பொன்மாலைப்பொழுது – இசை விமர்சனம்

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு வெளியாகும் சி.சத்யாவின் மூன்றாவது படம் இது. முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட இசையை இதில் அளித்திருக்கிறார். வைரமுத்துவின் பாடல் வரி தலைப்பாகவும், கண்ணதாசனின் குடும்ப வாரிசு படத்தின் கதாநாயகனாகவும் அமைந்திருப்பது படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியாக பாடல்கள் அமைந்துள்ளன.

1. அடிக்கடி

இதில் காதலியை தான் தனிமையில் ரசித்ததையும், காதல் வந்த பின் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தையும் அழகான வார்த்தைகளின் வழியாக கார்த்திக் நேத்தா நமக்கு கொடுத்துள்ளார். "கனவுகள் இன்று படிக்கின்றேன்" என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் வரிகள் அருமை.

2. மசாலா ச்சிக்ஸ்

இந்த பாடலின் பாடுபொருள் உயர் அல்லது உயர் நடுத்தர வர்க்கத்து பதின் பருவ மாணவிகளின் நடவடிக்கைகள். மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். விளையாட்டாக ஆங்கில வார்த்தைக் கலப்போடு ரசிக்கும்படி இருகிறது. எனினும், அநேக இடங்களில் வார்த்தைகளை இசை ஆக்கிரமிப்பு செய்கிறது.

3. நீயின்றி கிடக்கும்

பிரிவின் வலியை மென்மையாக பாடலாக்கி இருக்கிறார் மதன் கார்க்கி. சத்யாவின் குரல் பாடலுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. பாடலின் நீளம் 2 நிமிடம் 13 வினாடி மட்டுமே! சீக்கிரம் முடிந்து விட்டதே எனும் நினைப்பை ஏற்படுத்துகிறது. விரைவில் இதை நிறைய இடங்களில் காலர் டியூனாகக் கேட்கலாம்.

4. வார் கோதுமை கள்ளோடு

தமிழுக்கு ஒரு புது வார்த்தையை மதன் கார்க்கி கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார். அதுதான் பாடலின் முதல் வார்த்தை ‘வார் கோதுமை கள்’. இது குடிமகன்களின் ‘பீர்’-க்கு இணையான தமிழ்ச் சொல். புது முயற்சியாக வார விடுமுறை நாட்கள் பற்றிய பாடலை ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் அமைத்திருக்கிறார்கள்.

5. இரவுகளில்

இதை எழுதியிருப்பவர் தாமரை. இவரின் வரிகளுக்கு கார்த்திக்கின் குரல் மேலும் இதம் சேர்க்கிறது. இடையில் வரும் ‘கிட்டார் மற்றும் டிரம்ஸின்’ ஒலிசேர்ப்பு கவனத்தினை மேலும் ஈர்க்கிறது. "கழுத்து சங்கிலியில் என் பெயரை எழுதி நீ கேக்கணும்" போன்ற வரிகள் தாமரையின் அக்மார்க் எழுத்துகள்.

மொத்தமாகப் பார்த்தால் இசையமைப்பாளருக்கு இது ‘ஒரு வெற்றி மாலைப் பொழுது’. சி.சத்யாவை இந்த ஆல்பம் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

About The Author