பேய் (2)

வெளியில் இறங்கி நடக்கிறபோதே கால்கள் சண்டிமாடாய்க் கிறங்கின. மாப்ள இன்னிக்கு உங்கதி அவ்ளதான்… என்கிறாப்போல ஒரு உள்மிரட்டல். வழியில் எந்த தேவையற்ற சத்தம் பத்தியும் சட்டை செய்யக் கூடாது. எந்த அசம்பாவிதக் காட்சியையும் கவனிக்கக் கூடாது.

தெருவில் ஒரு பூச்சி கிடையாது. அத்தனை சனங்களும் செத்துட்டாங்களா? அதுக்கேத்தா மாதிரி எங்கோ நாய் ஒன்று தலையை வானத்தைப் பாத்து விரைச்சி ஒரு அவல-ஊளை இடுகிறது. டவுசர் நனைஞ்சிரும் போலுக்கய்யா. கிரிக்கெட்டில் பவுலிங் வரக் காத்திருக்கிற மட்டைக்காரனாட்டம் நான். பந்தை ஒற்ற அடி. எதிர் ஸ்டம்பைப் பார்த்து ஒரே ஓட்டம்…

பொட்டிமவனே ஆறிலும் சாவு, நூறிலும் சாவுடா. தைரியமாப் போ… என ஒரு குரல் ஓங்காரமாய் அலையெழும்பியது உள்ளே. செந்திலாண்டவன் துணை!… துன்னீர் பூசிக்கொண்டு வந்திருக்கலாம். நடைதூரம் தனியே தெரிகிறது. மனசுக்கும் தூரத்துக்கும் ஒரு உறவு இருக்கிறது!… ‘அந்த’ வீட்டை நெருங்க நெருங்க பதட்டம் அதிகமாயிட்டது. டப்பு டப்புன்னு இதயச் சத்தம். பூட்டிய அறைக்குள் மாட்டினாப்போல இரத்தம் இதயக் கதவைத் தட்டுகிறது. மேடும் பள்ளமுமான ரஸ்தாவில் வண்டிப் பயணம்போல தடக்தடக்னு ஒரு நடை. வேகமா நடந்திட்டா நல்லதுன்னு பாத்தா அப்பதான் கால்ல அத்தனை கனம். என்னாச்சின்னு ஒருவிநாடி நின்னு காலைப் பாத்துக்கிட்டேன். யாரும் கட்டிப்போடல்லாம் இல்லை. ஏன் இப்டி மக்கர் செய்யுது.

கோவிந்தா… நான் உன் ப்ரெண்டு. என்னை எதுஞ் செஞ்சிறாதே… ப்ளீஸ்.

கோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு… அட அப்ப பாத்து தெரு விளக்கு அத்தனையும் குப்புனு அணைஞ்சிட்டது. கோவிந்தனே அணைச்சிட்டானா தெரியவில்லை. கரெண்டில் தைரியமா கைவெச்சி அணைக்கலாம் அவன். அவன் ஆளே எப்பவோ செத்திட்டானே?

அட சூராதி சூரா. சுப்புப்பாட்டி பேரா. அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை ஆரிய உடமையடா. ஆறிலும் வாழ்க்கை நூறிலும் வாழ்க்கை…

விக்கெட் எகிறிரும் போலுக்கேய்யா.

நான் திடுமென்று அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முடிவெடுத்தேன். முருகா!-ன்னு காலடி மண்ணெடுத்து அதையே திருநீறாப் பூசிக்கிட்டேன். வாழ்க்கை பெரும் சுவாரஸ்யமாய் இருந்தது.

அந்த வீட்டுக்குக் கதவேயில்லை. எவனாவது திருடித் தன்வீட்டுக்குக் கொண்டு போயிருக்கலாம். கோவிந்தன் அழுகைக்குரல் கேட்கிறதா என்று காதுகள் உற்று கவனித்தன. கோவிந்தன் தற்கொலை செய்து கொண்டாலும் சர்வ வல்லமை கொண்டவன். செத்தப்பறம் அதெல்லாம் அமைஞ்சிருது எப்படியோ. கோவிந்தா எங்க கணக்கு வாத்தியாரைக் கொஞ்சம் கவனி. முழுஎண் வராத கணக்கெல்லாம் தர்றாரு.

பெரிய உயரமான கட்டடம். அதன் இத்தாம்பெரிய தன்மையே என்னவோ போலிருந்தது. உள்ளே சுவரிலேயே ஒரு தாவர அடைசல். இலைகள் ஆடியாடி அதுவே பயமாய் இருந்தது. திக் திக் திக் திக். ரயில்- ‘கார்டு’ விசிலுக்குக் காத்திருந்து ஓடத் தயாராய் ரயிலடியில் நிற்கிறது வண்டி. உள்ளே என்னமோ சத்தம். பூச்சி பொட்டு நகர்கிறதா? பாம்பா?

