பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்-6.3

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர்!

விவேகானந்தர் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் சென்றது. விவேகானந்தர் அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்தார். அது அந்த அரசரின் படம். உடனே அதை எடுத்து வரும்படி திவானிடம் கூறினார்.

திவான், படத்தை எடுத்து வந்தார். படத்தைக் கையில் வாங்கிய விவேகானந்தர், திவானையும், மற்றும் அங்கிருந்தவர்களையும் பார்த்து, "இதோ இருக்கிறதே படம், இதில் நீங்கள் காறித் துப்புங்கள்" என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் அவர்கள் திடுக்கிட்டார்கள். "என்ன சுவாமி, இது எங்கள் அரசரின் படமல்லவா?" என்றனர்.

"இதில் கண்ணாடியும் காகிதமும்தானே இருக்கின்றன! உங்கள் அரசரா இருக்கிறார்?"

"அரசர் இதில் இல்லாவிட்டாலும் அரசரின் உருவம் இருக்கிறதல்லவா?"

"ஆம்! அரசரின் உருவம்தான் இதில் இருக்கிறது. இந்த உருவத்தின் மூலமாக நீங்கள் உங்கள் அரசருக்கு மரியாதை செலுத்துகிறீர்கள். அதே போலத்தான் நாங்களும் இந்த உலகத்தைப் படைத்த ஆண்டவனுக்கு ஓர் உருவத்தின் மூலமாக வணக்கம் செலுத்துகிறோம். இந்தப் படத்தைப் பார்த்து, ‘கண்ணாடியே, காகிதமே’ என்று நீங்கள் கூறுவதில்லை. அதே போல்தான் ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று நாங்களும் கூறி வணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிறோம்" என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்டதும் மன்னனின் மனம் மாறியது. விவேகானந்தரிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

* * *

ஒரு சமயம் விவேகானந்தர் ரயிலில் இரண்டாம் வகுப்பிலே பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

சாதாரணமாக அவர் மூன்றாம் வகுப்பில்தான் செல்வார். ஆனால், அச்சமயம் ஒரு பெரிய பணக்காரர் அவருக்கு இரண்டாம் வகுப்பு ‘டிக்கெட்’ வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்திருந்தார்.

விவேகானந்தர் இருந்த வண்டியில் இரண்டு வெள்ளைக்காரர்களும் இருந்தனர். அவர்களுக்கு விவேகானந்தரைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது.

"இந்தப் பரதேசியைப் பாரடா! பெட்டி இல்லை ; படுக்கை இல்லை ; சாப்பிட உணவும் இருப்பதாகத் தெரியவில்லை. காவி உடை உடுத்துக் கொண்டு கவலையில்லாமல் ‘கொழு கொழு’ என்று இருக்கிறானே !" என்றான் ஒருவன்.

"ஆமாம், இவன் கெட்ட கேட்டுக்கு இரண்டாம் வகுப்பு வேறு !" என்றான் மற்றவன்.

உடனே இருவரும் ‘கொல்’லென்று சிரித்தனர். இப்படியே அவர்கள் விவேகானந்தரைக் கேலி செய்து பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது அவர்களின் எண்ணம். இல்லாவிட்டால், அப்படியெல்லாம் பேசத் துணிச்சல் வருமா?

வழியில் வண்டி ஒரு நிலையத்தில் நின்றது. உடனே, விவேகானந்தர் தலையை வெளியே நீட்டிப் பார்த்தார். ‘புகைவண்டி நிலையத் தலைவர்’ அங்கு வந்தார்.

அவரைப் பார்த்து, "இங்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா" என்று அழகாக ஆங்கிலத்தில் விவேகானந்தர் கேட்டார். அவர் ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்டதும், அந்த ஆங்கிலேயர் இருவரும் திடுக்கிட்டனர். பிறகு, விவேகானந்தரை நோக்கி, "ஏனய்யா, உமக்கு ஆங்கிலம் கூடத் தெரியுமா? அப்படியானால், நாங்கள் இவ்வளவு நேரமாகப் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஏன் சும்மா இருந்தீர்?" என்று கேட்டனர்.

"நான் மூடர்களைக் காண்பது இதுவன்று முதல் தடவை!" என்று அழுத்தம் திருத்தமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் விவேகானந்தர்.

"என்ன, நாங்களா மூடர்கள் !" என்று கேட்டுக் கொண்டே இருவரும் விவேகானந்தரைத் தாக்க வந்தனர். விவேகானந்தர் பயந்துவிடவில்லை!

"ஓஹோ! புத்தியைத்தான் உபயோகப்படுத்தத் தெரியவில்லை. சக்தியையாவது  உபயோகப்படுத்தலாம் என்று பார்க்கிறீர்களா? நான் அதற்கும் தயார்தான். உம், வாருங்கள், பார்க்கலாம்" என்று கூறி சட்டை விளிம்புகளை மடித்துவிட்டுக் கொண்டே அருகில் வந்தார். அவருடைய திடமான உடலையும், திரண்ட தோள்களையும், வலிமை  மிக்க கைகளையும் பார்த்த அவர்கள் நடுநடுங்கி விட்டனர். பேசாமல் பெட்டிப் பாம்புகள் போல் அடங்கி விட்டனர்!

–நிகழ்ச்சிகள் தொடரும்…

About The Author