பீடம் (1)

பீடத்தின் மேல் சிவப்பு நிறப் பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் மலர்கள் அலங்காரமாக அடுக்கப்பட்டு மண்ணால் ஆன கலசம் இருந்தது. அதற்கும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பீடத்தைச் சுற்றி இருந்தவர்களின் கவனம் பெரும்பாலும் அந்தக் கலசத்தின் மீதுதான் இருந்தது. அவர்கள் எழுப்பிக் கொண்டிருந்த இசையின் சத்தம் நேரத்திற்கு நேரம் கூடிக் கொண்டேயிருந்தது. ஒரு சிலர் கண்களை மூடியிருந்தனர். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் ஒரு வளைவான கோட்டைப்போல அவர்கள் கன்னத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிலர் உணர்ச்சி வசப்படுவதைப்போல முகபாவங்களை வைத்துக் கொண்டனர். ஆனால், எந்த அளவிற்கு அவை நம்பத் தகுந்தவை என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தச் சூழலின் சத்தம் எனக்குள் எந்த மாற்றத்தையும் செய்யவேயில்லை.

நான் குழப்பத்திலும் கவலையிலும் மூழ்கியிருக்கிறேன். இதோ, இந்தக் கலசத்தில் இன்று எலும்புகளாகவும் சாம்பலாகவும் இருக்கும் குருநாதன் இல்லாத ஒரு கணம் உருவாகும் என்றும், எதிர்பார்க்காத ஒருநாள் எல்லோரையும் அழைத்து "அடக்கம் ஆயிரம் பொன்" என்று சொல்லிவிட்டு இந்த உலக வாழ்க்கையை விட்டுப் போவார் என்றும் நான் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. எது உண்மை? எது பொய்? எது வாழ்க்கை? எது மரணம்? எது நிலைப்பது? எது மறைவது? எதுவும் அவரிடமிருந்து அறிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்கிற வருத்தம் என் நினைவுகளில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டது. இதோ, இன்னும் சில நிமிடத்தில் இந்தக் கலசமும் சமாதிக்குள் போய் மறைந்துவிடும். அப்புறம் நான் என்ன செய்வது? நான் எவ்வளவு மோசமான சீடன்? இதோ இருக்கும் பலரும் தங்கள் கனவுகளில் குருவைக் கண்டதாகச் சொல்கிறார்களே? சிலர், அவர் சத்சங்கத்துக்குச் சொல்லச் சொன்னதாகப் பல அறிவுரைகளை வழங்குகின்றனரே? எனக்கு ஏன் அவை நிகழவில்லை? தகுதியில்லாத ஒரு ஆத்மாவாகிப் போனேனே? அவர் இருந்தபோது அவர் அருகில் நெருங்கி இருந்து அவர் மகிமைகளைக் கண்டவன் ஆயிற்றே நான்! அப்படி இருந்தும் எனக்கு ஏன் இவையேதும் நிகழவில்லை?

இதோ, அந்தக் கலசம் அங்கிருந்து அகன்றவுடன் அந்தப் பீடத்தில் யார் அமர்வது என்பது ஒரு கேள்வியாகியிருக்கிறதே. அதையாவது அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். இவ்வளவு நேரம் உரத்தக் குரலில் பாடிக் கொண்டிருந்த சிலர் அதை அடைய விரும்பலாம் அல்லது அந்தத் தகுதி அவர்களுக்கு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை அதன்பொருட்டு அவர்களுக்குள் மோதல்கூட எழலாம். அதற்கான முகாந்திரங்கள் அவர்கள் சொல்லும் கதைகளில் தெரிகின்றன. பீடம் சிறியதோ பெரியதோ அதன்மேலான இச்சை மட்டும் நிரந்தரமானதாக இருக்கிறது. இந்தப் பீடத்திற்கெனச் சொத்துக்கள் அதிகம் இல்லாதது போட்டியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஆனாலும் பீடத்தின் மேலான அதிகாரம், கௌரவம் ஆகியவற்றின் வலிமை கொஞ்சம் பெரியதுதான். அதை நோக்கி, தங்களைக் குருவின் நிலையில் வைத்துப் பார்ப்பதும், தன் கால்களில் மற்றவர்கள் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதுமான கனவுகள் ஒருசிலரின் விழிகளில் வெளிப்படையாகவே தெரிந்தன. நான் குழப்பமும், கவலையும் உடையவனானேன். நான் அடுத்து என்ன செய்வது?

