பொழப்பு

‘இன்ன பொழப்புதான் பாக்கணும், இப்படித்தான் வாழ்க்கேல வாழணும்ட்டு ஏதாச்சும் விதிமுறை இருக்குதா என்ன?’

எனக்கு அப்படில்லாம் எதுவும் தோணலைங்க. அதெல்லாம் சுத்த ஹம்பக்! தவிர, அந்த மாரி சித்தாந்தம், வீர வசனம்லாம் வாழ்க்கேல சௌந்தர்யம், சுகம் இப்படி எல்லாம் நம்ம சூழ்ந்து இருக்கறப்ப வேண்ணா வரும்ங்க. அப்போ நான் இருந்த நெலமைக்கு, மலம் திங்கிற பன்னிகூட பரவால்லங்க. தன் சாப்பாட்ட தின்னுபுட்டு "உர்"ருனு பெருமிதமா உறுமிட்டு போகும். கொறஞ்சபட்சம், மனுஷனுக்கு வேளாவேளைக்கு ஒரு கொவள சோறாவது கெடைக்கணும். என்ன சொல்றீங்க? ஒண்ணும் இல்லாம சோத்துக்கே டிங்கி அடிச்சா வீர வசனம்லாம் கனவுலயும் வராது.

ஆனா இப்போ என் கைல காசு வந்தது என்னமோ நெஜந்தாங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெலம அப்படியா?

அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி, அன்னிக்கு காலங்கார்த்தால, "நாப்பதிரெண்டு வயசு ஆவுது, ஒரு வேலவெட்டிக்குப் போக துப்பில்ல…ஆளுக்கு ரோஷத்த பாரு"ன்னு என் பொஞ்சாதி பழைய சோத்த என் மூஞ்சில தூக்கி அடிச்சா. அன்னிக்கே அவள வீட்டவிட்டு அடிச்சு வெரட்டிடேனுங்க.

மனுஷனோட பொறுமைக்கும் எல்ல இருக்குதுல்ல. நாள் பட நாள் பட, அவளோட நடவடிக்கய சகிச்சுக்கவே முடியல்ல. வெறகு எடுக்கறப்ப சிராய் கையில ஏறிச்சுன்னா எப்படி உயிர் போகுமோ, அந்த மாரி சிராய் உடம்பு பூரா குத்தினா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் அவ பேச்சு, சர்க்கு சர்க்குனு குத்திக்கிட்டே இருப்பா. அப்பறம் அந்த வார்த்தகள்ள பறக்கற சூடு, அப்பப்பா ஆளயே எரிச்சுடும்.

ஏற்கனவே சரியா வாடக கொடுக்காததுனால, கெடச்சதுடா சாக்குனு அந்த வீட்டு ஓனரு என்னய அடிச்சு தொரத்திபுட்டான். இருந்த சாமான் செட்டயெல்லாம் வித்துபுட்டு கொஞ்ச நாள் ராஜா மாரி சுத்தி திருஞ்சேனுங்க. காசு தீந்து போனதுக்கப்புறம், வேல வேலனு அலையலையா அலஞ்சேன், எலும்பு துண்டுக்கு அலயற நாயாட்டம்.

நான் வேலைக்குப் போக மாட்டேங்க்றேனா என்ன? மொதல்ல அந்த இரும்பு காண்டிராக்ட் கம்பேனில அக்கவுண்டண்டு உத்யோகத்துக்குத்தான் போனேன். பத்து பன்னண்டு வருஷத்துக்கு முந்தி இருக்குமா? கவுரவமா இருந்தேன். அப்புறம், எங்க அப்பனுக்கும் எனக்கும் ஒத்துக்கவே ஒத்துகாது.

அம்மான்ற புண்ணியவதி நான் பொறந்த நாலஞ்சு வருஷத்திலேயே போய் சேர்ந்துட்டா. அதுக்கப்புறம் எங்க அப்பன் செஞ்ச அட்டூழியத்துக்கு அளவே இல்ல. வீட்டுக்கு அவள கூட்டிக்கிட்டு வர்றதும், இவள கொஞ்சறதும்ட்டு இருந்தான். சொகவாசிங்க.

