புராணத் துளிகள் (6)

வாஹனம் – 2 

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உள்ள வாஹனம் பற்றிய தொடர்ச்சி:-

ஷீதளா தேவியின் வாஹனம் கழுதை – ஸ்கந்த புராணம், ருத்ர யாமளம்.
(ஷீதளா தேவி வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சக்தியின் அம்சம்.)

கேதுவின் வாஹனம் புறா (மத்ஸ்ய புராணம் கேதுவின் வாஹனம் ராஜாளி என்று குறிப்பிடுகிறது.)

ப்ரம்மாவின் வாஹனம் ஹம்ஸம் – நாரதீய புராணம், ஸ்ரீமத் பாகவதம்.

ராகுவின் வாஹனம் புலி.

செவ்வாயின் வாஹனம் குதிரை.

அக்னியின் வாஹனம் ஆடு – நாரதீய புராணம்.

குபேரனின் வாஹனம் நரன் – நாரதீய புராணம். (மனிதனே குபேரனுக்கு வாஹனம். சில நூல்கள் மனிதனின் ஆவி அல்லது ப்ரேதம் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக, அவன் நர வாஹனன் என்றே குறிப்பிடப்படுகிறான்.)

சந்திரனின் வாஹனம் மான் – நாரதீய புராணம். (மத்ஸ்ய புராணத்தில் சந்திரனின் வாஹனமாக வெண்குதிரை குறிப்பிடப்படுகிறது.)

வருணனின் வாஹனம் மகரம் – விதி மார்க்க ப்ரபா. 

நவ கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியவை உலகத்தினருக்கு இதம் செய்யும் நவ கிரகங்கள்.
-வாமன புராணம், மார்க்கண்டேய புராணம், நாரத புராணம், மத்ஸ்ய புராணம், அக்னி புராணம், விஷ்ணு தர்மோத்தர புராணம், மஹாபாரதம், யாக்ஞவல்கிய ஸ்மிருதி, வைகானஸ ஸ்மிருதி சூத்ரம்.

சூரியனின் அதி தேவதை – சிவன்
சந்திரனின் அதி தேவதை – பார்வதி.
செவ்வாயின் அதி தேவதை – ஸ்கந்தன்.
புதனின் அதி தேவதை – விஷ்ணு.
குருவின் அதி தேவதை – ப்ரஹ்மா.
சுக்ரனின் அதி தேவதை – இந்திரன்.
சனியின் அதி தேவதை – யமன்.
ராகுவின் அதி தேவதை – பசு அல்லது காலம்.
கேதுவின் அதி தேவதை – சித்ரகுப்தன்
-மத்ஸ்ய புராணம். 

அழகாபுரியின் வர்ணனை!

குபேரனுடைய பட்டணமான அழகாபுரியைப் பற்றிய ஒரு சிறிய வர்ணனை இது:

ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது:-
அந்த அழகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் படிந்ததனால் மிகவும் பரிசுத்தமான, நந்தை என்றும் அலக்நந்தை என்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

வாராய் விதுரனே! தேவஸ்திரீகள் தமது விமானங்களிலிருந்து இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளுக்கு வந்து தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக் கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவ ஸ்த்ரீகள் ஸ்நானம் செய்யும்போது அவர்களது தேகங்களிலிருந்து நழுவிய புதிய குங்குமங்கள் பட்டு, பொன்னிறம் உடையதான இந்நதிகளின் ஜலத்தைக் கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் தாமும் குடித்துத் தமது பெண் யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அழகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்தினங்களாலும் செய்த பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவர்களது பெண்மணிகளும் அந்நகரில் உலவிக் கொண்டிருப்பார்கள். அத்தகையதான அந்த நகரம் மின்னல்களும் மேகங்களும் சூழப்பெற்ற ஆகாயம் போல விளங்கும்.

-ஸ்ரீமத் பாகவதம் நான்காம் ஸ்கந்தம், ஏழாம் அத்தியாயம். 

