புரிந்துகொண்டபோது…

விளையாட்டாகத்தான் பேச்சு ஆரம்பித்தது.

"நம்ம சந்திராவை என்னைக்குப் பெண் பார்க்க வருகிறாங்க?" என்றாள் சுதா.

சந்திரா, சுதாவின் நாத்தனார். படிப்பு முடித்து… பேங்க் எக்ஸாம் எழுதி… இப்போது அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கிளார்க். அடுத்தபடி, ஆபீசர் பதவிக்குப் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

"நாளன்னிக்கு" என்றான் பாஸ்கர். "ஜாதகம் எல்லாம் பொருத்தமா இருக்கு… அவங்க குடும்பமும் நல்ல மாதிரி. பையனும் பேங்க்லதான் வேலை. அதுமட்டுமில்லே, அவங்க ஃபேமிலிலே எல்லோருமே வேலைக்குப் போறவங்க. மகன், மகள், மருமகள் இப்படி…"

"சந்திராவுக்கு என்ன குறைச்சல்? அழகு… படிப்பு… வேலை எல்லாம்தான் இருக்கே…"

"இருந்தாலும் பெண் பார்த்து விட்டுப் போகிறவரை டென்ஷன்தான்…" என்றான்.

"உங்களைக் காட்டிலும் எங்களுக்குத்தான்… என்னோட அதிர்ஷ்டம்… நீங்க பெண் பார்க்க வந்தபோதே சம்மதத்தைச் சொல்லிட்டீங்க. எல்லாரும் அந்த மாதிரி இல்லையே…"

"நான் எத்தனையாவது ஆள்… உன்னைப் பெண் பார்க்க வந்ததுல…?" என்றான் பாஸ்கர்.

"ம்… ம்… நாலாவதோ… அஞ்சாவதோ!"

"முதல் நாலு வரனும் ஏன் தட்டிப் போச்சு? உனக்கு மட்டும் என்ன குறை…?" என்றான் சிரித்தபடி.

"யாருக்குத் தெரியும்? வந்தாங்க… பார்த்தாங்க… பொண்ணுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க… போய் பதிலே போடலே. எழுதிக் கேட்டா… ஏதோ சகுனம் சரியில்லே… அது… இதுன்னு சொல்லிட்டாங்க."

"அபத்தமா இருக்கே!"

"எனக்கு எரிச்சலா வரும். என்ன செய்யறது… பெண்ணாப் பிறந்துட்டா இது எல்லாம் விதியாயிருது."

"ஆமா… அவங்க… பெண்ணுக்குச் சம்மதமான்னு கேட்டப்போ… நீ என்ன சொன்னே?"

"சரின்னுதான் சொன்னேன்…" என்றாள் தன்னிச்சையாக.

"ஹூம்… போலித்தனம் இல்லையா அது? நாலு பேர் பார்த்து… நாலு பேரையும் பிடிச்சு இருக்குன்னு சொல்லி… கடைசியில எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு…" என்றான் சீரியஸாக.

"அதுக்கு என்ன செய்யறது? எங்க சுதந்திரம் அவ்வளவுதான். அதுவும் தவிர, பிடிச்சிருக்குன்னு சொன்னா… அது என்ன முழுமனசா சொல்றதா என்ன? வார்த்தைதான். கல்யாணம் ஆகிப் பழகிய பிறகுதானே நிஜமான பிரியம் வருது ரெண்டு பேருக்கும்?" என்றாள்.

‘ஊஹூம்… என்னால ஒத்துக்க முடியலே…’ என்று சொல்ல நினைத்துப் பேசாமலிருந்தான்.

மனசுக்குள் அவனுக்கு நெருடியது.

இதற்கு முன் பெண் பார்த்துவிட்டுப் போனவர்களைப் பற்றி ஏதேனும் கற்பனை தோன்றாமலா இருக்கும்?

"வந்து பார்த்தவங்கள்லாம் எப்படி…? ரொம்ப பர்சனாலிட்டியா?" என்றான்.

இயல்பான பேச்சின் தொடர்ச்சியாகப் பதிலளித்தாள்.

"யாருக்கு நினைவிருக்கு? ஏதோ வந்தான்… பார்த்தான்… போனான்… அவ்வளவுதான். சரி… சரி… இதென்னங்க வெட்டிப் பேச்சு? பழசைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயங்கரமாகக் கோபம் வரும். நீங்க வந்திங்க. சஸ்பென்ஸ் வைக்காம உடனே சம்மதம் சொன்னீங்க. எங்க வீட்டுல எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் அதுல…" என்றாள் மலர்ச்சியாக.

பரபரப்பாக வீடு இயங்கிக் கொண்டு இருந்தது. சந்திராவைப் பெண் பார்க்க இன்றுதான் வருகிறார்கள்.