அப்புறம் என்னய போட்டு தாறுமாறா அடிப்பான். இப்போ நெனச்சாலும் பழுக்கக் காட்சின இரும்ப தொடேல சூடு போட்ட மாரியே வலி உயிர புடுங்கும். ஆனா, எங்கப்பனே கடைசி காலத்துல நான் நல்ல வேலக்கு போறேன்னு சந்தோஷபட்டு எனக்கு கலியாணத்த பண்ணிவச்சான். அதுக்கப்பறம் ரெண்டு மூணு வருஷத்துல போய் சேந்துட்டான்.

புள்ளயா பொறந்த கடமைக்கு நல்லாதான் பார்த்துகிட்டேன். எல்லாரும் சந்தோஷமாத்தான் இருந்தோம்ங்க. அந்த இரும்பு காண்டிராக்ட் கம்பேனி சொன்னேனே, அந்த ஓனரு நான் கல்லால கைய வச்சுபுட்டேனு பொய்க் கேசு போட்டு என்னய உள்ள தள்ளிட்டாங்க. அப்போ ஆரம்பிச்சுதுங்க நமக்கு சனி.

மூணு மாசம் உள்ளேர்ந்துட்டு வந்தேன்னு ஒரு பயலும் வேலைக்கு வச்சுக்க மாட்டேனுட்டாங்க. என் பொஞ்சாதிக்கும் எனக்கும் அப்போலேர்ந்தே பொகய ஆரம்பிச்சுதுங்க. எதுக்கெடுத்தாலும் வள்ளுனு வுழுவா. சரியா மதிக்க மாட்டா.

"ஒன்னய கட்டிகிட்டு நான் என்னத்த பண்றதோ… திருட்டு பயலே…வெக்கமா இல்ல… வேல பாக்குற கம்பேனிலயே கைய வைக்கிறயே, ஒன்னயல்லாம் என்ன சொல்ல…"

"அடியே… என்னய என்ன வேண்ணாலும் சொல்லு…. ஆனா, திருட்டு பயலேன்ட்டு சொன்ன?"

"என்ன பண்ணுவ? ஆங்… மொறைக்கறத பாரு… திருட்டுக் கழுத…."

கொறஞ்ச பட்சம் மனுஷனுக்கு பொஞ்சாதியாவது தொணைக்கு நிக்கணும். அநேகமா நம்ம ஜாதகத்துல ஏதாச்சும் கோளாறு இருக்கணும். ஸ்டோர்ல இருந்த ஜோஸ்யருகூட, கவனமா இருடான்னு சொன்னாரு. அவளுக்கு தேவ பணம், பொடவ, சினிமா, சரியான மேனாமினிக்கி. சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லி வெறுப்பேத்துவா.

கைய கால புடிச்சு, அந்த சூர்யா விலாஸ்ல க்ளீனர் வேல வாங்கினேங்க. அப்பாடா நமக்கு தெய்வம் தொணைக்கு இருக்குனு சந்தோஷப்பட்டுகிட்டேன். ஒரு பத்து நாள் வேலைக்கு போயிருப்பேன். அந்த இரும்பு காண்டிராக்ட்காரன் பொண்டாட்டி ஒரு நாள் ஹோட்டலுக்கு சாப்பிட வந்துட்டு வத்திவச்சுபுட்டு போய்ட்டா, எட்டம்மா.

மொதலாளி கூப்புட்டு, "டேய், இதுக்கு முன்னாடி எங்கடா இருந்த?…"

நான் பேசாமயே இருந்தேன்.

"என்னடா காது செவுடா? இல்ல வாய்ல கொழுக்கட்டய்யா? சொல்லுடா தடிமாடு…. அந்தம்மா கம்பேனில ஆட்டய போட்டியாமே?"னு மரியாத கொறவா பேச ஆரம்பிச்சுட்டான்.

அந்த காலகட்டத்துல என்னய நிக்க வச்சு எல்லாரும், இந்த உலகத்துல இருக்கற ஜனங்க எல்லாரும் கேள்விகேட்டுகிட்டே இருப்பானுங்க. அதுதான் எனக்கு புடிக்காத விஷயம்.

வந்ததே கோவம், "ஆமா, என்ன பண்ணனுங்கற?" ன்னு தைரியமா கேட்டேன்.

கேட்டது தான் தாமதம், "வெளில போடா தீவட்டி…என் மூஞ்சில முழிச்ச உண்டு இல்லனு பண்ணிடுவேன் ராஸ்கல்" ன்னு சவுக்கால அடிக்கற மாரி அடிச்சு வெரட்டிடானுங்க.

