பெயரிலென்ன இருக்கு? (2)

சென்ற பகுதியில் நிறப்பாகுபாடுகளைப் பற்றிப் பார்த்தோம். பெயர்கள் எப்படி வர்க்க ரீதியாக வேறுபடுகின்றன என்பதை இப்பகுதியில் காண்போம்.

வெள்ளை நிறப் பெண்களுக்கு :

1. பண வசதி குறைந்தவர்கள் வைக்கும் பெயர்கள் – Ashley, Jessica, Sarah, Emily, Taylor, Elizabeth, Jennifer, Rebecca
2. நடுத்தர வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் – Lauren, Rachel, Katherine, Alexandra,
Danielle
3.உயர் வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் – Alexandra, Lauren, Katherine, Rachel,
Madison
4. கல்வி கற்றவர்கள் வைக்கும் பெயர்கள் – Katherine, Emma, Alexandra, Julia, Rachel
5. கல்லாதவர்கள் வைக்கும் பெயர்கள் – Kayla, Amber, Brittany, Brianna

வெள்ளை நிறப் பையன்களுக்கு :

1. பண வசதி குறைந்தவர்கள் வைக்கும் பெயர்கள் – Cody, Brandon, Anthony, Justin, Robert
2. உயர்வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் – Benjamin, Samuel, Jonathan, Alexander, Andrew
3. உயர் கல்வி கற்றவர்கள் வைக்கும் பெயர்கள் – Benjamin, Samuel, Alexander, John, William
4. கல்லாதவர்கள் வைக்கும் பெயர்கள் – Cody, Travis, Brandon, Justin, Tyler

பெயர் விவகாரம் காலத்திற்கேற்ப மாறவும் செய்கிறது. உதாரணமாக, 1960ல் பிரபலமான SUSAN என்ற பெயர் 2000 இல் யாராலும் விரும்பி வைக்கப்படாத பெயராகி விட்டது. இது போலவே ROBERT, DAVID, KEVIN, LISA, MARY, DEBORAH, LINDA, SANDRA போன்ற பெயர்களும்.

லிவிட் இம்மாதிரியான பெயராட்டத்திற்கு மன ரீதியான காரணங்களையும் பட்டியலிடுகிறார். அவர் கூறும் காரணங்கள் :

1. படித்த, வசதியானவர்கள் கண்டுபிடித்த பெயர்களை, படிப்பில்லாத, வசதி குறைந்தவர்கள் காப்பியடித்துக் கொள்கிறார்கள்.

2. பிரபலமானவர்களின் பெயர்கள் குறைவாகவே காப்பியடிக்கப்படுகின்றன.

3. காப்பியடிப்பவர்கள் தங்கள் சொந்தக்காரர்களைப் பார்த்தோ, அடிக்கடி சந்திக்கும் அடுத்த வீட்டுக்காரர்களிடமிருந்தோ காப்பியடிப்பதில்லை

4. தங்களுக்குத் தெரிந்த, ஆனால் அவர்களுக்குத் தெரியாத, நான்கைந்து வீடுகள் தள்ளி இருப்பவர்களின் பெயர்களையே விரும்பிக் காப்பியடிக்கிறார்கள்.

பெயர்கள் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக வைக்கப்படுவதாக லிவிட் போன்ற ஆங்கிலேயர்கள் கூறினாலும், பழந்தமிழர் வாழ்க்கையை ஆய்ந்துணர்ந்த, தமிழை, தமிழனின் வாழ்க்கை முறையை உய்த்துணர்ந்த கவிப் பேரரசு போன்றவர்கள் அக்கருத்தையே ஆமோதிப்பது விந்தையாகவே உள்ளது. அவர் கற்ற கம்பர் என்ன சொல்கிறார்?

கம்பர் இவர்களிடமிருந்து மாறுபடவே செய்கிறார். பெயருக்கு ஏற்றவாறே குழந்தை வளரும், குழந்தையின் எதிர்காலமும் அமையும் என்ற தமிழனின் நம்பிக்கையைச் சித்திரமாக்குகிறார்.

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு வந்து அருளிய கடவுள் எனக் கொண்டு, முதல் குழந்தைக்கு இராமன் எனப் பெயரிட்டதாகப் பாடுகிறார்.

"விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் எனப்பெயர் ஈந்தனன் அன்றே"
எனத் தொடங்குகிறார்.

அடுத்துப் பிறந்த குழந்தையின் ஒளி மிகுந்த வனப்பைக் கண்டு பரதன் எனப் பெயரிட்டதாகக் கூறுகிறார்.

"வரதன் உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே"
என்றார்.

