பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (6.2)

சிலருக்கு இது வியப்பாக இருந்தது. ‘இவனோ சிறுபையன்! போதிய அனுபவமும் இல்லாதவன். இவன் அந்த முரடனுடன் சண்டைக்குப் போகிறானே !’ என்று கூறி
அவர்கள் வியந்தார்கள்.

பலர் கேலி செய்தனர். "ஆளைப் பார்த்தால் ஆழாக்குப் போல் இருக்கிறான்.
இவனாவது, அம்மல்லனுடன் சிலம்பம் விளையாடுவதாவது ! எங்காவது கையைக் காலை
ஒடித்துக் கொள்ளப் போகிறான்" என்று கூறி அவர்கள் கேலி செய்தனர். விவேகானந்தர்
தயங்கவில்லை. வீரமாக அவனுடன் சிலம்பம் விளையாடினார். இருவரும் நெடுநேரம் வெகு மும்முரமாக விளையாடினார்கள்.

விவேகானந்தரின் ஆட்டத்தைப் பார்த்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவரது திறமையையும், நுட்பமதியையும் பாராட்டினார்கள். ‘ஊம், விடாதே !… சபாஷ்…’ என்றெல்லாம் ஊக்க மூட்ட ஆரம்பித்தார்கள்.

கடைசியில் விவேகானந்தரே வெற்றி பெற்றார் ! சாதாரணமாக வெற்றி
பெறவில்லை; எதிரியின் சிலம்பத் தடியைச் சின்னா பின்னமாக உடைத்தெறிந்து
வெற்றி பெற்றார் !

* * *

விவேகானந்தர் சிறுவனாக இருந்த போது அவருடைய நண்பன் ஒருவனின் வீட்டுக்கு
அடிக்கடி விளையாடச் செல்வார். நண்பன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு செண்பக மரம் இருந்தது.
அதில் விவேகானந்தரும், அந்த நண்பனும் ஏறி விளையாடுவார்கள். விவேகானந்தர் அதன்
உச்சியில் ஏறிக் கிளைகளில் கால்கள் இரண்டையும் மாட்டிக் கொண்டு தலைகீழாகத்
தொங்குவார்; கிளைக்குக் கிளை தாவுவார்; மேலிருந்து கீழே குதிப்பார்; கீழிருந்து
மேலே மள மள என்று ஏறுவார். இப்படிப்பட்ட ‘சர்க்கஸ்’ வேலைகளில் அவருக்கு
விருப்பம் அதிகம்.

மரத்தில் ஏறி இப்படிக் குறும்புகள் செய்வது அந்த வீட்டிலிருந்த ஒரு கிழவருக்குப்
பிடிக்கவில்லை. அதனால் அவர், ஒருநாள் விவேகானந்தரிடமும், அவருடைய
நண்பனிடமும் வந்து, "நீங்கள் அந்த மரத்தில் ஏறக்கூடாது. ஏறினால் ஆபத்துதான் !
அந்த மரத்திலே ஒரு பிரம்ம ராட்சகன் இருக்கிறான். அவன் நள்ளிரவிலே வெள்ளை
உடையுடன் இங்குமங்கும் சுற்றித் திரிகிறான். யாராவது மரத்தில் ஏறினால், அவன்
அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கைலாயத்துக்கு அனுப்பிடுவான்.
ஜாக்கிரதை !" என்று கட்டுக் கதை கட்டிப் பயமுறுத்தி விட்டுப் போனார்.

இந்தக் கதையைக் கேட்டதும் அவர்கள் பயந்து விடுவார்கள், அப்புறம் அந்த
மரத்துப் பக்கமே தலை காட்ட மாட்டார்கள் என்பது அவர் நினைப்பு.

ஆனால் விவேகானந்தர் இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை. தைரியமாக
மரத்தில் ஏறி விளையாடச் சென்றார். ஆனால் அவருடைய நண்பனோ மிகவும் பயந்தான். விவேகானந்தரையும் விளையாட வேண்டாமென்று கூறித் தடுத்தான்.

அப்போது விவேகானந்தர், "அட பயங்கொள்ளி ! அந்த பிரம்ம ராட்சகன் என்னை
என்னதான் செய்கிறான் என்று பார்ப்போமே ! இவ்வளவு நாட்களாக நாம் இங்கு
விளையாடிக்கொண்டுதானே இருந்தோம். அந்தக் கிழவர் சொன்னது உண்மையாக
இருந்தால், நம் கழுத்தெல்லாம் எப்போதோ ஒடிந்து போயிருக்க வேண்டுமே !" என்று
கூறிவிட்டுச் சிரித்தார். சிரித்துக்கொண்டே மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி
விளையாடலானார் !

* * *

ஆள்வார் சமஸ்தானத்தில் ஒரு திவான் இருந்தார். அவருக்குச் சுவாமி
விவேகானந்தரிடம் அளவற்ற பக்தி. அவர் மாளிகைக்கு ஒரு முறை விவேகானந்தர்
எழுந்தருளி இருந்தார். அப்போது, அவரைக் காண ஆள்வார் மகாராஜா வந்தார். வந்தவர்
விவேகானந்தருடன் பல செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார்.

அப்போது அவர், "ஏன் சுவாமி, கல்லையும் மண்ணையும் வைத்துக் கடவுள் என்று
மக்கள் வணங்குகிறார்களே ! அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படி நான்
சொல்லுவதால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ?" என்று சிறிது கிண்டலாகக்
கேட்டார்.

(தொடரும்)

About The Author