இந்த நகரம் அப்படியே பாலைவனமா இருக்கும். பாலைவனத்திலயாவது அப்பப்ப மழ பெய்யும்னு படிச்சதுண்டு. என் வாழ்க்கேல? வாழ்க்கேல கஷ்டம் வரலாங்க. அது எல்லாருக்கும் வரும், சகஜம். ஆனா கஷ்டமே வாழ்க்கை ஆயிடுச்சுன்னா?

பண்ணாத தப்புக்கு இப்படி நம்மள பொறிகுள்ள மாட்டின எலியாட்டம் சிக்கவச்சுட்டாங்களேன்னு கோவம் கோவமா வரும். இந்த நகரத்துல ஏன் ஒலகத்துலயே நாம மட்டுந்தான் இப்படியோன்னுகூட தோணும். எல்லா ஜனங்களயும் பார்க்கறப்போ அது அது சந்தோஷமா சிரிச்சுகிட்டு, கொழந்த குட்டியோட, கவுரவமா பொழப்பு நடத்திகிட்டு சினிமா, காட்சிண்ட்டு இருக்கும்.

என்னடா பொல்லாத வாழ்க்கண்ட்டு ஒருவாட்டி தற்கொலைக்குகூட ட்ரை பண்ணேங்க. எதுவும் நம்ம கையிலயா இருக்கு? ஒழுங்கா சாகத் தெரியலைங்க. நாலு பேரு பாத்து காப்பாத்திட்டாங்க. ஜாதகம் கோளாறுன்னாலும், ஆயுசு கெட்டியோ என்னமோ? அதுல ஒருத்தன் என்னைய கூட்டிகிட்டு போய் ஒரு மளிகை கடேல சேத்துவுட்டான்.

அப்புறம், அந்த மளிக கட, டிபார்ட்மெண்டு ஸ்டோரு, இஸ்திரி கட, அப்புறம் நைட்டு புரோட்டா கட, இப்படி எல்லா கடேலயும் அதே சங்கதிதான். பொழப்புக்காக தேடி தேடி எளச்சதுதான் மிச்சமுங்க. ஒரு கம்னாட்டியும் வேல கொடுக்க மாட்டேனுட்டான். அப்படியே கொடுத்தாலும், அஞ்சு நாள், பத்து நாள் இப்படிதான். என்னய பத்தி பூரா பசங்களுக்கும் தெரிஞ்சு போச்சு, தொத்து வியாதி கணக்கா பரவிடுச்சு. கட்டால வக்க! பிச்ச கூட எடுத்து பாத்தேனுங்க. ஒரு பய காசு போட மாட்டேனுட்டான்.

"ஏன்டா, பன்னாட! இப்படி செக்கச் செவக்க வாட்டசாட்டமா இருந்துகிட்டு, பிச்ச எடுக்கற..வெக்கமால்ல?" ன்னு அந்த காபிகட காரன் மூஞ்சில வென்னிய ஊத்திபுட்டான்.

"டேய், ஒன்னய அப்புறம் வச்சுக்கறேன்டா…. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் ஒனக்கு இருக்குதுடா மவனே" ன்னு சொல்லிப்புட்டு வேற தெருல போய் இருக்கலாம்னு முடிவு பண்ணி இங்கே வந்தேங்க. அதுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கேல பொன்மகள் வந்தா, சரியான சுக்கிர தசைன்னு வச்சுக்கோங்களேன்.

அந்த தெருலயே பெரிய வீடு அதுதானுங்க. அது ஏதோ ராஜா காலத்து வீடு மாரி இருந்துச்சு. நூறு வருஷத்து வீடும்பானுங்க. ஏதோ சொத்து தகராறுல மாட்டிகிச்சாம். கேஸூ நடக்குதாம். எது எப்படி இருந்தா நமக்கு என்ன? அது முன்னாடி செம்ம பெரிய திண்ண ரெண்டு ஸைடும் உள்ளடங்கி, பொழங்க வாகா இருக்கும். கெழக்க பாத்த வீடு. ரோட்டுலேந்து இருவது முப்பது அடி உள்ள நடந்ததுக்கு அப்புறந்தான் வாசக்கதவு. ஆனா வீட்டு முகப்பு முன்னால நல்லா எறங்கி இருக்கும், அதுனால திண்ணேல அவ்வளவா வெயில் வரவே வராது. அதுவும் திண்ணயோட ஓரத்துல படுத்துகிட்டா குளுகுளுன்னு இருக்கும்.