*****

அவர் சத்சங்கத்தில் சொன்ன ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் ஏதோ ஒரு செய்தி இருந்தது. அதைக் கூர்ந்து கவனிக்கும் யாரும் புரிந்து கொண்டுவிடலாம். அப்படித்தான் ஒருநாள் அவர் ஒரு கதை சொன்னார். இல்லையில்லை, இரண்டு கதை சொன்னார். இரண்டு கதைகளும் குரு சிஷ்யன் உறவினைப் பற்றியவை. முதல் கதை தனது மரணம் பற்றியும் மறுபிறப்பு பற்றியும் அறிந்த ஒரு குருவினைப் பற்றியதாக இருந்தது.

குருவுக்கு மரணம் நெருங்கிவிட்டது. அடுத்த பிறவியில் தான் பன்றியாகப் பிறக்கப்போவதை அவர் அறிந்துவிட்டார். உடனே தன் சீடர்களை அழைத்து, "சீடர்களே! எனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது. அடுத்த பிறப்பில் நான் பன்றியாகப் பிறக்கப் போகிறேன். எனக்கு அந்த இழிபிறப்பில் வாழ விருப்பமில்லை. எனவே, சீடர்களாகிய உங்களிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், எப்பாடுபட்டாவது நான் பிறக்கும் இடத்தை உங்கள் தபோவலிமையினால் அறிந்து, அங்கு வந்து என்னைக் கொன்று அந்த இழிபிறப்பிலிருந்து என்னை விடுவியுங்கள்" என்று சொல்லிவிட்டுச் செத்துப் போனார். சீடர்கள் அந்தக் கணம் முதல் அவரைத் தேடும் யோகத்தில் இறங்கினர். ஆனால், கண்டுபிடிக்கச் சில வருடங்கள் ஆகிவிட்டன. பன்றி வடிவிலிருந்த குருவை அவர்கள் கண்டுகொண்டு கொல்ல முனைந்தபோது குரு அவர்களைத் தடுத்தார்.

"சீடர்களே! நீங்கள் என்னைக் கொல்ல வேண்டாம்! இதோ, இந்தப் பிறப்பில் நான் மிக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இது என் மனைவி, இவை என் மக்கள். எந்தப் பிறப்பும் இழிபிறப்பில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, என்னைக் கொன்று இவர்களை நீங்கள் அநாதைகளாக்கி விடவேண்டாம்" என்று வேண்டிக் கொண்டார். குருவின் பேச்சை மதித்துச் சீடர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இவ்வாறு முதல் கதை முடிந்தது. இத்தோடு விட்டிருந்தால்கூடப் பிரச்சினையில்லை. அவர் அடுத்து ஒரு கதையைச் சொன்னார்.

