மடை திறந்து… (11)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே எல்லாம் அமோகம்! எப்போடா உங்ககிட்டே திரும்பப் பேசுவேன்னு ரொம்ப ஆவலா இருந்தது இந்த வாரம். ஏன்னா ஏகப்பட்ட கொடைகள்! அற்புதங்கள்…

கொடை 1:

நீங்க நம்பறீங்களோ இல்லையோ, இதை நான் உங்ககிட்டே சொல்லியே ஆகணும். இந்த மாதத்துக்கான Angel பேரு Asmodelனும் அவங்க வண்ணம் சிவப்புன்னும் சமீபத்தில படிச்சேன். அந்த செய்தில, நீங்க வெளில போகும்போது சிவப்பு நிறம் பார்த்தீங்கன்னா இந்த ஏஞ்சல் உங்களுக்குத் தங்களை வெளிப்படுத்தறாங்கன்னு அர்த்தம் அப்படின்னு சொல்லிருந்தாங்க. சரியா? நிற்க.

போனவாரம் களைப்பா இருந்ததுன்னு சொல்லிருந்தேனில்லையா? அது வார நாட்கள்ல தொடர்ந்தது. திங்கட்கிழமை, ‘அடப் போப்பா என்ன வாழ்க்கை இது. காலைல எந்திரிச்சு ரயில் பிடிச்சு மாங்கு மாங்குன்னு ஆஃபீஸ் ஓடி, பரபரன்னு மூச்சுவிட நேரமில்லாம வேலை செஞ்சு… என்னத்தை நான் சாதிக்கிறேன்’னு கொஞ்சம் வெறுப்பா இருந்தது. பொதுவா இந்த மாதிரி நான் கொஞ்சம் எதிர்மறையா உணரும்போது நான் என்னை நான் கேட்டுக்கற கேள்வி, ‘உனக்கு இப்போ என்ன வேணும்?’ அந்தக் கேள்விக்கு அப்போ எனக்குக் கிடைச்ச பதில், “சுதந்திரம் வேணும். நான் நினைச்சதை நினைச்ச நேரத்தில செய்யற சுதந்திரம்”. அடுத்து நான் வழக்கமா செய்யறது எனக்கு என்ன வேணுமோ அந்த அதிர்வை உருவாக்கறது. அது ரொம்ப சுலபம்தான். எனக்கு இப்போ இருக்கற சுதந்திரத்தை எல்லாம் பட்டியலிட்டேன். ஒவ்வொரு கணமும் அந்த கணத்தில எனக்கு முடிவெடுக்கற சுதந்திரம் இருக்கறதுக்காக நன்றி சொன்னேன். அப்பறம் கூகிள்ல ‘freedom’னு தேடி கிடைக்கற படங்களை ரசிச்சு சேகரிச்சேன்.

அடுத்த நாள் நான் ரயில்ல ஏறினதும் எனக்கு எதிர்த்தாப்பல இருந்தவங்க படிச்ச செய்தித்தாள்ல ஒரு விளம்பரம். அதுல இருந்த வாசகம் ‘Freedom is….’னு ஆரம்பிச்சது கொட்டை எழுத்துல. ‘அட’ன்னு இருந்தது. ரயில்லருந்து இறங்கறப்போ பார்க்கறேன் – எனக்கு முன்னால நடக்கறவரோட பையில ‘Freedom Street’னு எழுதிருக்கு. வாயடைச்சுப் போயிருச்சு. பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லிட்டு, ‘எனக்கு இது பத்தலை. நீங்கல்லாம் எங்கூட இருக்கீங்கங்கறதுக்கு இன்னும் கொஞ்சம் ஆதாரம் வேணும். சிவப்பு வண்ணத்தில வித்தியாசமா எனக்கு ஏதாவது காட்டுங்க’னு கேட்டேன். (ஆசை… ஆசை…)