கொஞ்ச நேரம் இருந்து பாத்தேன். யாரும் எதுவும் சொல்லல. அந்த வீட்டுல ஆம்பிளங்க யாரும் இருந்த மாரி தெரியலைங்க. ஒரு பொம்பள கொரல் மட்டும் கேக்கும். அது என்னய அன்னிக்கு சாயந்திரம் பாத்துருச்சு. ஆனா இருட்டுல உள்ள நின்னதுனால அது மூஞ்சி எனக்கு சரியா தெரியல.

அடுத்த நாள் மத்யானம் திண்ணேல தூங்கிட்டு இருந்தப்பத்தான், அந்த பொம்பள யாரயோ திட்டுகிட்டு இருந்துச்சு. பெருசா சத்தம். சினிமால வில்லன்லாம் கத்துவானுங்களே அந்த மாரி, காட்டுக் கத்தல். ‘பொம்பளயா அது?’

நான் அந்த இரும்பு சல்லட கதவு வழியா எட்டிப் பாத்தேன். சரியா மூஞ்சி எதுவும் தெரியல. அப்புறம் அந்த ஆளு திட்டு வாங்கின வந்தான்னு நெனைக்கறேன், கோவத்துல சர்ர்ருனு வெளியே வந்தான். அவனும் பாக்க நல்லாத்தான் இருந்தான். அந்த பொம்பள வெளிய வந்து என்னய பார்த்தாங்க. அவன் முழுசும் வீட்ட விட்டு வெளிய போனதுக்கப்புறம் என்னய கண்ஜாடேல உள்ள கூப்புடாங்க.

உள்ள போனேங்க. "அம்ம்ம்மா, வெளில பக்கி பண்டாரம் மாரி இருக்கு. உள்ள போனா அரண்மனைதான். வீட்டுக்குள்ள, கமகமன்னு ஜவ்வாது வாசனை, மூச்சு முட்டுது. அந்த கூடம் கிரிக்கெட் க்ரௌவுண்டுதாங்க. உயரம் முப்பதடியாச்சும் இருக்கும். நாற்காலியும், சோபாவும் விதவிதமா. சூரிய வெளிச்சம் நாலுபக்கமும் ஜன்னல் வழியா வீட்டுக்குள்ள வந்து வுழுந்து, கூடம் அப்படியே பிரகாசமா இருக்குது. இத்தனைக்கும், ஜன்னல் எல்லாத்திலயும் ப்ரௌவுன் கலர்ல ஸ்கிரீன் பாதி மறச்சுடுச்சு. ஆனா ஏனோ எல்லா லைட்டயும் போட்டே வச்சுருக்காங்க. அது என்ன சாண்டிலியரோ, வாண்டிலியரோ ஒரு வெளக்கு பேரு சொல்லுவாங்களே. அது மட்டும் அந்த கூடத்துல நாலு தொங்குது. அதுல இருக்கறதெல்லாம் கண்ணடியா இல்ல வைரமா? எதித்தாப்புல செவுத்துல பெரிய யானை பெயிண்டிங், யானை ஸைஸூலயே. கொஞ்ச நேரம் நெஜ யானதானோன்னு பயந்து நடுங்கிட்டேன்னா பாத்துக்கோங்களேன். இந்த பக்கம், அந்த ஸைஸூல டிவிய வெளம்பரத்துல தான் பாத்த ஞாபகம். அந்த மூலேல ப்ரிட்ஜா அது, என் பழைய வீடு ஸைஸுக்கு. அந்த டைனிங் டேபிளு, ஒரு ஊரே ஒக்காந்து சாப்பிடலாம் – அந்த கோடிலேந்து இந்த கோடி வரைக்கும். ஆளொயர பெரிய குத்து வெளக்கு, அதுக்கு ஒரு மால வேற. ஏதுடா இந்த வீட்டுக்கு ஒரு நாள் அலங்கார செலவே ஐய்யாயிரம், பத்தாயிரம் ஆகும் போல. வாழ்ந்தா இந்த மாரி வீட்டுல சகல வசதியோட வாழணும். அது அது சொர்க்கத்துக்கு போறேன்னு கடேசி காலத்துல என்னன்மோ பண்ணுதுங்களே. இந்த மாரி வீடு, நல்ல பொண்டாட்டி, குடும்பம், இதுதாங்க சொர்க்கம். ம்ம்ம், நமக்கு அந்த கொடுப்பின இல்ல".

