புல்லின் நிழல்

மாநகர ரயில்கள் தாமதமாவதில் அநேகக் காரணங்கள். தினம் ஒரு காரணம். எப்படியும் அவள் வீடு திரும்பத் தாமதமாகியே விடுகிறது. எவ்வளவு முயன்றும் நேரத்துக்கு அவளால் வீட்டில் இருக்க முடியவில்லை. தினசரி, அண்ணா அநேகமாக அவளை நிறுத்தி வைத்துக் குறுக்கு விசாரணை செய்யத் தவறுவதேயில்லை. அவனது குரூர சந்தோஷம் அது. வீட்டில் அதற்கு, பொறுப்பான அண்ணா என்கிற பாராட்டு அவனுக்குக் கிடைத்தது. அம்மாவுக்கு அதில் சிறு பெருமை கூட உண்டு.

"ஏன் லேட்டு?"

"வழக்கம்போல டிரெய்ன் லேட்டு…" என்பாள் எரிச்சலுடன்.

"உனக்கு மட்டும் எப்படித்தான் டிரெய்ன் லேட்டாகுது?… எதிர்வீட்டு கௌசல்யா சரியா நேரத்துக்கு வந்துர்றாளே?" என்பான் எகத்தாளமாய். அது உண்மையோ பொய்யோ தெரியாது. பாவம், அண்ணாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டாள் சாரதா. ஒரு வேலை என்று அவனுக்கும் புருஷலட்சணமாய் இருந்தால் அவன் இன்னும் அமைதியாக மென்மையாக நடந்து கொள்வான் என்றிருந்தது… இப்படி வீட்டில் தனிமை கரையானாய் அரிக்க எவ்வளவு நேரம்தான் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்! ஒரு கம்பியூட்டர் கிளாஸ் அது இதுவென்று போய்வரலாம்தான். ஒரு காலத்தில் டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் என்று போய் வருகிறாற்போல இப்போதெல்லாம் கம்பியூட்டர் கிளாஸ். "எல்லாம் எனக்குத் தெரியும். நான் வீட்ல சும்மா உக்காந்திருக்கேன்னு குத்திக் காட்டறியா?" என்று கோபப்படுகிறான். இவனுக்கு ஏன் இப்படி சட்டு சட்டென்று கோபம் வருகிறது? ஆவேசம் வந்தாற்போல, ஆட்டுவிக்கப்பட்டாற்போலக் கண்சிவந்து அவன் பேசுவதைப் பார்க்க பயமாய், பாவமாய் இருக்கிறது. அவனுக்கு உள்ளூர, வேலை கிடைக்கவில்லை, நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கவலை இல்லாதிருக்குமா என்ன? வீட்டில் அவனது அதிகாரம் இந்த பயத்தினால், கவலையினால் வந்தது என்று சாரதா அறிவாள்.