ஸ்டேஷன்லருந்து வெளில வந்ததும் ரத்த சிவப்பு நிற சட்டை போட்ட ஒரு மனிதர் என்னை கிராஸ் பண்ணிப் போனார். நான் வேலை பார்க்கற பகுதி ரொம்ப Formal. கோட், சூட்லதான் முக்கால்வாசி மக்கள் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில சிவப்பு வண்ண சட்டை போடறது எவ்வளவு வித்தியாசமா இருக்கும்னு உங்களுக்கே தெரியும். ‘வாவ்’னு இருந்தது. அது மட்டுமில்லை, அந்த மனிதர் அத்தனை மாடிக்கட்டிடங்கள் இருக்கற பகுதில, பல மாடிகளும் எலிவேட்டர்களும் இருக்கக் கூடிய எங்கள் கட்டிடத்தில், நான் ஏறிய அதே எலிவேட்டரில் ஏறினார்! எனக்கு Asmodel ஏஞ்சல் ‘பாரு நான் உன் கூடவே இருக்கேன்’னு சொன்னது போல இருந்தது. நான் அதோட நிறுத்திக்கலை. என்னோட கார்டியன் ஏஞ்சலான ரஃபேலோட நிறம் தங்க மஞ்சள் (Golden yellow). அன்றைக்குத் திரும்பும்போது ‘ஏன் நீங்க எனக்கு ஏதும் sign தர மாட்டீங்களா’ன்னு நான் அவங்களை மனசுல நினைச்சுக் கேட்டேன். எங்க ஊர் ஸ்டேஷனை விட்டு வெளில வர்றேன் – தங்க மஞ்சள் நிறத்தில ஒரு கார் வாசல்ல நிக்குது… (இந்தக் கலர் காரை ரொம்ப அரிதாதான் இங்கே பார்க்க முடியும்) என்ன சொல்ல! பயங்கர குஷி ஆயிடுச்சு. நான் அதோட விட்டேனா? மறுநாள் ரயில்ல… ‘எனக்கு இப்போ சிவப்பு நிறத்தில ஒரு பூ காமிச்சீங்கன்னா நல்லா இருக்கும். ஒரு பூ படம் போதும்’னு நினைச்சேன். பூ படம் ஏதும் மாட்டலை. ஆனா நான் இறங்கினதும் இருந்த பூக்கடையில செக்கச் செவேல்னு எனக்குப் பிடிச்ச ஜெரேனியம் பூக்கள் கைக்கெட்டற தூரத்தில… ‘அட மக்கு, உனக்கு நிஜமான பூவே தயாரா இருக்க, நீ வெறும் படத்துக்குப் போய் ஆசைப்படறியே’ன்னு சொல்றது போல இருந்தது.

அப்பறம் வெள்ளிக்கிழமை காலைல, கிளம்ப கொஞ்சம் தாமதமாயிருச்சு. பஸ் போயிடுச்சா இல்லையான்னு தெரியலை. எனக்கு ‘All is ok’னு ஒரு sign காமிங்கன்னு கேட்டேன். அடுத்த நொடி ஒரு தங்க மஞ்சள் கலர் கார் சிவப்பு எழுத்துக்களோட என்னைத் தாண்டிப் போகுது. அதை அடுத்து ரெண்டு பக்கமிருந்தும் சிவப்பு வண்ணக் கார்கள். எனக்கு என்னையறியாம புன்னகை வந்திடுச்சு. பஸ்ல ஏறும்போது ஓட்டுனர்கிட்டே இருந்த சிவப்பு வண்ண தீயணப்புக் கருவி மேல இருந்த வார்த்தை ‘Guardian’. திரும்பினா அங்கே இருந்த அறிவிப்பில என் கண்கள்ல பட்ட வார்த்தைகள் ‘Allow Access’ ஜன்னல் வழியா பார்க்கறேன். தங்க மஞ்சள் நிற வேன்ல ஒரு ஸ்மைலி … எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா ‘Guardian. Allow Access ‘. தமிழ்ல சொன்னா ‘உன் பாதுகாவலனுக்கு வழி தரவும் ‘. இது எப்படி இருக்கு?!

ஆஃபீஸ்லருந்து திரும்பும்போது ‘நான் கேக்கறது ரொம்ப ஓவர்தான். ஆனாலும் சும்மா கேட்டுத்தான் பார்க்கலாமே’ன்னு ‘தங்க மஞ்சள்ல ஓவர் கோட் யாராவது போட்டுட்டு வந்தா அதைவிட ஆதாரமே தேவை இருக்காதில்லை’ன்னு மனசில நினைச்சிக்கிட்டேன். ஏன்னா அது அரிதினும் அரிது. ரெண்டே நிமிஷத்தில ஒரு பெண்மணி அதை அணிஞ்சு என் எதிர்ல போறாங்க…. அப்பா…. புல்லரிச்சுப் போச்சு.