எதிர்காலத்தில் அரக்கர்கள் துயர் ஒழிந்து அமரர்கள் வாழ்வர் என்ற எண்ணத்தோடு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு, இலக்குவன் எனப் பெயரிட்டார்கள் என்றார்:

"விலக்க அரு மொய்ம்பின் விளங்குஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே"

நான்காவதாகப் பிறந்த குழந்தை எத்திசையிலும பகையை அழிக்கும் எனக் கூறி சத்துருக்னன் எனப் பெயரிடுகிறார்கள்:

"எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணாச்
சத்துருக்கன் எனச் சாற்றினன் நாமம்"

"தமிழனின் பெயர்கள் இறந்த காலம் சொல்லும்" என்கிறார் பட்டி மன்றம் ராஜா தன்னுடைய 14.6.2007 குங்குமம் வார இதழ் கட்டுரையில்.

"எங்கப்பா ஹெட் மாஸ்டரா இருந்த கிராமத்துல, சென்சஸ் எடுக்கறதுக்குப் போறப்போ கூடப் போயிருக்கேன். பெரும்பாலும் அந்த ஊர் ஜனங்க பேரு மண்ணாங்கட்டி, புளுகாண்டி, சுடலை, கழுவன், பாண்டி, கருத்தம்மா.. அப்பிடீன்னுதான் இருக்கும். அங்க ஒருத்தன் பேரு ‘டவுன் பஸ்’ ன்னு சொன்னாங்க. என்னன்னு விசாரிச்சா, அவன் சிட்டி பஸ்ல பொறந்தவனாம். பேரைக் கேட்டாலே அவரோட ஜாதியைக் கண்டுபிடிச்சிடலாம். இதையெல்லாம் மாத்தி, பாமர ஜனங்க கூட நாகரிகமாக பேர் வைக்கக் கத்துக் குடுத்தது தமிழ் சினிமாதான். தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ல பெயர் வைக்கறதுக்கே கவர்மென்ட் சட்டம் போடவேண்டிய கட்டாயம் வந்து விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

தன்னுடைய பெயரை மரியாதையுடன் அழைக்காததால் கொலைக் கோபம் கொண்ட யானை பற்றிக் கூறுகிறது, 10.6.2007 தின மலர்ச் செய்தி. கேரளாவின் கொல்லத்தில் “மணிகண்டா, இங்கே வா” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டவரை மோதித் தள்ளிக் கொன்றார் மணிகண்டர் (என்கிற கோயில் யானை!).

சரித்திரம் கூறும் பெயர்கள்

தமிழன் எந்த ஒரு பெயரையும் ஒரு சரித்திரத்தின் சுருக்கமாகவே ஆக்கிக்கொண்ட அறிவாளன்.

1. ஐம்பத்து ஒரு ஊர்த் தொகுதியை —– அம்பத்தூர் என்றழைத்தான்.

2. கோடு (மலை) + அம்பு + ஆக்கம் —- திரிபுர அசுரர்களை அழிக்க சிவன் மேரு மலையை வில்லாக ஆக்கி அம்பு தொடுத்த இடத்தைக் கோடம்பாக்கமாக ஆக்கினான்.
(ஆதாரம் : வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயத் தல வரலாறு)

3. ஐந்து தலை நாகமாகக் குழந்தைத் தவம் வேண்டி நின்ற அனுசூயையின் கைகளில் பொருந்தி நின்ற ஆதிசேஷனைப் பதறிப் போன அனுசூயை நழுவ விட, கால்களில் விழுந்த அக்குழந்தைக்கு, பதம்(கால்) + சலி(விழு) —- பதஞ்சலி என்று வணங்கினான்.

4. மகாகவி வால்மீகி பிறந்த ஊரை திரு+வால்மீகி+ஊர் —- திருவான்மியூர் என்றான்.

5. அகத்தியர் ஈ வடிவில் இறைவனை வழிபட்ட மலைத்தலத்தை —- ஈங்கோய்மலை என்றழைத்தான்.

6. ஐவர் (பாண்டவர்கள்) பாடி வழிபட்ட தலத்தை ஐவர்பாடி (தற்போது அய்யாவாடி) என்றான்.

7. இராமர் (இலங்கையிலுள்ள அசுரர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவி விடக்கூடாதென
வீடணன் வேண்டிக் கொண்டபடி) தன்னுடைய தனுஷால் (வில்லால்) சேது பாலத்தைக் கோடிட்டுப் பிரித்த கடைக் கோடி இடத்தைத் தனுஷ்கோடி என்றழைத்தான்.

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜா தான்” என்ற வரிகள் (ஷேக்ஸ்பியர்?) நினைவுக்கு வருகின்றன. தமிழ்ப் பெயர்களில் ஆணின் பெயர்”ன்” என்றும் பெண்ணின் பெயர்”ள்” என்றும் முடியவேண்டும் என்பர். ஒருவரது பெயரை வைத்து அவரது குடும்பத்தின் பரம்பரையைக் கூறமுடியும் என்பார்கள். பொதுவாக ஒரு பெயரை வைத்து எந்த நாட்டவர், எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று இனம் கண்டு கொள்ள முடியும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. ஆனால் இன்று அவ்வாறு கணிக்க இயலாது. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வையுங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். கட்டுரையாளரின் முயற்சி பாராட்டத் தக்கது!”

Comments are closed.