட்டுப் போன மாதிரில்ல பேசுற நீ?"

"பஜார்ல நின்னு பெரிய பெரிய ஆலிம்கள்லாம் சொல்றத இந்தக் காதால் நான் கேட்டேன். அவங்க எவ்வளவு ஓதிப் படிச்சவங்க? விவரமில்லாம இப்படி நாலு பேரு கேக்குற மாதிரி நடுத்தெருவுல வச்சு பேசுறதுக்கு அவங்களுகு என்ன வேற வேலை இல்லயா?"

"இப்படிப் பேசிப்பேசித்தான் வருஷம் பூராவும் குழப்பம் பண்ணிட்டு இருக்காங்க. முழுசா முப்பது நோன்பும் புடிச்சு எத்தனை வருஷமாச்சி? இவங்க படுத்துற பாட்டுக்கு முப்பதாவது நோன்புன்னு ஒண்ணு இனிமே இருக்கவே இருக்காது போலிருக்கு. நானும் இந்த எழுபது வருசத்துல எத்தனை முறை முப்பது நோன்புன்னு புடிச்சி பெருநா கொண்டாடி இருக்கேன். ஊரே அப்படித்தான் கொண்டாடியிருக்கு. உலகமும் அப்படித்தான் கொண்டாடியிருக்கு. ஆனா இப்போ ஒரு அஞ்சாறு வருசமாவே 29 நோன்பு அன்னிக்கே பெருநாள்னு சொல்லி எல்லாத்தையும் குளோஸ் பண்ணிடுறானுங்க. ஒரு நோன்பை அனாமத்தா விரட்டி விரட்டி அடிக்கிறீங்களேடா பாவிங்களா? நல்லாயிருப்பீங்களா?"

"ஏ கிளவி. நீ அந்தக் காலத்துப் பொம்பள. உனக்கு இந்தக் காலத்தைப் பத்தி என்ன தெரியும்?"

"அப்போ நான் கேக்குறதுக்கு நீ பதில் சொல்லுல. உங்க காலத்துல முப்பதாவது நோன்புன்னு ஒண்ணு உண்டுமா? இல்லையா?"

"இங்க பாரு. பெரிய கிறுக்கி மாதிரி பேசாத! உனக்கு அல்ஹம்து பாத்தியாவே முழுசா ஓதத் தெரியாது. அப்படியே ஓதினாலும் அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது! பெரிய ஆலிம்கள் சொல்றாததான் உங்கிட்டே வந்து சொன்னேன். நீ என்னவோ அவங்களயெல்லாம் மிஞ்சின பெரிய ஆளுங்க மாதிரி பேசுறியே?"

ஹஸீனாவுக்கு கோபம் இன்னமட்டுக்கும் என்றில்லை. நவாஸ் ஹஸீனாவின் மருமகள் வயிற்றுப் பேரன்தான். ஆனாலும் இந்தப் பெருநாள் பிறை பார்க்கிற விஷயத்தில் சமீப காலமாக வலியத் திணிக்கப்பட்டு வருகிற அறிவுபூர்வமற்ற குழப்பங்களைக் கண்டு மன வெகுண்டு போயிருக்கிறாள். இப்போது அவளின் மருமகள் வயிற்றுப் பேரனும் இந்தக் குழப்பத்தைப் பேசுவதுடன், அவளை வேறு கிறுக்கி என்று கூப்பிட்டு விட்டான். அவளுக்கு வந்த ஆத்திரத்தில், என்ன பேசியும் இவனை ஜெயிக்க முடியாது என எண்ணியவளாக அவனை என்ன மாதிரி அடித்து விரட்டுவது என்று யோசித்து, முதலில் சமையலுக்கென்று வாங்கி வைத்திருக்கிற அந்தப் பெரிய வாழைக்காயைக் கையிலெடுத்து அவன் மீது வீசினாள். ஆத்திரத்தில் வீசியதில் அது குறி தவறி வந்தது. நவாஸ் அதைக் கண்டு பயந்தவனாகத் தப்பிக்க நினைத்துக் குனிகையில், குறி தவறி வரும் வாழைக்காய்க்கு சரியான தாக்குதல் தளம் ஒன்று கிடைக்க அது நேராக அவன் தலையைத் தாக்கியது. "உனக்கு உண்மையாக கிறுக்கு பிடிச்சிட்டுதுளா!" என்று கூச்சலிட்டபடி தெருவில் பாய்ந்து விட்டான் அவன்.