சிலர் கேக்கலாம், ‘அந்தப் பெண்மணி அதை வீட்டிலருந்து கிளம்பும்போதே அதாவது பல மணி நேரம் முன்னாலயே அணிஞ்சிருப்பாங்க. ஆனா நீ கேட்டது ரெண்டு நிமிஷம் முன்னாலதான். அதெப்படி பிரபஞ்சத்துக்குத் தெரியும்?’ நல்ல கேள்வி, மக்களே!. ஆனா… நேரம்கறது நாம ஏற்படுத்தின ஒரு கான்செப்ட். பிரபஞ்சம் ஆரம்பமும் முடிவுமில்லாதது. அதுக்கு ஏது நேரம் காலம், இருத்தல் இல்லாமை எல்லாம்? நாம விரும்பற எல்லாமே ஏற்கெனவே பிரபஞ்சத்தில இருக்கு. நாம நம்ம வாழ்க்கையில எதை எல்லாம் அனுமதிக்கறோம்கறது நம்ம கிட்டதானிருக்கு.

இந்தக் கருத்தை முதல்ல ஒரு பெண்மணி சொன்னபோது யாராவது வலிய கஷ்டங்களை வரவச்சுப்பாங்களான்னு எனக்கு அவங்க மேல சரி கோபம் வந்தது. ஆனா கொஞ்ச கொஞ்சமா அதிலருக்கற உண்மை எனக்குப் புரிய ஆரம்பிச்சது. என் வாழ்க்கை நான் உருவாக்கறதுங்கறதை அனுபவ பூர்வமா பல சமயம் உணர்றேன். ஆனாலும் சில சமயம் என்னோட ஈகோ இயலாமைங்கற வேஷத்தைக் கட்டத்தான் செய்யுது. மற்ற சுகவர்களோட உதவியோட இந்த வேஷங்களைக் கலைக்க முயற்சி செஞ்சிட்டிருக்கேன்.

கொடை 2:

கொஞ்ச நாளா ஒரு மனிதரோட செயல்கள் எனக்கு எரிச்சல் கொடுத்துட்டே இருந்தன. போன வாரம் எரிச்சல் அதிகமானதுனால ராதாவுக்குச் சொன்ன சுகம் செயல்முறையை செயல்படுத்தினேன். ஆஹா… என்ன மாதிரி ஒரு விடுதலை கிடைச்சுது தெரியுமா? அந்த மனிதர்கிட்டேயே அவரோட செயல்கள் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம் அமைஞ்சது. அவர் தான் செய்யற எல்லாமே நியாயம்னுதான் சொன்னார். ஆனா எனக்குத் துளிகூட எரிச்சலோ கோபமோ வருத்தமோ வரலை. மாறாக அவர் மேல கருணைதான் வந்தது. வெளில எதுவுமே மாறி இருக்கலை. ஆனா நான் உள்ளே சௌகர்யமா உணர்றேன். இதுதான் சுகம் பெறுதலின் மகிமை.

யாராவது சுகம் செயல்முறை செயல்படுத்தினீங்களா? உங்களோட அனுபவத்தைப் பகிர்ந்துக்கலாமே!

கொடை 3:

வாசகி சாந்தி நிலாச்சாரலுக்கு அனுப்பிய நன்கொடை மற்றும் அவர் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப ரீதியாக அவர் அளிக்க முன்வந்திருக்கும் ஆதரவு. இது நிலாச்சாரலை மேம்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும். நிலாக்குடும்பம் சார்பாக சாந்திக்கு நன்றி.
விரைவில் ஒலி, ஒளி வடிவில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறேன். அதோடு, நிர்வாகப் பளு குறைந்தால் மீண்டும் ரிஷி ராக் செய்ய வருவார் என்று உங்களைப் போலவே நானும் நம்பி இருக்கிறேன்.

கொடை 4:

வாசகர்கள், நண்பர்கள் பலர் ‘கொடை’ ‘blessing’ போன்ற வார்த்தைகளையும் அதிகமாக ஸ்மைலியையும் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நிலாக் குடும்ப அங்கத்தினர் ஒருவர் (அவர் அனுமதியில்லாமல் பெயர் சொல்வது சரியில்லை), “நிலாவும் நிலாக் குடும்பமும் எனக்குக் கிடைத்த பெரிய கொடை. இந்த நட்பு விலை மதிப்பற்றது” என்று எழுதியிருந்தார். இதைவிட எனக்கு என்ன பெரிய கொடை இருக்கும்? இப்படித்தான் நிலாக்குழுவில் இணையும் ஒவ்வொருவரைப் பற்றியும் நான் உணர்கிறேன். எங்களுக்குள் இருப்பது ஒரு இனம் காண இயலாத, எதிர்பார்ப்பில்லாத பிரியம். கோப தாபங்கள், நிறை குறைகள் எல்லாவற்றோடும் அரவணைக்கிற அன்பு. நாங்கள் எங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அந்த அன்பு எங்களைப் பிணைத்திருக்கிறது என்பதை உணர முடியும். ஏன், எப்படியென்று தெரியாது.