கதவு பிடுங்கப்பட்ட ஜன்னல்வழியே பூனை கீனை குதித்ததா…

இருட்டு மனுசாளுக்கு எத்தனை பயப்பிராந்தியை யூகங்களைக் கிளப்பி விடுகிறது… கற்பனையை சிக்ஸராக அடிக்கிறது இருள். மவனே இன்னிக்கு நீ ‘கோவிந்தா, கோவிந்தா!’ என திருப்பதி ரேன்ஜில் உள்ளே ஒரு குரல். உள்ளே காலெடுத்து வைக்க முடியவில்லை. வழிமறைத்து முகத்தில் தட்டிய ஒரு செடிக்கிளை உரசல் வேறு பதறடிக்கிறது. கும்மிருட்டு. காலால் தடவித் துழாவி நடக்கிறேன். பகலில் யார்யாரோ அந்த மறைப்பில் உள்நுழைந்து அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். கெட்ட நாத்தம் குடலைப் புரட்டியது. வயித்து வலி கோவிந்தன். (அசிங்கம் பண்ணியது அவனேதானோ என்னவோ?)

யானைச் சோற்றுக் கட்டிபோல வயித்தில் கனம். தெருவிளக்கு வந்துவிட்டால் தைரியம் வந்துவிடும் என்றிருந்தது. ஆனால்… ஆனால்… இருந்த கொஞ்சநஞ்ச வீர்யத்தையும் பூண்டோடு கிள்ளியெறிஞ்சாப்ல பேரதிர்ச்சி.

ஆமாம். நான் பேயைப் பார்த்தேன்.

முதுகுக்குபின் சரசரப்பு என்று அவ்வப்போது துள்ளச்செய்கிற சத்தங்கள். மீண்டும் குளத்துப்பாசி கூடினாப்போல அமைதி. பயம். சுவாரஸ்யம் வேறு. உப்புத்தாளை உரசுகிறாப்போல உள்ளக்குறுகுறுப்பு. தாகமாய் இருந்தது. இருட்டைப் பகுதி பகுதியாகப் பிரித்து நிதானமாய் ஒண்ணொண்ணாய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அறிவு அக்டோபஸ்போல ஐம்புலன்களின் காலெடுத்திருந்தது.

நானே இருக்கிறேனான்னு தெரியாத இருள். அந்தக் கிணறு… கிணறு எங்கே?… கண்கள் கிணறைக் குறித்துத் தேடின. சில சமயங்களில் கிணறில் இருந்து வெளியே வந்து ஈரம் சொட்டச் சொட்ட உட்கார்ந்து தரைபார்த்துக் குனிந்து விக்கி விக்கி அழும் கோவிந்தன். கிணறு எங்கே?

கிணறு கண்ணில் சிக்கியகணம் அந்த மனுச ரூபத்தையும் பார்த்தேன்… நல்லா இடுப்புயரக் கிணற்று மறைப்பில் அந்தப் பக்கமிருந்து பாயத் தயாராய்… உற்றுப் பார்த்துக் கொண்டு… ஆ கோவிந்தனா அது? என்மேல் பாஞ்சிருவானா? ரத்தங் குடிச்சிருவானா?

குப்பென வியர்வை அப்ப ஒரு திகில் வந்து கிரிக்கெட் பந்தாய் மூக்கில் மோதியது. அங்க பிடிச்ச ஓட்டம் நரகல் கிரகலெல்லாம் மிதிச்சி நவட்டிக்கிட்டு யப்பா சாமின்னு வீடுவரை ஓட்டம்.

கதவு உள்ளே தாளிட்டிருந்தது. வயித்துவலி பார்ட்டி கழிவறையைத் தட்டுவதைப்போல -அம்மா?-ன்னு அலறிக் கதவைத் தட்டவும், தெரு விளக்குகள் ஜிஜுக்கென்று உயிர்பெற்றன.

மூச்சிறைத்தது. அதையும் மீறி ஒர் ஆசுவாசம். சிரிப்பு. நல்லவேளை தப்பித்து விட்டேன்!… காலையில் நண்பர்களிடம் என் வீரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்!…

ஆனால் நான் பள்ளிக்கூடம் போவதற்குள் ரமணியின் புகழ் பரவியிருந்தது.

‘என்ன ரமணி நான் கேள்விப்பட்டது உண்மையா?’

ஆமாண்டா. எங்கம்மா மேல ஆணையாடா. நான் பேயைப் பார்த்தேன்…’ என்றான் ரமணி.

*****

About The Author

1 Comment

Comments are closed.