பெரியம்மா (3)

என் எண்ணத்தை வெளியிட்டதும் பூரணி தயங்காமல் உன்னைத் தூக்கி என் கையில் கொடுத்தாள். அன்பின் மொத்த வடிவம் அவள்! நல்ல அழகி, பண்பு நிறைந்தவள்! அவளோடு வாழ்வதற்கு உன் அப்பாவுக்குத்தான் கொடுப்பினை இல்லையென்று நினைத்துக்கொண்டேன்.

நான் அவளிடம், ”உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ வைக்கிறேன்” என்று கூறி அழைத்தேன். அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். என்னுடைய இடைவிடாத வேண்டுதலையும், கெஞ்சலையும் தாளாமல் ஒருவழியாக என்னுடன் வர சம்மதித்தாள். உரிமை கோரி அல்ல; வீட்டு வேலைக்காரியாக!

அவள் என்னிடம் பெற்ற சத்தியங்கள் இரண்டு. முதலாவது, அறியாப்பருவமான உன் மனதில் தாயென்ற இடத்திலிருந்து அவளை மெல்ல நீக்கி, கடைசிவரை தன்னை அடையாளங்காட்டக்கூடாது என்பது. இரண்டாவது, உன் தந்தை எந்தக் காலத்திலும் பழைய உறவை மனதில் வைத்துக்கொண்டு தன்னைத் தீண்டக்கூடாது என்பது. எப்படியாவது அவள் வந்தால் போதுமென்று எண்ணிய நான் அவளது நிபந்தனைகளைக் கூறி உன் அப்பாவின் சம்மதம் பெற்றேன். உன்னை சட்டப்படி எங்கள் மகனாக ஏற்றோம். பூரணி வேலைக்காரியாகவே வளைய வந்தாள். நீ அழும் வேளைகளில் கூட உன்னை சமாதானப்படுத்த அவள் முன்வரவில்லை.

உன் அப்பாவும் தன் தவறுக்கு வருந்தியதுபோல் தெரிந்தது. உன்னை மனதார ஏற்றுக் கொண்டார். பூரணி மட்டும் அவர் கண்களில் படுவதை பெரும்பாலும் தவிர்த்தாள். வாழ்க்கை சீராகப் போய்க் கொண்டிருந்தது. உனக்கு நான்கு வயதிருக்கும். அப்போதுதான் ஒருநாள் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

என் உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு நீயும் நானும் சென்றிருந்தோம். அறுவடைக்காலம் என்பதால் உன் அப்பா நம்மோடு வரவில்லை. அப்போது வீட்டில் தனித்திருந்த பூரணி அவர் பார்வையில் பட்டுவிட, பழையபடி காமப்பேய் தலைவிரித்தாடத் துவங்கிவிட்டது. தனிமையின் துணிவில் அவளை நெருங்க, அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடியிருக்கிறாள். அவரோ எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை.

பூரணி உத்தமி! தன்னையும், தன் குழந்தையையும் வாழ வைத்த எனக்கு துரோகம் செய்ய அவள் மனம் உடன்படவில்லை. தன் அழகிய உடல்தானே அவரை நிலைதடுமாறச் செய்கிறது என்று எண்ணியவள்.. யாருமே நினைத்துப் பார்க்க இயலாத அந்தக் கொடியச் செயலைச் செய்தாள்! தன்னைத்தானே தீக்கிரையாக்கத் துணிந்தாள். பாதி வெந்த நிலையில்தான் அவளை மருத்துவமனை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்குள் எல்லாம் சிதைந்து விட்டது. நீ பார்த்தாயே, அந்த உருவம்தான் மிஞ்சியது! இதைப் பார்த்த உன் தந்தை பித்துப் பிடித்தவர் போலாகி தன் செயலை நினைத்து வருந்தி வருந்தியே தன் வாழ்வை இழந்தார்.

எனக்காக, என்னை வாழ்விப்பதற்காக அவள் செய்த தியாகம்… அப்பப்பா! இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது. உன் அப்பா அவளுக்கு செய்த பாவத்திற்குப் பரிகாரமாகத்தான் நான் அவளைப் பராமரித்து வந்ததாக அனைவரும் எண்ணினர். உன்னைத் தந்து என் வாழ்வை மலரச் செய்த தெய்வம் அவள் என்பதை நான் மட்டுமே அறிவேன்!”