கொடை 5:

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் ட்ரஸ்டுக்கு இணையதளம் அமைச்சுக் கொடுக்க முன்வந்திருக்கும் இரண்டு வாசகிகள்… ஏம்பா, பசங்க எல்லாம் கிரிக்கெட் பார்க்கறதுல முழுகிட்டீங்களா, என்ன? சத்தமே காணோம்?

விரைவில் தாமரை இல்லத்துக்கு இணையதளம் அமைத்துவிடுவோம், மக்களே!

கொடை 6:

மாமல்லன் நினைவு படுத்தின ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல் பல நினைவலைகளை உருவாக்கினது. என் ஐபாட்ல நான் அதிகம் கேட்டது இந்தப்பாடலாத்தானிருக்கும்னு நினைக்கிறேன். கல்லூரி விடுதியிலும் நான் இதை அடிக்கடி தோழிகளுக்காக பாடிருக்கேன் (சுமாராத்தாங்க பாடுவேன்). இதை எழுதும்போது ‘ஒரு இனிய மனது’ பாடலை என்னை அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்கும் தோழி பிரேமா நினைவுக்கு வருகிறார்… தவிர, அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் ஒரு இரவு நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த ‘சுட்டும் விழிச்சுடர்தான்’ பாடலை மகாலஷ்மிக்காக பாடினப்போ… சாலையில் நடந்து போன ஒரு மாணவர் இறங்கி வந்து ‘ரொம்ப அருமையா பாடினீங்க’னு சொல்லிட்டுப் போனது கனவு போல நினைவில வருது. அவருக்கும் நான் யார்னு தெரியாது. எனக்கும் அவர் யார்னு இன்றைக்கு வரைக்கும் தெரியாது… உயிர்த்தோழியாக இருந்த மகாலஷ்மியும் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது. வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது பாருங்க!

இப்போ நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல், “Sometimes I wish I were an angel; Sometimes I wish I were you”. பாடலை இந்த சுட்டில பார்க்கலாம்/கேட்கலாம்:

http://www.youtube.com/watch?v=Dn51LxzSHf0

கொடை 7:

கண்களை நனைத்த கலையரசியோட நினைவலைகள். என்ன அருமையா தன் உணர்வுகளை நெஞ்சிலிருந்து எழுதறார்!!! இத்தனை நாளாய் எங்கே இருந்தீர்கள், கலையரசி? தொடருங்கள்…

கீதாவும் இப்போ அதிகம் எழுதறதை சந்தோஷமா பார்க்கறேன். இவங்க ரெண்டு பேரைத் தவிர்த்து வேற யாரும் மடையைத் திறக்க மாட்டீங்களா?

கொடை 8:

ராகவி என்கிற ராஜியோட பின்னூட்டம் இந்தப் பகுதியை எழுதத் தூண்டினது.

ராஜி, ஆங்கிலம் வெறும் மொழி அவ்வளவே… அது தெரியலைன்னு நீங்க வருந்தத் தேவையில்லை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கல்லூரிக்குப் போன போது எனக்கு ஆங்கிலம் பேச சுத்தமா வராது. ‘தண்ணி வரலை’ ‘உடம்பு சரியில்லை’ போன்ற அடிப்படை வாக்கியங்கள் கூட பேசத் தெரியாது. நான் +2 வரை படிச்சது தமிழ்ல. வளர்ந்தது மம்சாபுரம்னு ஒரு கிராமத்தில். சுத்தமா உலக ஞானம் வேற கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான் கிராமப்புற மாணவர்கள் மேல எனக்கு ஒரு பரிவு உண்டு. அவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படறேன்.

