பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர்!

தாகூரின் அண்ணாவுக்குக் குதிரைச் சவாரி செய்வதில் அளவில்லாத பிரியம். அவருடைய மனைவிக்கும் குதிரைச் சவாரி செய்யத் தெரியும்.அண்ணி குதிரைமேல் ஏறிச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம், "அண்ணிகூடக் குதிரைச்சவாரி செய்யக் கற்றுக்கொண்டு விட்டாள். நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா? "என்று நினைப்பார்.

ஒரு நாள், அண்ணாவிடம் தம்முடைய ஆசையை வெளியிட்டார். உடனே அண்ணா தாகூருக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்துவிட்டார். அது மிகவும் பொல்லாத குதிரை. அது தாகூரைச் சுமந்து கொண்டு போகும் போது, வேண்டாத குறும்புகளெல்லாம் செய்யும்.எத்தனையோ தடவைகள் தாகூரைக் கீழே தள்ளப் பார்த்திருக்கிறது. ஆனாலும் தாகூர் இப்படியும் அப்படியுமாக நழுவுவாரே தவிரக் கீழே விழுந்துவிட மாட்டார் ! குதிரையின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவார் ! ஆனால், அந்தக் குதிரையின் முரட்டுத்தனம் அதிக நாள் நீடிக்க வில்லை. எப்படியோ தாகூர் அதை வசப்படுத்தி விட்டார்.

ஒரு நாள், தாகூர் ஒரு பெரிய குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றி வந்தார். அப்போது அந்தக் குதிரை "இந்தச் சிறு பையன் என்னை அடக்குவதாவது !" என்று எண்ணியதோ,என்னவோ ; திடீரென்று வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஒரே தாவில் வீட்டுக்குள் ஓடி, அங்குள்ள முற்றத்தில் போய் நின்றது. நல்லவேளை ! வீட்டின் முகடு தாகூரின் தலையைப் பதம் பார்க்காமல் விட்டுவிட்டது ! அன்று முதல் தாகூர் அந்தக் குதிரையின் அருகே கூடப் போவது கிடையாது !

* * *
ஒரு நாள் தோட்டக்காரன் அழகான பூக்களைப் பறித்து வந்தான். அவற்றை  வீட்டிலிருந்த கிண்ணங்களில் வைத்தான். தாகூருக்கு அந்தப் பூக்களைப் பார்த்ததும், ஒர் ஆசை தோன்றியது.

"இந்தப் பூக்களை நன்றாகப் பிழியவேண்டும். உடனே அவற்றிலிருந்து சாறு வரும். அந்தச் சாற்றில் நமது கட்டைப் பேனாவைத் தோய்த்து, அழகாகப் பாடல்கள் எழுத  வேண்டும்’” என்று நினைத்தார்.

நினைத்தது போல் செய்ய முயன்றார். சில பூக்களை எடுத்துக் கசக்கினார்.பலங்கொண்ட மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு பிழிந்து பார்த்தார். ஆனால் ஒரு சொட்டுச் சாறுகூட வெளிவரவில்லை.

உடனே, அவர் சாற்றைப் பிழிந்தெடுக்க ஓர் இயந்திரம் செய்யவேண்டுமென நினைத்தார். அண்ணாவிடம் சொன்னார். அண்ணா அதை ஓர் வீண் ஆசை என்று நினைத்தார். இருந்தாலும், அருமைத் தம்பியின் மனம் நோக அவர் விரும்பவில்லை. உடனே தச்சனுக்கு ஆள் அனுப்பினார்.

தச்சனும் வந்தான். தாகூர் அவனிடம், "ஐயா, ஒரு மரக்கோப்பையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு குழவியை வைத்து அந்தக் குழவியை ஒரு  சக்கரத்துடன் மாட்டிவிடுங்கள். சக்கரம் சுற்றும் போது குழவியும் சுற்றுமல்லவா? அப்போது, கோப்பைக்குள் இந்தப் பூக்களை நான் கொட்டுவேன். உடனே சாறு வரும். அந்தச் சாற்றில் என் பேனாவைத் தோய்த்துப் பாட்டு எழுதுவேன். என்ன புரிந்ததா?" என்றார்.

தாகூர் சொன்னபடியே இயந்திரம் தயாராகி விட்டது. உடனே, தாகூர் ஆவலுடன் பூக்களை உள்ளே கொட்டிச் சக்கரத்தைச் சுற்றிப் பார்த்தார். எவ்வளவு தான் சுற்றியும், ஒரு சொட்டுச் சாறும் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் தாகூர் கசங்கிய பூக்களைப் பார்த்தார். பார்த்ததும், "அடடே! ! சற்று முன்பு எவ்வளவு அழகாக இருந்தன இந்தப் பூக்கள் ! இப்போது, இப்படி  ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டனவே ! எல்லாம் அந்த இயந்திரத்தின் வேலை தான்" என்று அந்த இயந்திரத்தை வெறுப்புடன் பார்த்தார்.

அதற்குப் பின் தாகூர் எந்த இயந்திரத்தையும் தொடுவதே இல்லை. "ஸிதார்" போன்ற
வாத்தியங்களைக் கூடத் தொடமாட்டாராம் !

* * *

தாகூருடைய அண்ணாவுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம். ஒரு நாள் அவர்
தாகூரையும் அழைத்துக்கொண்டு யானையின் மீது ஏறி வேட்டைக்குப் புறப்பட்டார்.
யானைப் பாகனும் வந்தான்.

யானை மிகவும் கம்பீரமாகக் காட்டுக்குள் நுழைந்தது. அப்போது தாகூருக்குப்
புலியைப் பற்றிய ஞாபகம் வந்தது. ‘‘புலி வந்துவிடுமோ ! புலி வந்துவிடுமோ !’’ என்று
நினைத்து நினைத்துப் பயந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புலியைப் பற்றிப் பேசும்போது அவருடைய பள்ளித் தோழன், “, ‘புலி
யானையைக் கண்டால், உடனே ஒரே பாய்ச்சலாக அதன் முதுகிலே பாயும். அப்புறம் யானையின் கதி
அதோ கதி தான்!” ! என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

“ஐயோ ! இப்போது புலி வந்து யானையின் முதுகை நோக்கிப் பாய்ந்தால், என்ன
செய்வது? இதன் முதுகில் நாமல்லவா இருக்கிறோம் ! நம் கதி என்னாகும் !" என்று
நினைத்துப் பயந்துகொண்டே இருந்தார்.

ஓரிடத்தில் வந்ததும் யானை "சட்"டென்று நின்றது ! "என்ன விஷயம்?" என்று
தாகூர் மெதுவாகத் தலையை நீட்டிப் பார்த்தார். பார்த்ததும் திடுக்கிட்டார். ஒரு புலி
அங்கே நின்று கொண்டிருந்தது ! ஆனால், நல்லகாலம்!, அது பின்னால் திரும்பிப்
பார்க்கவில்லை ! வேகமாகப் புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தது. "நல்லவேளை ; இன்று
நாம் தப்பி விட்டோம்" என்று எண்ணித் தாகூர் மகிழ்ந்தார்.

"நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !" என்று நினைத்து நாமும் மகிழ்ச்சி
அடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்
படித்து இன்புற முடியுமா? அல்லது, "நோபால் பரிசு பெற்ற கவிஞர் ஒருவர் எங்கள்
நாட்டிலும் இருந்தார்" என்று கூறி நாம் பெருமைப்படத்தான் முடியுமா?

(நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன?)

About The Author