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

ஜனக மஹராஜனை சுகர் அவனது அரண்மனைக்கு வந்து சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஜனக ராஜன் கூறியது:-

சுகரே! இந்திரியங்கள் வலுப் பெற்றிருக்கும் காலத்தில், அதை அடக்குவது ஒருவராலும் முடியாது. அது அசாத்தியம். இந்திரியங்கள் பரிபாகம் இல்லாதவனைத் தாம் செல்லும் வழியில் எல்லாம் ஈர்த்து ஆசையை எழுப்பி, அறிவை ஆகர்ஷித்துக் கொண்டு பல விதமாகக் கெடுத்து விடுகின்றன. எப்படி என்றால், ஆகாரத்தின் மீதுள்ள ஆசையினாலும் சுகத்தின் மீதுள்ள இச்சையினாலும், சயனத்தின் மீதுள்ள ஆசையினாலும் எண்ணம் உண்டாக்கிக் கெடுக்கின்றன. ஆகையால், இந்திரியங்களை வைத்துக் கொண்டு சந்நியாசியாகச் சென்றால் பயன் என்ன?

பிராரப்த வாசனா பலத்தை ஜெயிப்பது என்பது பெரும் கஷ்டம். அது ஒருபொழுதும் சமனம் அடைகிறதில்லை. ஆதலால் வரிசையாக ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஈடுபட்டு அவற்றைப் பற்று அறத் துறக்க வேண்டும்.

சுகரே! உன்னதமான பிரதேசத்தில் தூங்குபவன் கொஞ்சம் சலிப்பை அடைவானாயின் கீழே வீழ்ந்தே தீருவன். கீழே தூங்குபவன் எவ்வளவு சலித்தாலும் விழ மாட்டான். அது போல, சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின் சபல புத்தி உண்டாகுமானால் அதிலிருந்து நழுவி விடுவான். மீண்டும் அவன் ஈடேற வழியில்லை.

சுகரே! எறும்புகள், பழமுள்ள ஒரு மரத்தில் அண்டி மெல்ல ஊர்ந்து உச்சியில் ஏறிச் சுவையுள்ள கனிகளைச் சிறிது சிறிதாகச் சாப்பிடுகின்றன. பறவைகளோ அக்கனிகளைச் சாப்பிடுவதற்கு வேகமாய் ஒரே பாய்ச்சலில் கனிக்குச் சமீபத்தில் சென்றும் கூட அங்கு நேரிடும் சில இடையூறுகளினால் மொத்துண்டு சிரமப்பட்டும் பயனற்றுப் போகின்றன. எறும்புகளோ அப்படியல்ல. அங்கங்கு சிரமத்தைப் பரிகாரம் செய்து கொண்டும் யாதொரு இடையூறில்லாமலும் அந்தப் பழங்களை அனுபவிக்கின்றன.

ஆதலால் எவருக்கும் மனத்தை வெல்ல முடியாது. ஏனென்றால், மனத்தைக் காலம் விடாது. ஆதலால், அந்த மனத்தை ஆசிரமம்தோறும் சிறிது சிறிதாக அடக்கி வர வேண்டும். சாந்தனாயும், ஞானவானாயும், ஆத்ம விசாரமுடையவனாயும் உள்ள புருஷன் கிருஹஸ்த ஆசிரமத்தில் இருப்பவனாயிருந்தபோதிலும் இலாபத்தில் சந்தோஷமும் நஷ்டத்தில் துக்கமும் அடைய மாட்டான். இவ்விரண்டிலும் சமபுத்தியை உடையவனாக இருப்பான்.

ஆதலால், எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.

என்னைப் பாரும்! யான் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டு, யதேச்சையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றிலும் சுகம் துக்கம் என்பது சிறிதுமில்லை. அப்படிப் பற்றற்று இருக்கின்றமையால் ஜீவன் முக்தனாய் இருக்கிறேன்.

– தேவி பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 18ஆம் அத்தியாயம் – சுக ஜனக சம்வாதம். பல ரகசியங்களை விளக்கும் அற்புதமான இந்த உரையாடல் தொடர்கிறது. 

மும்மூர்த்திகளும் ஒருவரே!

ஏக மூர்த்திஸ்த்ரயோ தேவா: ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வர: I
த்ரயாணாமந்தரம் நாஸ்தி, குணாபேத:ப்ரகீர்தித: II

ப்ரம்மா, விஷ்ணு, சிவன் – ஆகிய இந்த மூன்று தேவர்களும் ஒருவரே. இந்த மும்மூர்த்திகளின் ஸ்வரூபத்தில் ஒரு விதமான பேதமும் இல்லை. குணங்களில் மட்டுமே பேதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

-பத்ம புராணம், பூமி கண்டம், அத்யாயம் 71.

–தொடரும்…

About The Author