வாசலில் கார்ச் சத்தம் கேட்டது. பெற்றோருடன் வந்திருந்தான்.

அறிமுகப்படுத்திக் கொண்டதும் சந்திராவை அழைத்தனர். பொதுவாக நமஸ்கரித்துவிட்டு அவளும் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

பையனின் அப்பாதான் பேசினார் முழுக்க முழுக்க.

"என்ன… என்னோட மருமக… ரொம்ப ரிஸர்வ்ட் டைப் போலிருக்கே? வேலை பார்க்கிற பொண்ணாவே தெரியலியே!…" என்றார் ரொம்பவும் சுவாதீனமாக.

பாஸ்கருக்குச் சந்தோஷமாகி விட்டது.

பெண்ணைப் பிடித்துவிட்டது போலும். ‘ஹப்பாடி…’ என்று பெருமூச்சு விட்டான்.

"என் மருமகளுக்குப் பாடத் தெரியுமா?" என்றாள் பையனின் அம்மா தன் பங்குக்கு.

"இல்லே… முன்னால கத்துண்டது. அப்பறம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா… விட்டுப் போச்சு" என்றாள் சுதா.

"அதனால பரவாயில்லே…" என்றனர்.

ரொம்பவும் கலகலப்பாகப் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கடைசியில் எந்தப் பதிலும் சொல்லாமல் போகவும் சுதாவுக்குச் சந்தேகம் வந்தது.

"என்னங்க… ஒண்ணுமே சொல்லலியே…?"

"பைத்தியம்!… இன்னும் என்ன சொல்லணும்? அதான் மூச்சுக்கு ஒரு தடவை ‘மருமக’ன்னாங்களே!"

"இல்லே… சந்திராவுக்குப் பையனைப் பிடிச்சிருக்கான்னு கூடக் கேட்டாங்களே… அவங்க எதுவும் சொல்லலியேன்னுதான்…"

"நல்ல பதில் வரும்… பாரு…"

பதிலும் வந்தது. எதிர்பாராதது.

"சகுனம் சரியில்லை. கடவுளுடைய சம்மதம் இல்லை. சம்பந்தம் செய்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம்."

அதிர்ந்தான் பாஸ்கர். "என்ன அநியாயம்! வந்து பார்த்துட்டு, நம்பிக்கை தருகிற மாதிரி எல்லாம் பேசிட்டு…"

சுதாவும் திகைத்துப் போனாள். சந்திராவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாஸ்கர்தான் பொருமலுடன் பேசினான்.

"போறாங்க விடு! இவனைக் காட்டிலும் நல்ல வரன் வராமலா போகும்? இவனை விட்டா ஆயிரம் பேர். நாகரிகம் தெரியாதவங்க சம்பந்தமே வேணாம்! உனக்கு எதுவும் வருத்தம் இல்லியே?"

சந்திரா அலட்சியமாகச் சிரித்தாள். "ச்சே… இதுக்குப் போயி அலட்டிக்கிறதா?"

"இல்லேம்மா… வந்து… பார்த்து… சம்மதம்னு சொல்லி…" என்று இழுத்தான்.

"இந்தக் கல்யாணத்துல எனக்கு மறுப்பு இல்லைங்கிறதுக்காக… சம்மதம்னு சொல்றதுதான். கல்யாணம் ஆன பிறகுதான் அண்ணா நிஜமான பிரியம் வரும். உண்மையிலேயே, இதற்காக யாரையாவது குறை சொல்லணும்னா… இந்த மாதிரி ஆண்களைத்தான் சொல்லணும். வந்து பார்த்துட்டு… சம்மதமும் தெரிஞ்சுக்கிட்டு… பிறகு எந்தக் காரணமும் சொல்லாமே… மறுப்புச் சொல்றாங்க. அவங்களுக்குத்தான் ரோஷம் வரணும்! தாலி கட்டற வரை பெண்ணோட மனசு சுத்தமாகத்தான் இருக்கும். பிறகுதான் கணவனோட உருவம் மனசுல பதிஞ்சு போகும். அதுவரை… சம்மதம் சொல்றது எல்லாம் ஒரு சடங்கிற்காகத்தான்" என்றாள் மூச்சு விடாமல்.

தெளிவாக எதிரில் நின்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

தன்னில்தான் சிந்தனைக் குழப்பம் என்று உணர்ந்து கொண்டான்.

சுதாவை அவன் இப்போது பார்க்கையில் நேசம் இரட்டிப்பாகிப் போனது.

About The Author

4 Comments

  1. indhumathi natarajan

    உண்மை.தான்.யதார்த்தமன கதை

  2. aruna

    பென்னை சந்தெகபடிகிரவர்கலுக்கு சvukkadi

  3. sanguganesh

    அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் திரு.ரிஷபன்!!!

Comments are closed.