அந்த பொம்பளயையும் சும்மா சொல்லகூடாது. பெரிய வீட்டு பொம்பள பெரிய வீட்டு பொம்பளதான். என்ன கம்பீரம், என்ன அழகு. அவங்கள பார்க்கறப்போ மழ காலத்துல குளுருல சூடா ரசம் குடிச்சா எப்படி இருக்குமோ அப்படி ஜம்முனு இருக்கும். அவங்களோட கன்னங்கரேல் கண்ணுங்க "யம்மாடியோவ்!". அந்த கண்களேந்து பாய்ஞ்ச ஒளி என் தேகத்தை என்னமோ செஞ்சது. சுருங்கவும் இனிமையாவும் சொல்லணும்னா ‘தேவதைதாங்க’.

என்னய ரொம்ப நேரம் வெறிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தாங்க. அதோட கண்ணுங்களைப் பாக்க முடியாம, நான் ஓரக்கண்ணால வீட்டதான் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன்.

"நீ யாருப்பா, ஒன்ன ரெண்டு மூணு நாளா இங்க வீட்டு திண்ணேல பாக்கறேன்…."

"வீடு வாசல் எதுவும் இல்லைங்க…"

"இத என்ன சத்தரம்னு நெனச்சுகிட்டியா?"

"வேல வெட்டியும் எதுவும் இல்லங்க…."

"ஏன்? ஆள பாத்தா வாட்டசாட்டமா இருக்க…."

"ஒரு கம்… பயலும் வேல கொடுக்க மாட்டேங்கறாங்க…"

"நீ என்ன திருட்டுத்தனம் பண்ண?"

‘சர்தான், இதுவும் அதே குட்டேல ஊறின மட்டதான், நிக்க வச்சு கேள்வி கேட்குது’. நான் பேசாமயே இருந்தேன். ரெண்டு நிமிஷம் பார்த்துபுட்டு காறி துப்பிபுட்டு கெளம்ப வேண்டியதுதான்னு நெனச்சுகிட்டு இருந்தப்ப,

"நான் வேல போட்டு கொடுத்தா செய்வியா?"

"ம்ம்…."

" என்ன வேலன்னாலும்…"

"கண்டிப்பா செய்வேங்க…"

அந்த வீட்டுக்குள்ளயே ஒரு வாரம் வேல பாத்தேனுங்க. சமையல் வேல, பின்னாடி கொல்லப் பக்கம் தோட்டம் அப்படி இப்படின்டு, எடுபுடி. அப்புறம் என்ன தோணிச்சோ என்னவோ, அந்த பொம்பளயோட வீட்டுக்காரரோடதுன்னு நெனக்கிறேன். ஷேவிங் ப்ளேடு, சென்ட், பவுடர் எல்லாம் என்ட கொடுத்தாங்க. அந்த பொம்பள பேசறத வச்சு பாத்தா வீட்டுக்காரரு ரொம்ப நாளா வீட்டுல இல்ல போல.

‘எங்க போனானோ??’

அப்புறம் எனக்கு ட்ரெஸ், விதவிதமா சாப்பாடுல்லாம் கொடுத்தாங்க. அதோட நடவடிக்கய வச்சு பார்த்தா சரியான வண்டு தின்னியா இருக்கும்னு தோணிச்சு. அதாங்க ஏற்காட்டு மலமேலல்லாம் இருக்குமே. பூச்சி, வண்டுல்லாம் பக்கத்துல வந்தா லபக்குனு திங்கற பூ இல்ல செடி. ‘சரி, ஏதோ ஒண்ணு’

அதுக்கு அப்புறம் அந்த பொம்பளக்கு என்னய ரொம்பப் புடிச்சுப் போச்சு. அவுங்க வேற யார் யார்ட்டயோ எல்லாம் என்ன பத்தி சொல்லி, அவுங்களுக்கும் என்னய ரொம்ப புடிச்சு போச்சு. அதயேன் கேக்கறீங்க, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி செல்ஃபோனு, இருக்க வாடக வீடு, துணிமணி எல்லாம் அவுங்க செலவுலயே எடுத்து கொடுத்தாங்க. இப்போ போன வாரம் பைக் கூட வாங்கி கொடுத்துட்டாங்க.

தோ, இன்னிக்கு காலேல, ஓடிப் போன என் பொண்டாட்டி கூட வந்துட்டாங்க.

About The Author