ஆண்களுக்குக் கோபம் அணிகலன். பெண்கள் பொறுமையை அணிந்து கொள்கிறார்கள்.
கிளம்பியபோதிருந்தே தடக் தடக் என்று தள்ளாடித்தான் ரயில் வந்தது. எழும்பூர் தாண்டியதும் நின்றே விட்டது. இடையே எங்கேயோ என்னவோ கோளாறு. ஒரு மின்சார ரயில் தாமதமாக அநேகக் காரணங்கள். மின்சாரக்கோளாறு, வழியே தண்டவாளத் தடங்கல்கள், மாற்று ரயிலுக்கு, வெளியூர் ரயிலின் அவசரத்துக்கு ஒதுங்கி வழிவிட்டுக் கிளம்ப வேண்டியிருக்கலாம். அதுவும் தவிர, இந்தத் தற்கொலைகள். நகரவாழ்வின் ஓர் அம்சமாகவே இந்தத் தற்கொலைகள் அடிக்கடி நிகழ்கின்றன. எளிய ஏமாற்றங்களுக்குக் கூட எப்படி இந்த ஜனங்கள் சிதைந்து போகிறார்கள்!… மாம்பலம் தாண்டி, சைதாப்பேட்டை திரும்புகிற வளைவு அபாயகரமானது. அங்கே அடிக்கடி தற்கொலைகள் நிகழ்கின்றன. அதை வர வர டிரைவர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ரயிலை அவர்கள் அங்கே மெதுவாகவே ஓட்டிப் போகிறார்கள் என்றாலும் திடீரென்று ரயிலுக்குள் பாய்ந்து விடுகிறவர்களை என்ன செய்ய? ரயிலுக்குத் தலை காணிக்கை செலுத்துகிற நபர்கள்!
அன்றைக்கு ஒரு சின்னப் பையன்… வயது இருபது இருபத்தியிரண்டு இருக்கும். அன்றைக்குப் பார்த்து சாரதா முன்பக்கம் டிரைவருக்கு அடுத்த லேடிஸ் கம்பார்ட்மென்ட்டில் வந்து கொண்டிருந்தாள். வேடிக்கை பார்த்தபடி வந்தவள் அவனையும் சாதாரணமாய்ப் பார்த்தாள். திடீரென்று அவன் ரயில்முன் பாய்ந்ததை அவள் உணருமுன் அவளிடமிருந்து ஒரு விநோதமான சத்தம் வந்தது. அவனிடம் சத்தமேயில்லை. யானை கரும்பு கடிக்கிறாற்போல சின்ன மளுக்.
அன்றைக்கும் அவள் தாமதமாக, மனம் நிறையச் சுமையுடன் வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது. வாழ்க்கைத் தண்டவாளத்தில் இருந்து பிறழ்ந்து விட்டவர்கள் ரயில் தண்டவாளத்துக்கு வந்து விடுகிறார்கள். “இன்னிக்கு என்ன காரணம் சொல்லப்போறே?” என்று கேட்டான் அண்ணா. தலையைக் கொடுத்தவன் முகம் அவள் நினைவுக்கு வந்தது. பெருமூச்சு விட்டாள்.
அதிகாரம் செல்லுபடியாகாத ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களோ?…

இந்த உலகம் ஆண்களிடம் இருக்கிறது. அதிகாரம் மிக்க ஆண்கள். அதிகார போதை மிக்க ஆண்கள். ஆட்டுவிக்க ஆர்வப்படும் ஆண்கள். அம்மாவை அப்பா நடத்துகிற முறையில் அது தெரியும். அண்ணா வேலை கிடைக்காவிட்டாலும் இவளை அவன் பார்க்கிற தோரணையில் அது அவளுக்குப் புரியும். ஆண்கள் பெண்களைப் பாதுகாக்கப் படைக்கப்பட்டிருக்கிற நினைப்பு அதில் இருக்கும். புன்னகை செய்து கொண்டாள்… இவற்றின் நடுவேதான் பெண்கள் அகல்விளக்கு போலத் தங்கள் கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எனக்கு அமையப் போகிற ராஜகுமாரன். அவன் என்னைப் பூப்போல வைத்துக்கொள்வான். என்னைக் கொண்டாடுவான்… உருவம் காட்டும் மேகங்கள்!