அடுத்த கதையில், குரு ஒருவர் வயசாகி இறக்கும் தறுவாயில் இருந்தார். அவர் அருகிலேயே அமர்ந்திருந்த சீடன் அவருக்கு ஏதாவது கடைசி ஆசையிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு அவர் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால், அவர் உடல் அதை அனுமதிக்கவில்லை. அந்த வேளையில் தெருவில் பெண்ணொருத்தி இலந்தைப் பழம் விற்றுக்கொண்டு சென்றாள். குரு இலந்தைப்பழப் பிரியர். அவர் கண்களில் ஓர் ஒளி பரவியது. அடுத்த கணம் அவர் உயிர் பிரிந்தது. குரு ஏதோ சொல்ல விழைந்தார்; ஆனால் முடியவில்லை; அவர் கண்களில் கடைசியில் ஓர் ஒளி தெரிந்தது; ஆனால், அதன் காரணத்தை அறிய முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற சீடன் தியானத்தில் அமர்ந்தான். தனது தவ வலிமையால் குருவின் ஆன்மா எங்கு உள்ளது என்று தேடினான். நல்ல சீடனான அவனுக்குக் குருவின் இரகசியம் ஒரு கணத்தில் புரிந்து போனது. சாகும் தறுவாயில் கொண்ட கணநேர ஆசையின் விளைவாகக் குரு அந்த இலந்தைப் பழக்கூடையில் ஒரு புழுவாகப் பிறந்திருப்பதை அறிந்தான். அந்த இலந்தைப் பழம் விற்கும் பெண்ணின் பின்னால் ஓடினான். கையில் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஒட்டுமொத்தப் பழங்களையும் வாங்கி வந்தான். பின்பு, ஒவ்வொரு பழத்தையும் நசுக்கி நசுக்கிப் பார்த்தான். அவற்றுள் குரு புழுவாகப் பிறந்திருந்த பழத்தையும் கண்டுபிடித்தான். பழத்தைப் பிதுக்க, வெளியே வந்த புழுவைப் பட்டென்று நசுக்கிக் கொன்றான். ஈனப் பிறவியிலிருந்து விடுதலை பெற்ற குருவின் ஆன்மா சீடனை வாழ்த்தி விண்ணுலகம் சென்றது. இவ்வாறு இரண்டாவது கதையைச் சொல்லி முடித்தார்.

இரண்டு விதமான குருநாதர்கள். இரண்டு விதமான சீடர்கள். இவர்களில் நாம் யாராக இருப்பது? அதை அவர் சொல்லவேயில்லை. காலமெல்லாம் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. கேள்விகளை நம்முன் வைத்துவிட்டுப் போகும் குருவைத் தேடிக் கண்டடைவதுதான் சீடனின் பணி என்று.

******

ஜன நடமாட்டம் குறைந்துபோன மலைப்பகுதிக்குள் நடக்கும்போது அந்தப் பகுதிக்கு ஏற்கெனவே வந்துபோனதன் நினைவுகள், சுற்றி உள்ள மரங்களின் பசுமையைப் போலவே மனதுள் நிறம் மாறாமல் படிந்திருக்கின்றன. அன்று குரு பூஜை. மலையடிவாரத்தில் இருந்த அரண்மனையில் நடந்தது. சாப்பிட்ட அசதியில் அனைவரும் உறங்கிப் போயினர். எனக்குத் தூக்கம் வரவில்லை. நான் குருவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று குரு என்னிடம், "கொஞ்சம் காலார நடந்துட்டு வரலாமா?" என்றார். "சரி" என்றேன். பக்கத்தில் நடப்பார் என்று பார்த்தால் மெல்ல மெல்ல நடந்து மலையேற ஆரம்பித்துவிட்டார். அவர் போகிறதை யாரும் தடுக்கும் வழக்கம் இல்லை. நான் அவர் பின்னாலேயே ஒரு நிழலைப்போலச் சென்றேன். அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் குளிர்காற்று வீசத் துவங்கிவிட்டது. இந்த மலைப்பகுதியில் இது சாதாரண நிகழ்வுதான் என்றபோதும் எனக்குள் அது ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவர் கால்கள் நேரம் ஆக ஆக வேகமாக நடக்கத் துவங்கிவிட்டன. நான் ஓட்டமும் நடையுமாகத்தான் நடந்து வந்தேன். அவர் என்னை நோக்கி,

"கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளலாமா?" என்றார்.

எனக்கு வெட்கமாக இருந்தது.

"பரவாயில்லை ஸ்வாமி!"

அவர் கண்களில் ஒளி கூடியிருந்தது. அவர் மகிழ்வின் எல்லையில் இருக்கும் காலங்களில் இந்த ஒளி பிரத்தியட்சமாகத் தெரியும்.

"நாம் எங்கு போறோம் தெரியுமா?"