ஹஸீனா பெத்தாவின் வேதனை பெருகியது. வரவர இப்போது நோன்பை யாருமே மதிப்பதில்லை என்று ஆகிவிட்டது. கொஞ்சமாக ஓதிப் படித்துவிட்டுப் பெரிய தலைவனாகவும், பெரிய இமாமாகவும் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு இந்த நோன்புக் காலத்தைப் பெரிய ஆயுதமாகப் பலபேரும் எடுத்துக்கொண்டார்கள் என்று அவள் கருதினாள். முன்பெல்லாம் ரமழான் நோன்பு 30 வரை வந்தால், அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஹஸீனாவுக்கு வெளியுலக அறிவும் உண்டு. பிறை பூமியைச் சுற்றி வருவதை அவள் அறிவாள். இந்த சுழற்சிக் கனக்கில் சில சமயங்களில் ரமழான் நோன்பு 29 வரையே நீளும். எப்படிப் பார்த்தாலும் காலண்டரில் எந்த நாளில் பெருநாள் என்று அறிவிப்பு இருக்குமோ, அந்த நாளில்தான் பெருநாள் கொண்டாடப்படும். சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்பவை எத்தனை மணிக்கு என்று மட்டும் அல்லாமல் எத்தனாவது நிமிஷத்தின், எத்தனாவது வினாடியில் ஆரம்பமாகும், ஆரம்பமான கிரகணங்கள் எவ்வளவு நேரம் நீடித்து எத்தனாவது மணி நேரத்தில், எந்த வினாடியில் நிறைவுறும் என்பதையெல்லாம் உலகம் கண்டுணர்ந்து விட்டது என்பதையெல்லாம் ஹஸீனா அறிந்தே இருக்கிறாள்! இவ்வளவு துல்லியமான விவரக் குறிப்புகள் இருக்கும்போது மூட ஜனங்கள் ஏன் இத்தனை பித்தலாட்டம் ஆடுகிறார்கள் என்பது அவள் சிற்றறிவுக்குப் புரியவில்லை. பதற்றமில்லாமல் சாவகாசமாக அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அந்தப் பெருநாள்களை அவல் அறிவாள். அவற்றை அவள் ஆரத் தழுவி வரவேற்பாள். நோன்புடன் அனைத்தும் நிறைவாகி பொலிவுடன் வருகின்ற அந்தப் பெருநாள்கள் ஊரில் பெருக்கோட வைத்த மகிழ்ச்சியை, பரவசத்தை, குழந்தைகளின் உற்சாகத்தை, அவற்றைத் தனக்குள் அடைக்க முடியாமல் அவள் மனம் இன்புறத் தவித்த அந்தப் பேரனுபவத்தை இனி அவள் எப்போது காண்பாள்? இனி எப்போதுதான் உணர்வாள்? நிஜத்திற்குத் திரும்பி வராத அவள் கனவுகள் அவளை ஏதும் செய்துவிடக் கூடுமோ?

போன வருஷம் அந்தக் கூத்து எவ்வளவு மோசமானது? அந்தக் கசப்பு இப்போதுவரை வருகிறது அவள் நெஞ்சில். 29வது நோன்பு முடிந்த கையோடு வானம் பார்த்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் அது நிகழக் கூடியதுதான். சும்மா ஒரு ஆர்வப் பரபரப்பு மட்டுமே அது. பிறை தெரியவில்லை. அதில் யாருக்கும் ஏமாற்றமுமில்லை. வழக்கம்போல் 30வது நோன்புக்காக எல்லோரும் சஹர் சாப்பாடு எடுத்துக் கொண்டார்கள். ஹஸீனா பெத்தா அன்று சந்தோசமாக உணர்ந்தாள். கடந்த நான்கு வருடங்களாக முப்பதாவது நோன்பே கிடைக்கவில்லை. இந்த வருசமாவது முப்பதாவது நோன்பு கிடைத்தால் மாபெரும் தித்திப்பு. இனி நோன்புக்காக ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும்! ஓ, எவ்வளவு பெரிய இடைவெளி? அடுத்த ஆண்டில் நாம் நோற்க அந்த நோன்பு கிடைக்குமா? இல்லையேல் நம் கணக்கு முடிந்து விட்டதென்று நம் முன்னே இஸ்ராயில் வந்து நின்று மண்ணறைக்குள் தள்ளிவிட்டு விடுவார்களோ? யார் கண்டது? இதுவே தன் வாழ்நாளின் இறுதி நோன்பாகவும் இருந்து விடலாம் என்ற அச்சத்தில் இன்னும் திடமாக அல்லாவிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author