புராணத் துளிகள் – இரண்டாம் பாகம் (1)

பல லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய 18 புராணங்களையும், உப புராணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் படிப்பதற்கு ஒரு ஆயுள் போதாது. அதை முறையாக விளக்குவதற்குப் போதிய பண்டிதர்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்து விட்ட இந்த நாட்களில் சில முக்கிய பகுதிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பலருக்கும் உண்டு. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் புராணத் துளிகள் – முதல் பாகம்நிலா புக்ஸ்‘ மூலம் வெளியானது. இதோ இரண்டாம் பாகம்!

பிரம்மாவின் வம்சம்

மரீசி, நாரதர், அத்திரி, புலஸ்தியர், புலகர், கிருது, தக்‌ஷன், வசிஷ்டர் ஆகிய அனைவரும் பிரம்மாவின் பிரசித்தரான புத்திரர் ஆவர். இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார். தக்ஷனுடைய பதின்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர். அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர். ஏனைய மானுடர், மிருகங்கள், சரபங்கள் முதல் பலவகை சாதி பேதங்களாயுள்ள உயிர்கள் எல்லாம் உண்டாயின. பிரம்மனுடைய சரீரத்தில் வலப்பாதியில் ஸ்வாயம்பு மநுவும் இடப்பாதியில் சதரூபி என்கிற பெண்ணும் உண்டாயினர். சதரூபி என்பவளுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு பிள்ளைகளும், அதிக சுந்தரிகளான மூன்று பெண்களும் பிறந்தார்கள். இவ்வண்ணம் பிரம்ம வம்சம் விருத்தியானது.

-ஜனமேஜய மஹாராஜனிடம் வியாசர் கூறியது.

‘தேவி பாகவதம்’ மூன்றாம் ஸ்கந்தம், அத்தியாயம் 13.

சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்?

சுக முனிவர் மிதிலை நகருக்கு வந்தபோது துவாரபாலகன் ஒருவன் அவரிடம் சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்? சுபத்தை வேண்டுபவனால் செய்யத்தக்கது என்ன? இவற்றை நன்றாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சுகர் இப்படிப் பதில் கூறுகிறார்:-

எல்லா உலகங்களிலும் இரண்டு விதமிருக்கிறது. அதிலிருக்கும் பிரஜைகளும் ராகி, விராகி என்று இரண்டு விதமாக இருக்கின்றனர். அவர்களுடைய சித்தமும் இரண்டு விதம். இவர்களுள் விராகி என்பவர் அறிந்தவர், அறியாதவர், அறிந்தும் அறியாதவர் என மூன்று விதமாய் இருப்பர். ராகி என்பவர் மூர்க்கர், சதுரர் என இரண்டு விதமாயிருப்பர். அந்தச் சதுர்ப்பாடு சாஸ்திர விசாரத்தால் வருவதாகிய சாமர்த்தியம், புத்தி சூக்ஷ்மத்தால் வருவதாகிய சாமர்த்தியம் என இரு வகைப்படும். அந்த புத்தியானது யுக்தம், அயுக்தம் என இரு வகைப்படும்.

இதைக் கேட்ட துவாரபாலகன், தான் அர்த்த ஞானமுடையவன் இல்லை என்று கூறி சுகர் கூறிய சொற்களுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டுகிறான். உடனே சுகர் விளக்கத்தை அளிக்கிறார் இப்படி:-

"எவனுக்கு சம்சாரத்தில் விருப்பம் இருக்கிறதோ அவன் ராகி எனப்படுவான். அவனே எல்லாவற்றிலும் மோகம் அடைகின்ற மூர்க்கன். அவனுக்குச் சுக துக்கங்கள் அநேக விதமாய் இருக்கின்றன. என்னவென்றால், தனம், புத்திரன், செல்வம், மனைவி, மானம், விஜயம் முதலியவற்றையும் காரிய சாதனத்தையும் பெறுவதனால் சுகமும், இவற்றைப் பெறாததால் துக்கமும், நிமிஷம்தோறும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. அவனது செய்கைகள் எல்லாம் சுகத்தை அடைய வேண்டுமென்கிற விருப்பத்தை உடையவையாய் இருக்கின்றன. அச்செய்கைகளுக்கு மாறான செய்கைகளைச் செய்து தடைப்படுத்துகிறவன் சத்ருவாகின்றான். அச்செய்கைகளுக்குச் சாதகனாய் இருக்கிறவன் நண்பனாகிறான்.

விராகி, விஷய சுகங்களொன்றிலும் ஆசை வைக்காமல் ஏகாந்தத்தில் வேதாந்த விசாரம் செய்து ஆத்ம சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான். அவனே மோகம் அடையாத பண்டிதன். அவனுக்கு சம்சார வாழ்க்கையின் சுகம் எல்லாம் துக்ககரமாகவே இருக்கும். ஆயினும் அப்படி ஆத்ம சுகத்தை நாடுகின்றவனுக்குக் காம குரோத லோப மத மாச்சரியம் முதலிய கொடிய சத்துருக்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சத்துருக்களால் பீடிக்கப்பட்டிருப்பவனுக்கு பந்து சந்தோஷம் என்பவன் ஒருவனே! அவனைத் தவிர வேறொருவரும் மூன்று உலகிலும் இல்லை".

இப்படி சுகர் கூறியதைக் கேட்ட துவாரபாலகன் அவர் ஞானி என்று உணர்ந்து அவரை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கிறான்.

-‘தேவி பாகவதம்’ முதல் ஸ்கந்தம், அத்தியாயம் 17.

வியாசரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

ஸரஸ்வதி என்னும் பெயருடைய ப்ரஹ்ம நதியின் மேல் கரையில் சம்யாப்ராசமென்று பிரபலமானது வியாசருடைய ஆசிரமம். அங்கு ரிஷிகள் ஓயாமல் யாகங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரங்களின் வரிசைகளால் அலங்காரமுற்ற தனது அந்த ஆசிரமத்தில் வியாசர் ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்து மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கித் தன்னிலையில் இருக்கச் செய்தார்.

-சூதர் சௌனகரிடம் வியாச ஆசிரமத்தைப் பற்றிக் கூறியது.
‘பாகவதம்’ முதல் ஸ்கந்தம், அத்தியாயம் 7.

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வியாச மாமுனிவர் சம்சாரத்தில் விளையும் அனர்த்தமாகிய தாபத்ரயத்தைப் போக்கும் உபாயம் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகமே என்பதை அறியாமல் வருந்தும் உலகத்திற்கு நன்மையை விளைவிக்கும் பொருட்டு ‘ஸாத்வத ஸம்ஹிதை’ எனப்படுகின்ற இந்த பாகவத மஹா புராணத்தைச் செய்தார்.

-சூதர் சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக் கூறும்போது தெரிவித்தது.
‘கவதம்’ முதல் ஸ்கந்தம், அத்தியாயம் 7.

வேதாங்கம் ஆறு

சிக்ஷா, கல்பம், நிருத்தம், வியாகரணம், ஜ்யோதிஷம், சந்தம் என வேதாங்கம் ஆறு வகைப்படும். கிருஷ்ண பக்ஷத்தில் வேதாங்கத்தைப் படிக்க வேண்டும்.

-கூர்ம புராணம், மனு ஸ்மிருதி.

-தொடரும்…

About The Author