இதே அண்ணாக்கள் கல்யாணமாகிப் போகிற தங்கைகளிடம் எத்தனை பாசமுள்ளவர்களாய் மாறிவிடுகிறார்கள்! கையைப் பிடித்துக்கொண்டு அன்றைக்கு ராஜேஸ்வரியின் அண்ணா அழுத அழுகை நம்பவே முடியாத விஷயம். இத்தனை நாள் அவளைப் பாடாய்ப்படுத்திய அண்ணாவா இவன் என்றிருந்தது. இத்தனைக்கும் அவளை உள்ளூரிலேயேதான் கல்யாணம் பண்ணித் தந்தது.
ரயில் ஏன் நிற்கிறது தெரியவில்லை. யாராவது தற்கொலை செய்து கொண்டிருப்பார்களா? வர வர இப்போதெல்லாம், எல்லாரும் யார் தற்கொலை செய்து கொண்டது… ஆணா, பெண்ணா, வயசாளியா, வாலிபமா, வேலையின்மையா, குடும்பப் பிரச்னையா, காதல் தோல்வியா… என்று பேசிவிட்டுக் கொட்டாவி விடுகிறார்கள். ‘என்ன எழவுடா இது?… அவனவனுக்குத் தற்கொலை செய்ய வேற எடங் கிடைக்கலியா? என்னமோ கவர்மென்ட் இவங்க தற்கொலை செஞ்சிக்கிறதுக்காகவே ரயில் விட்டா மாதிரியில்ல நினைச்சிக்கிடறாங்க?’ என்கிற மாதிரி ஏதாவது பேசிவிட்டு ரயில் கிளம்பக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரிடமும் பாஸ் இருந்தது. யாரும் இறங்கி பஸ் பிடிக்கலாம் என்று மாறுவதில்லை.

ஒவ்வொரு நாள் தாமதமும் சாரதா வீட்டில் கவலையைக் கிளப்புகிறது. திடீரென்று காதல் கத்தரிக்காய் என்று பிரச்சினைக்குக் கைகால் முளைக்கலாம் என்று அவர்கள் பெண்ணை வேலைக்கு அனுப்பிவிட்டு பயத்துடன் காத்திருந்தார்கள்… எனில் காதலுக்கு அவர்கள் எதிரிகளும் அல்ல. பெண் ஏமாந்து வந்து நிற்கக்கூடாது என்கிற யோசனை. அண்ணாவின் கண்டிப்பு அவர்களுக்குப் பிடித்தே இருக்கிறது. அதெல்லாம் கேக்க வேண்டிதான்… நான் அதுல தலையிட மாட்டேன் என்பதுபோல் பெற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் அதை. அம்மா, அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்க என்கிற ரீதியாய் ஒருநாள் மாலையும் கழுத்துமாய் ஒரு வாலிபனுடன் போய் நின்றால்… சாரதா புன்னகைத்துக் கொண்டாள். காதலிப்பது ஒரு நபரின் பிரத்யேக விஷயம். எல்லாரும் காதலிப்பதில்லை. அப்பா, அம்மா பயப்படாதீங்க. நான் யாரையும் காதலிக்கமாட்டேன். நீங்க கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரை காத்திருக்கிற பொறுமையுள்ளவள் நான். அண்ணா? – அண்ணா யாரையாவது ஒருவேளை காதலிக்கலாம். அவன் படபடப்புக்கும் உணர்ச்சி வேகத்துக்கும், குறிப்பாக என் காதல் பற்றிய அவன் பயத்துக்கும்… அது சாத்தியமே!

பையில் பத்திரிகை ஏதாவது எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள் அவள். இப்படி ரயில் நின்று விட்டால் தொடர்கதைகள் படிக்கலாம். சுஜாதா காலத்துக்குப் பிறகு எவனுக்குத் தொடர்கதை எழுதத் தெரிகிறது?… அதிலும் இப்போதெல்லாம் வரும் தொடர்கதைகளை இன்னொரு தடவை தொலைக்காட்சி சீரியலாக வேறு பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது… இரட்டைத் தலைவலி போல… படிக்க மனம் பதியவில்லை. தலையை நீட்டி வெளியே வேடிக்கை பார்த்தாள். அப்போதுதான் கவனித்தாள்… அடுத்த பிளாட்பாரத்தில் அந்தப் பெண் – தலையை வரட்வரட்டென்று சொறிந்துகொண்டு மடியில் துணி மூட்டையுடன் உட்கார்ந்திருந்தாள். இளம்பெண். சற்றுப் பரபரப்பாய், தவிப்பாய், ரயில் எப்போது கிளம்பும் என்று உட்கார்ந்திருந்தாள். வெளியூரில் இருந்து வந்து ஆட்களை இறக்கி விட்டுவிட்டு ஷெட்டுக்குப் போகவேண்டிய ரயில் அது. ஊரில் இருந்து வந்தவள் ரயிலில் இருந்து இன்னும் இறங்கவில்லையா என்றிருந்தது. யாரது? தற்செயலாக இவள் பக்கம் திரும்பிய அவள் கண்களை ஒரே ஒருதரம் சந்தித்தாள். கொந்தளித்துக் கிடந்தன அவை. என்ன தோன்றியதோ, சட்டென்று சாரதா ரயிலை விட்டு இறங்கினாள். விறுவிறுவென்று தண்டவாளத்தைக் கடந்து அவளைப் பார்க்கப் போனாள்.