அதை விடுங்க, , “தாய் மொழி கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவை’னு கேள்விப்பட்டிருக்கீங்களா?. நம்மோட ஆங்கிலம் சரியில்லைன்னு நாமதான் குறைப்பட்டுக்கறோமே தவிர, மேலை நாடுகள்ல யாரும் நம்மை கிண்டல் செய்ய மாட்டாங்க. நாம சொல்ல வந்ததைப் புரியற மாதிரி சொன்னா போதும்; இங்கே இலக்கணம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படறதில்லை.

அதனால நீங்க சொல்ல விரும்பறதை தயக்கமில்லாமல் சொல்லுங்க…

***

என்னோட புடவை தெரிவு ரொம்ப சுமாராத்தானிருக்குன்னு ஒரு வாசகி எழுதிருந்தாங்க. Fair enough. ஏதோ என்னோட சின்ன பட்ஜெட்ல நான் வாங்கற உடைகள் என்னோட குறுகிய வட்டத்தில என் லெவல்ல இருக்கற சாதாரண மக்களுக்கு பிடிச்சிருக்குங்கறதுனால, ஐஸ்வர்யா ராய் பச்சன் லெவல்ல ஃபிலிம் காமிச்சிட்டேனோ? சுட்டிக்காட்டிய அந்த வாசகிக்கு நன்றி.

அதுக்காக, சுயதம்பட்டத்தை விட்றமுடியுமா, சொல்லுங்க? ஏதோ நம்ம லெவல்ல இருக்கற மக்களுக்காக, இந்தப் படத்தில இருக்கற புடவை பற்றிய முன்/பின் விபரங்கள்: புடவை ஆஸ்தான தெய்வம் சில்க்ஸ்ல 300 ரூபாய்க்கு வாங்கியது. அலுவலகத்துக்கு இதைக் கட்டிருந்தப்போ எங்க பாஸுக்கு பாஸுக்கு பாஸ், “உங்க தேசிய உடை மிகவும் அழகாக இருக்கிறது”ன்னு சொன்னார். நம்புங்க, இலண்டன் அலுவலகத்துக்குத்தான் புடவை கட்டுவேன். அதுபற்றி விபரமா இன்னொரு முறை எழுதறேன்.

அதுசரி, போனவாரம் யாருமே எந்தக் கேள்வியும் கேக்காம ராம்கிகிட்டே என்னோட மானத்தை வாங்கிட்டீங்களே! கரகாட்டக்காரன் படத்தில பத்து ரூபா கொடுத்து புகழ்ந்து பேச செந்தில் ஆள் ஏற்பாடு பண்ணின மாதிரி அவர் நினைச்சிற மாட்டாரா?

பரவாயில்லை விடுங்க… நம்ம ராம்கிதானே!

நானே சில கேள்விகள் கேக்கறேன்:

உங்க வாழ்க்கையோட உங்க உறவு எப்படி இருக்கு?

சௌகர்யமா இருக்கா? ஆனந்தமா இருக்கா? சகிச்சிக்கற மாதிரி இருக்கா? ஏதோ குறையறது போல இருக்கா? தாங்க முடியாத அளவுக்கு கொடுமையா இருக்கா?

சௌகர்யமாவோ ஆனந்தமாவோ இல்லைன்னா அதை மாற்ற நீங்க என்ன முயற்சி எடுக்கறீங்க?

அடுத்த பிறவில நீங்கள் நீங்களாவே பிறக்க விருப்பப்படுவீங்களா? ஏன்?

யோசிச்சு வைங்க… அல்லது சொல்லுங்க… அடுத்த வாரம் பேசுவோம்.

அதுவரைக்கும் பிரகாசமா இருங்க… சரியா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

10 Comments

  1. mini

    Nila, How are you doing? Naan in tha week elutha niraya blessinga vaithu irunthen. aana enaku singer chitra voda soga news kelvi patathila irunthu onum elutha pidikala.. romba romba kastama irunthathu. ennala mudincha avunga pakathil utkarthu konjam pesalamaenu kuda irunthathu. onum panna mudiyalanu romba varuthama irunthathu.

    Radhamohan noda Payanam pathi soli irunthinga illaya ? atha parthen. romba pidichu irunthathu. avaroda matha padangal thedi Mozhi” yum parthen. arumaiyana padangal. ippadiyum sila directors irukathan seiyaranganum romba santhosama irunthathu. naanum enoda husbandum sernthu (nalla rain anniku veliyala) coffee,pakoda voda parthom. we enjoyed it. nice blessing.

    appram enga veetu front yardla neenga kati irukira pink colorla oru tree muluku flowers. romba alaga manasuku romba romba santhosatha kuduthathu. athai flowers roads ellathalum parthen. manasa amaithiyakiyathu.