அம்மா எல்லாவற்றையும் இறக்கிவிட்டாள். இப்போது சரவணனின் மனதில்தான் பெரும் பாரம்! நான் எத்தனை துர்பாக்கியசாலி! பெற்ற தாய் அருகிலிருந்தும் கடைசிவரை அடையாளங்கண்டுகொள்ள இயலாத பாவி நான்! சரவணனின் ஆழ்மனது புலம்பியது. கண்கள் கலங்க, துக்கம் பீரிட, ”ஏன் அம்மா, இப்போது மட்டும் சொன்னீர்கள்? இத்தனை நாள் மறைத்ததுபோலவே இனியும் இருந்திருக்கலாமே! என் வேதனை உங்களுக்குப் புரியவில்லையா? ” என்று அரற்றினான்.

பரிமளமோ அமைதியாக, ”அவளுக்குக் கொடுத்த வாக்கை எண்ணியே இத்தனை நாள் மௌனமாக இருந்தேன். ஆனால் நீ அவளை உதாசீனப்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வடித்து மானசீகமாக அவளிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறேன். இப்போதும் உன்னிடம் உண்மையைச் சொல்லாவிடில், சாகும்போது கூட எனக்கு அமைதி கிட்டாது.” என்றாள்.

சரவணன் அம்மாவைத் தீர்க்கமாகப் பார்த்தான். தன்னைப் பெற்றவள் என்ற ஒரே காரணத்துக்காக, அவள் முடமான பின்பும் அவளை மனுஷியாகவே நடத்தி, ஒரு குழந்தையைப் போலப் பராமரித்து, அவளுக்காகவே தன் உறவுகளை உதறி வாழ்ந்த உத்தமியான இவள் எங்கே? விகார உருவத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி தன்னைப் பெற்றவளை அலட்சியப்படுத்தியதோடு, தன்னைப் பிள்ளைக்கும் மேலாக வளர்த்தவளின் மனதையும் வேதனைப்படுத்திய தான் எங்கே?

சரவணனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. உலகமே இருண்டுவிட்டதுபோல் தோன்றியது. இருளிலிருந்து ஒரு புள்ளியாய் வெளிப்பட்டது ஓர் உருவம்! அருகில் நெருங்க, நெருங்க தெளிவற்ற பிம்பமாய்…. பொசுங்கிய தலைமயிரும், பாதி கருகிய முகத்தில் விழிகள் மேலேறி, பற்கள் நீண்டு, வாய் கோணி………அது…..அவள்…..அவன் பெரியம்மாவேதான்! இல்லையில்லை…..அம்மா! அம்மாவேதான்!

இப்போது அவனுக்கு அவளைப் பார்த்து பயமோ, அருவருப்போ ஏற்படவில்லை. மாறாக, பாலூட்டும் பசுவை நாடும் கன்று போல அவளை நாடி இருகரம் நீட்டி ஓடினான். வெற்றிடத்தை வேதனையோடுத் துலாவினான்.

"அம்மா………..!”

அடிவயிற்றிலிருந்து எழும்பிய கதறல் எங்கும் எதிரொலித்தது. ”அம்மா! என்னை மன்னித்துவிடு, அம்மா! உன்னை உதாசீனப்படுத்திய இந்தப் பாவியை ஏற்றுக்கொள்வாயா? எனக்கு இப்போது உன்னைப் பார்க்கவேண்டும். உன்னுடன் பேசவேண்டும். உனக்குப் பணிவிடை செய்யவேண்டும். அம்மா…! அம்மா….! ” என்று அழுது அரற்றிப் புலம்பும் மகனை வாரியெடுத்து கண்ணீர் மல்க மார்போடு அணைத்துக் கொண்டாள் பரிமளம்.

About The Author

1 Comment

  1. Vijaya Amarnath

    மிகவும் அருமையான கதை. தாய் அன்பிற்க்கு நிகர் வேறில்லை.

Comments are closed.