"ஹாய் நந்தினி!"

"நானா?"

சாரதா புன்னகைத்தாள்.

"யுவார் மிஸ்டேகன். நான் விஜயா…"

"ஆமாமா விஜயாதான்" என்று இவள் புன்னகைத்தாள். "எங்க இவ்ள தூரம்?"

"ஹைதராபாத் போறேன்…!"

"வெரி குட். அங்க போயி?"

"எனக்கும் ராஜேஷுக்கும் கல்யாணம்…"

"அடேடே, ராஜேஷ் மெட்ராஸ் வந்திருக்காரே…" என்றாள் சாரதா துணிச்சலாய்.

"எப்போ?"

"நேத்திக்கு…"

"ராஜேஷை உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியு…மாவது. நான் அவருடன்தான் வேலை பாக்கறேன்…" என்றவள். "பார்த்தேன்" என்று தன்னைத் திருத்திக் கொண்டாள்.

அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவளாய் இருக்கலாம். அது காதல் தோல்வியா தெரியவில்லை. பரவாயில்லை. அந்தமட்டுக்குத் தண்டவாளத்தில் தலையைக் கொடுக்க நினைக்காமல் ஊருக்கு – எந்த ஊர் எந்த ரயில் என்றே தெரியாமல் – கிளம்பி விட்டாள், என்றிருந்தது. ரயிலுக்கும் வாழ்க்கையில் பிறழ்ந்தவர்களுக்கும் என்ன ஓர் ஒற்றுமை!

"நீங்களும் அப்பாசாமி அன்ட் சன்ஸ்லதான் வேலை பாக்கறீங்களா?"

"ம்."

"நான் உங்களைப் பார்த்ததேயில்லையே?"

"ராஜேஷ் எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசிட்டிருப்பாரு. ஹி லைக்ஸ் யூ ஸோ மச்."
 
"ஆனா எல்லாரும் அவர் வரமாட்டார்டி வரமாட்டார்டின்னு என்னை அழ விடறாங்க."

"ஷ்… அழாதீங்க!… ராஜேஷ் இப்ப மெட்ராஸ் வந்திருக்கறதே யாருக்காகன்றீங்க?"

"எனக்காக…" என விஜயா கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

"வாட் எ நைஸ் ஜென்டில்மேன் ஹி இஸ்!… யுவார் ரியலி லக்கி விஜயா!"

"ஆமாம். அவரை யாருக்கும் நான் விட்டுத் தரமாட்டேன்."

"நோ! யு ஷுட் நாட்! வாங்க போலாம்."

"எங்க?"

"ஹா ஹா" என்று சாரதா சிரித்தாள். "ராஜேஷ் உங்களைப் பார்க்க மெட்ராஸ் வந்திருக்கார். இப்ப நீங்க ஹைதராபாத் போயி என்ன பண்ணப் போறிங்க?"

"ஐம் சாரி" என்று விஜயா கீழே இறங்கினாள். "மெட்ராஸ் வந்திட்டு என்னைப் பார்க்க வரவேயில்லையே?"

"வருவார். ஆபிஸ் வேலையா வந்திருக்காரில்லையா… முடிச்சிட்டு வருவார். டூட்டி பர்ஸ்ட் – அதான் ராஜேஷ்."

