பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (7.1)

பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர்!

அப்போது தாகூருக்குப் பதினோரு வயதுதான் இருக்கும். அந்த வயதிலேயே அவர் அழகாகப் பாட்டுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்!

அவருடன் படித்த மாணவர்களில் சிலர், "அடடா! இவன் எவ்வளவு அழகாகப் பாடல்கள் எழுதுகிறான்!" என்று புகழ்ந்தார்கள். சிலர், "இவனாவது பாட்டு எழுதுவதாவது! யாரோ இயற்றிய பாடல்களை எழுதி வைத்துக்கொண்டு கதை அளக்கிறான்!” என்றனர்.

இந்தச் செய்தி எப்படியோ பள்ளித் தலைவர் கோவிந்த பாபுவுக்கு எட்டியது. உடனே அவர் தாகூரை அழைத்தார். ஒரு விஷயத்தைக் கொடுத்து, அதைப் பற்றிப் பாட்டு எழுதச் சொன்னார். தாகூர் மிகவும் அழகான பாட்டொன்றை எழுதினார். எல்லோருக்கும் படித்துக் காட்டினார். அதைக் கேட்டு எல்லோரும் ‘ஆ!’ என்று வாயைப் பிளந்தனர்.

இந்த விஷயம் அப்பாவின் காதிலும் விழுந்தது. அவர் மிகவும் பெருமைப்பட்டார். அன்று முதல் அவர் தாகூரின் பாடல்களை அடிக்கடி கேட்டு மகிழ்வார்; தாகூரை மிகவும் பாராட்டுவார். அப்பா மட்டுமென்ன; தாகூரின் குடும்பத்தார் எல்லோருமே அவரைப் பாராட்டுவார்கள். ஆனால், ஒரே ஒருத்தி மட்டும், "ப்பூ! இது என்ன பாட்டா! உனக்கு அவரைப் போல் எழுதத் தெரியவில்லையே! இவரைப்போல் எழுதத் தெரியவில்லையே!" என்று குத்தலாகக் கூறுவாள். அவள் யார் தெரியுமா? தாகூரின் அண்ணிதான்!

அண்ணி கூறுவதைக் கேட்டுத் தாகூர் கவலைப்பட மாட்டார். அண்ணி எப்போதுமே அப்படித்தான். தாகூருடன் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பது அவளுக்கு வழக்கம்.

* * *

தாகூரின் அண்ணிக்குக் கிளி, மைனா, அணில் முதலியவற்றை வளர்ப்பதில் அளவில்லாத விருப்பம் உண்டு. வீட்டில் அவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வளர்த்து வருவாள்.

ஒருநாள், அவள் இரண்டு அணிற் பிள்ளைகளை வாங்கினாள். அவற்றைக் கூண்டிலே போட்டு அடைத்து வைத்திருந்தாள். அச்செயல் தாகூருக்குப் பிடிக்கவில்லை. ஆனந்தமாக ஓடியாடித் திரியும் அணிற்பிள்ளைகளை அடைத்து வைப்பதை அவர் விரும்பவில்லை.

"அண்ணி, அந்த அணிற் பிள்ளைகளைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. வேண்டாம்! இவற்றை விட்டுவிடு" என்று கெஞ்சிப் பார்த்தார்.

"பேசாமல் வாயை மூடிக்கொண்டு போ! உன் பேச்சைக் கேட்க நான் தயாராக இல்லை" என்று கூறிவிட்டாள் அண்ணி.

"சரி, வரட்டும். அண்ணிக்கு வாயால் சொன்னால் சரிப்படாது" என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொண்டார் தாகூர்.

அன்று அண்ணி வெளியே போயிருந்தாள். அப்போது தாகூர் கூண்டின் அருகே மெதுவாகச் சென்றார். கூண்டைத் திறந்து இரண்டு அணிற்பிள்ளைகளுக்கும் விடுதலை அளித்து விட்டார். ‘ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோம்’ என்று அவை ஆடிக் குதித்துக் கொண்டே ஓடி மறைந்துவிட்டன!

அண்ணி வீடு வந்ததும், கூண்டு வெறுங் கூண்டாக இருப்பதைப் பார்த்தாள். உடனே, தாகூருடன் போர் தொடுத்தாள். அண்ணி திட்டியதைக் கேட்டுத் தாகூர் வருந்தவில்லை. தாம் செய்த செயலை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.

* * *

தாகூர் காலையில் பள்ளிக்குச் செல்வார். மாலை நாலரை மணிக்கு வீடு திரும்புவார். வீட்டுக்குள் நுழையும்போதே உடற்பயிற்சி ஆசிரியர் எதிரே நிற்பார். அவர் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளைத் தாகூர் செய்து முடிப்பார். அதற்குள், சித்திரம் சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர் வந்துவிடுவார். அவர் போனதும், ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுக்க ஓர் ஆசிரியர் வருவார். ஆங்கிலப் பாடம் ஆரம்பமாகி விடும். ஆனால் அப்போது தாகூருக்குப் படிப்பில் கவனம் செல்லாது. தூக்கம் கண்ணைச் சுற்றும். வாய் கொட்டாவி விடும்.

தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், சிறிது மூக்குப் பொடியைப் போட்டுக் கொள்வான். ஆனால் தாகூர் அப்படியெல்லாம் செய்யமாட்டார். பேசாமல் அங்கேயே படுத்துத் தூங்கிவிடுவார்.

ஓயாது, ஒழியாது பாடம் சொல்லிக் கொடுத்து வந்ததால், தாகூருக்குப் படிப்பில் மனம் செல்லவில்லை. அதனால்தான், அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்பு என்றால் தாகூருக்குப் பாகற்காயாகத் தோன்றியது.

–நிகழ்ச்சிகள் தொடரும்…

படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்

About The Author