பிறைக்கூத்து (4)

ரணகளாமாகிவிட்டது பள்ளிவாசல். மைக்கை யாரோ பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். ‘இன்று பெருநாள்’ கோஷ்டியும், ‘நாளை பெருநாள்’ கோஷ்டியும் வாயடி, கையடி, காலடி, தலையடி என்ற வெகுஜன சண்டைக் காட்சிகளின் பல்வேறு கூறுகளிலும் கலந்தன. இதிலே ‘நாளை மறுநாள்தான் பெருநாள்’ என்கிற கோஷ்டியிலுள்ள ஹஸீனா பெத்தாவும் மாட்டிக்கொண்டாள். தன் கோஷ்டி ஆண்கள் யார் யாரென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் ஏசவும், அடிதடி செய்யவும், ஒருத்தரை ஒருத்தர் உருட்டி மிதிப்பதுமான வழியைத்தான் கண்டிருந்தார்கள். இதிலே தான் இப்போது சம்பந்தபட முடியாது என்று தெருவோரம் ஒதுங்கிச் செல்ல ஹஸீனா முயன்றபோது ஒரு தடிமாட்டுப்பயல் வந்து அவள் மீது விழுந்தான். அவன் யாரென்று பார்த்து மனங்குளிரத் திட்டவேண்டுமென்று ஹஸீனா முயற்சிக்கும்போது துண்டைக் கணோம், துணியை காணோம் என்று அவன் பறந்தடித்து ஓடினான். அப்படியும் அவனை விட்டுவிடாம மேலும் சிலர் துரத்தியபடி..! தன் முகம் காட்டாமலே தப்பித்து விட்டான் என்பதால் அவனைச் சபித்தாள். "நாசமா போ!"

சிலர் தென்னை மட்டைகளையும், ஊனு கம்புகளையும் தூக்கிக்கொண்டு வந்தபோது அவர்களெலாம் ஒரே கோஷ்டியாய் வந்து யாரோ ஒருவனைப் பிய்த்து வீசப் போகிறார்கள் என்று அரண்டாள். ஆனால் அவர்களுக்கு உள்ளாகவே ஒருவரையொருவர் அடித்தார்கள். ‘எம்மா, எப்பா’ என்கிற அலறல்களின் ஊடே ‘குடல உருவுல’ என்கிற கட்டளைகளும் பறந்தன. ‘கொல்றாங்க.. கொல்றாங்க’ என்றபடி ஒருவன் பள்ளிவாசல் படியில் உருண்டான். அவன் உருண்டு கீழே விழவும் மூன்று பேர் அவன் மீதேறி சவட்டினார்கள். ஒரு வலுவான காலின் கீழே மாட்டிக்கொண்ட அவனின் முகம் சப்பையாக நசுங்கியது. அவன் அணிந்திருந்த தொப்பி மண்ணோடு மண்ணாகப் புதைந்தது. ஹஸீனா பெத்தா "ஏ அவன விடுங்க. அவன விடுங்கல, செத்துகித்து தொலஞ்சிடப் போறான்" என்று அபயக்குரல் விடுத்தாள். "பொம்பளைக்கு இங்க என்ன வேல? போக்கம்மா!" என்று ஒருவன் தள்ளி விட்டான். ‘ஏ என்னப் பெத்தா அல்லாவே’ என்று சத்தம் போட்டுக் கொண்டே பாதுகாப்பான இடம் தேட அவள் முயற்சி செய்தபோது, மேலும் சில பெண்கள் அலறிக்கொண்டு அவள்மேல் விழுந்தார்கள். ஹஸீனாவும் அவர்களும் ஒட்டுமொத்தமாய்க் கீழே விழுந்தபோது, கை கலந்த ஆண்கள் அந்தப் பக்கமாய் வேஷ்டி, கைலி அவிழ உருண்டு அலங்கோலமானார்கள். பெண்கள் கண்களைப் பொத்திக் கொண்டு ஓடினார்கள். ஆனாலும் யுத்தகளம் பள்ளி வாசலையும், தெருவையும் முழுசாக அடைத்து விட்டிருந்ததால் யாரும் எங்கேயும் தப்பிச் செல்ல முடியவில்லை. இப்படியாக உயிர் பயம் கவ்வ எப்படியோ தட்டுத் தடுமாறி எழுந்த ஹஸீனாவின் கண் முன்னே அவளின் மருமகன் இரண்டு பேரால் அடிபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். தன் ஈரக்குலையில் பாதுகாத்த மருமகன், இப்படிப் படுகிற அடியைக் கண்டு யானைபலம் கொண்டதைப் போல அடிப்பவர்களை இடித்துத் தள்ளினாள். அவர்கள் தடுமாறிச் சாய மருமகனைத் தள்ளிக்கொண்டு போனாள். "மாமி என்னைய விடுங்க. தேவடியாப் பசங்களோட உடலா உருவிட்டு வந்திர்றேன்" என்று மருமகன் கூச்சல் போட, "கெட்ட வார்த்தை சொல்லாதீங்கோ, வாய்ப் பொய் கழுவிட்டு வாங்க" என்று வேண்டுகோள் விடுக்க, அவள் மருமகனை அவள் கையிலிருந்து யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். தன் கண்களை நம்பவே முடியவில்லை. என்ன மாயமோ, மருமகன் எந்தத் திசைக்கு அல்லது யார் காலடியின் கீழ் போனார் என்பது தெரியாத நிலையில், ஹஸீனா ஆளரவமற்ற தனித்ததொரு உலகின் இருட்டுக் குகைக்குள் சிக்கிவிட்டவள் போல பித்துப் பிடித்த நிலையில் தலையிலே அடித்துக்கொண்டு அழுதாள்.