"எங்கு ஸ்வாமி?"

"சொல்கிறேன். நாம் எங்கு வருடக்கணக்கில் தவமிருந்து இறைவனைத் தரிசித்தோமோ அங்கு" என்று சொல்லிச் சிரித்தார். அதன்பின் மௌனமாகி விறுவிறுவென்று நடக்கத் துவங்கினார். நான் பின்னால் சென்றேன். மலையில் ஒற்றையடிப் பாதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வந்தன. குரு பழக்கப்பட்ட சாலையில் நடப்பவரைப்போல வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகளில் இந்த மலை, தன் வழிகளை அழித்துக் கொள்ளவில்லையோ என்று பட்டது. சட்டென்று ஓரிடத்தில் நின்றார். என்னை நோக்கி,

"உனக்கு ஏதாவது அழுகுரல் கேட்கிறதா?" என்றார்.

நான் மிகக் கவனமாகக் கேட்டேன். ஒரு பெண்ணின் விசும்பல் ஒலி கேட்டது.

"வா! இந்தப் பக்கம்தான் கேட்கிறது" என்று ஒரு பாறையின் மறுபக்கம் சென்று, அதைக் கடந்து போனார். அவர் யூகம் சரிதான். அங்கு ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது. அது அவள் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும். அம்மா அழும் காரணமறியாமல் அதுவும் அழுது கொண்டிருந்தது. அவர்கள் அருகில் ஒரு ஆண் படுத்துக் கிடந்தான். அவன் உடலில் அசைவுகள் இல்லை.

"என்ன ஆச்சும்மா? இங்க என்ன பண்றீங்க?" என்று குரு அவர்கள் அருகில் சென்று விசாரித்தார். அவள் இவரைக் கண்டதும் என்ன நினைத்தாளோ! அவர் கால்களில் விழுந்துவிட்டாள்.

"சாமி! எங்களக் காப்பாத்துங்க! குலதெய்வத்துக்குப் பொங்கல் வைக்க வந்தோஞ்சாமி. வச்சிட்டு வரும்போது மயக்கமடிச்சு விழுந்துட்டாரு சாமி. என்னனே புரியல!"

கண்களால் என்னை நோக்கி என்ன என்று பார்க்கும்படிக் கூறினார்.

நான் அந்த ஆளின் கரங்களைப் பற்றினேன். கை சில்லிட்டிருந்தது. நரம்புகளில் இருந்து ஏதாவது நம்பிக்கை ஒலி பிறக்கிறதா என்று பார்த்தேன். ஆனால், ஒன்றும் இல்லை. அவன் இறந்து போய்விட்டான். இதை இந்தப் பேதைப்பெண் எப்படித் தாங்கப் போகிறாள் என்பதைவிட, இவளிடம் எப்படிச் சொல்வது என்பது எனக்குப் பெரும் சுமையாக மாறிவிட்டது. நான் கையறுபட்டவனைப்போலக் குருவைப் பார்த்தேன். என் கண்களின் மொழி அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் புன்னகை மாறாமல் இருந்தார்.

"சரி சரி அழாதேம்மா! குலதெய்வத்தக் கும்பிட வந்த ஒன்ன அந்தக் குலதெய்வம் காப்பாத்தாம விட்டிருமா என்ன? கவலப்படாதே! எல்லாம் சரியாயிடும்" என்று தேற்றினார். எனக்குப் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. ‘எப்படி ஸ்வாமி’ என்பதைப்போல அவர் விழிகளைப் பார்த்தேன். அவர் பார்வையில் எந்த மாறுதலும் இல்லை.

"ஏம்மா பொண்ணு! குழந்தைய அவனிடம் கொடு. இந்த பாறையத் தாண்டி இப்படிப் போனால் ஒரு சின்ன சுனை வரும். அதில இருந்து கொஞ்சம் தண்ணி கொண்டு வா, உன் புருஷன் எழுந்திருவான்" என்றார்.

–முடிவு அடுத்த வாரம்...

About The Author