"வேணா என்னை அவர்ட்ட கூட்டிட்டுப் போறிங்களா?" என்று விஜயா கேட்கிறபோதே அந்த முகம் பூவாய் மலர்ந்தது. அழுக்கும் துணி மூட்டையுமாய் ஆடியாடி நின்றபடி… விஜயா நல்லவேளை என் கண்ணில் பட்டாள்.

"ஏன்… நாளைக்கு உங்களைப் பார்க்க உங்க வீட்டுக்கு வரேன்னிருக்கார். அவரே வருவார்."

"சேகர்தான் அவன் வரமாட்டாண்டின்னு எப்பவும் என்னைக் கேலி பண்ணிட்டே இருப்பான்."

"ஹி இஸ் ய பூல். பில்டர்டு இடியட்!"

சேகர் இவளது அண்ணாவா, தம்பியா தெரியவில்லை.

"நாளைக்கு ராஜேஷ் வந்தா அவன்ட்ட காட்டி, சேகரைப் பளார்னு அறைவேன்…" என்றாள் விஜயா கோபமாய். "அவரைப் பத்தி யாராவது தப்பாச் சொன்னா எனக்குப் பிடிக்காது."

"உங்களைப் பத்தி யாராவது அப்படிப் பேசினாலும் ராஜேஷுக்குத் தாங்காது!"

விஜயா சந்தோஷமாய்ச் சிரித்தாள்.

சாரதாவுக்கு அவளை இன்னும் இன்னுமாய்ச் சிரிக்க வைக்க ஆசையாய் இருந்தது. மணி பார்த்தாள். ஏழு. அவளது மின்சார ரயில் கிளம்பிப் போய்விட்டது. அதைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.

போகட்டும். விஜயா… நல்லவேளை என் பார்வையில் பட்டாள்.

"நீங்க இந்த ஊரா வெளியூரா?"

"திருவல்லிக்கேணிதான்…"

அப்பாடா என்றிருந்தது. பக்கந்தான். சாரதா பர்ஸைத் திறந்து பணம் இருக்கிறதா பார்த்துக் கொண்டாள். "வாங்க விஜயா?"

"எங்க?…"

"உங்க வீட்டுக்கு…"

"நான் போய்க்குவேன்…"

"நான் கூட வரேன். நான் எங்க சாரோட மிஸஸ் வீட்டைப் பார்க்க வேணாமா?"

"சரி" என்று சாரதா புன்னகைத்தாள். எத்தனை அழகாய் இவள் சிரிக்கிறாள், குழந்தைபோல!

"ஆட்டோ!…" என்று கைதட்டிக் கூப்பிட்டாள் சாரதா.

"ஐ எனக்கு ஆட்டோன்னா பிடிக்கும்…" என்று விஜயா ஏறிக்கொண்டாள்.

ஆட்டோ திருவல்லிக்கேணிக்குத் திரும்பியது. விஜயா வேடிக்கை பார்த்தபடி உற்சாகமாய் வந்தாள்.
அந்த ராஜேஷ் ஒருவேளை வந்து பெண்பார்த்து விட்டு நிராகரித்து விட்டானோ? அவன் கதாநாயகனா வில்லனா என்றே தெரியவில்லை. சாரதாவுக்கு இன்றைக்கும் நேரமாகி விட்டது. வீட்டில் அண்ணா பொறுமையற்றுக் காத்திருப்பான் என்று தோன்றியது. வெளியே திட்டினாலும் அண்ணா தன்னை நம்புவதாகவே அவளுக்குப் பட்டது. இருந்தாலும் கேள்வி கேட்காட்டி இவளுக்குக் குளிர் விட்டுப் போயிரும்… என்றும் நினைப்பு.

விஜயா வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது. பரபரப்பாய் உள்ளேயிருந்து அப்பா, அம்மா, அண்ணா வந்தார்கள். "சனியனே உன்னை எங்கேல்லாம் தேடறது?" என்று வந்தவன் சேகராய் இருக்கலாம். சட்டென்று அது தன் அண்ணா முகம் போலிருக்கிறதா என்று பார்த்தாள் சாரதா.

About The Author