யார் யார் என்னென கோஷ்டிகள் என்கிற குழப்பத்திற்கிடையில் ஒரு யூகத்தின் பேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை அடித்தபடியிருந்தார்கள். பெண்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தத்தம் கணவரை, தத்தம் பிள்ளைகளை, தத்தம் சகோதரர்களைக் காப்பாற்ற வேண்டிய, காப்பாற்றியே தீரவேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள். கணவனும் தன் தம்பியும் மல்லுக்கட்டி உருண்டதற்காகப் பக்கத்திலேயே நின்று ஓலமிட்டு அழுதாள் ஒரு பெண். இருவரையும் பிரிக்கக்கூடிய வலு அவளிடம் இல்லை. ஆனால் அவர்கள் இருவருமே இன்று பெருநாள் கோஷ்டியில் இல்லை, என்பது மல்லுக்கட்டும்போதே நிகழ்ந்த அவர்களின் சமரசப் பேச்சிலிருந்து தெரிந்தது. "மச்சான், நாளைப் பெருநாளா, இல்லே நாளைக் கழிச்சி பெருநாளான்னு நாம் நாளைக்கு சண்டை போட்டுக்கலாம் இப்போ என்னை விடுங்க மச்சான்! என் கழுத்து வலிக்குது!" என்றான் மைத்துனன்.

"நாளைக்கு சண்ட போட என் உடம்புல வலு இல்ல. இப்ப கட்டிப் புரண்டுட்ட வரைக்கும் கணக்க இன்னைக்கே சரி பார்த்துருவோம்" என்றான் மச்சான்.

"அப்படின்னா இன்னைக்கு பெருநாள் கொண்டாடுறவனுக்கு கொண்டாட்டமா போயிரும். அதுக்காகவாவது என்னை இப்போ விட்டுருங்கோ!" என்றான் மைத்துனன்.

இதுவும் நியாயம்தான். மச்சானால் இந்த நியாயத்தை ஒதுக்கித் தள்ள முடியவில்லை என்பதால் இருவரும் பிரிந்து நின்று, வீறு கொண்ட காளைகளாய் ஒன்று சேர்ந்து இன்னொருவன் மீது பாய்ந்தார்கள். கூச்சல் அதிகாமன அளவுக்கு இரத்தம் தெருவில் சிந்துவதும் அதிகரித்தது. பலருடைய சட்டைகளும் கிழிந்து தொங்கின; அவரவர் தலையும் கலைந்து பேய் வடிவெடுத்திருந்தார்கள். சிரித்து விளையாடியபடி வந்த குழந்தைகளும், பையன்களும் இப்போது அலற ஆரம்பித்திருந்தார்கள். யாருடைய அலறல், யாருடைய சப்தம் என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் சண்டைக் களத்திற்குள்ளும் புக முடியாமல் பெண்களின் படு பெரும்பாடாகிவிட்டது. தன் மகனை இழுக்க முயற்சி செய்த ஒரு பெண்ணின் சேலை ஒரு ஏழு விநாடி நேரத்திற்குள் மூன்று துண்டுகளாக் கிழிந்துவிட்டது. அவமானமாய் உணர வீட்டை நோக்கி விரைய முயற்சி செய்தாள்.

எல்லோருடைய கால்களிலும் இருந்து செருப்புகள் கழன்று சிதறிக் கிடந்தன. இப்பொது பள்ளிவாசலின் முன் அடிதடி கலாட்டாக்கள் குறைந்திருந்தன; ஆண்களும் அவ்வளவாக இல்லை. ஆனால் தெருதோறும் சண்டையும், கூச்ச்சலும் கலந்து பெரும் அச்சத்தைத் தோற்றுவித்தன. அதே சமயத்தில் ‘நாளை பெருநாள்’ கோஷ்டியில் இருந்து ‘இன்று பெருநாள்’ கோஷ்டிக்கும், ‘இன்று பெருநாள்’ கோஷ்டியிலிருந்து ‘நாளை பெருநாள்’ கோஷ்டிக்கும், ஆட்களை எழுத்துச் செல்லும் முயற்சிகளும் நடந்தன. அடி தாங்காமல், உதை தாங்காமல், இரத்தம் வடிந்து சட்டை கிழிந்த நிலையில் அவமானமாய் உனர்ந்த சிலர் கோஷ்டிமாறி தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள். எனவே, சண்டைகள், வியூகங்கள் மாறி ஒரே கோஷ்டியாரே தத்தமக்குள் அடிக்கவும் உதைக்கவும் ஆயினர்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author