    Ungaloda pink saree enaku romba pidichu iruku.

  2. குமார்

    //உங்க வாழ்க்கையோட உங்க உறவு எப்படி இருக்கு?//
    சில நேரங்களில் நண்பர்களுடன் இருக்கையில் சௌகர்யமாக உணர்கிறேன், சில நேரங்களில் தனிமையில் இருக்கும்போது ஆனந்தமாக உணர்கிறேன், சில நேரங்களில் உறவினர்களின் கேள்விகளுக்கு சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, நம் வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை எண்ணும்போது ஏதோ ஒன்று குறைந்தததைப்போன்ற உணர்வு, சில நேரங்களில் ஏண்டா பிறந்தோம் என்ற கடுமை உணர்வு ஒருபுறம்.

    நிலா இப்போது சொல்லுங்கள் ஒருவர் வாழ்க்கையில் இத்தனை உணர்வுகளையும் உணராதவர் ஒருவர் உலரோ!

  3. கீதா

    நிலா, நீங்க முதல் கொடையில் சொல்லியிருக்கிற விஷயங்கள் எனக்குப் புதியவை என்றாலும் உங்களை மகிழ்வித்த அவற்றை வியப்போடு பார்க்கிறேன்.

    என்னுடைய வாழ்க்கை சந்தோஷமா போறதாதான் நான் நம்புறேன். ஏன்னா எல்லாம் நன்மைக்கே என்னும் மனநிலை உடையவள் நான். மனம் வருத்திய நிகழ்வுகளையெல்லாம் வேற ஒரு மோசமான விஷயத்தோடு தொடர்புபடுத்தி அப்படியில்லாமல் போனதே என்று ஆறுதல்பட்டுக்குவேன். இன்றுவரை அப்படிதான் இருக்கிறேன். அதனால் சோகத்துக்கு வாய்ப்பே இல்லை.

  4. Vanji

    Hi Nila,
    I like the pink saree of yours. Very pleasant. Of course you look good in that saree:-)
    I am reading the Power of Now book for a while. I got that from a friend and then I read in your article.
    I am listening to the Secret all the time. Law of attraction – it is working!!!
    If possible, you can write about a book may be like a review once a month which will help us/drive us towards good books.
    Keep writing, feel good and drive us towards good. Change so many lives like you changed mine:-)
    One question abut Indigo children, when googling found negative reviews about, what do you think of that?
    With love,
    Vanji

  5. Radha

    அன்பு நிலா,
    வணக்கம். நீங்கள் முந்தய பதிவில் கூறிய சுகமளித்த்ல் முறை எனக்கு மிக மிகப் பயன் தந்தது. நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கான முடிந்தது ஆனாலும் புதிய பிரச்சினைகள் வந்து கொண்டே உள்ளன.. சில சமயங்களில் மனது மிகவும் சோர்ந்து போய்விடுகிறது.

    உங்க வாழ்க்கையோட உங்க உறவு எப்படி இருக்கு- இதுவரைக்கும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. எப்போதுமே மற்றவர்களுடனான எங்களின் உறவு பற்றியே கவலைபடுவதும், அவ்வுறவுகளைச் சீர் செய்ய தியகங்கள் விடுகொடுப்புகள் புரிவதும், மனம் வருந்துவதும் ஆகிப்போன வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் அணுக வைத்துள்ளீர்கள்.
    ஆயிரம் நன்றிகள்
    உங்க வாழ்க்கையோட உங்க உறவு எப்படி இருக்கு ( முதலில் நான் என்னை நேசிப்பதை எவ்வாறு (என்க்கு) உறுதிப்படுத்துவது.? என்னை எனக்கு பிடிச்சிருக்கா?. எவ்வறு என் வழ்க்கையோட எனது உறவை வலுப்படுத்துவது?)

    நிலா இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்

    அன்புடன் வாசகி
    ராதா

  6. கலையரசி

    நிலா,
    முதலாவது கொடையில் நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து ஒரே ஆச்சரியம்! இப்படிக்கூட நடக்குமா என்று! நிஜ நிகழ்வுகள் சில சமயங்களில் கற்பனை கதைகளை விட சுவாரசியமாக இருப்பதற்கு முதல் கொடை ஓர் எடுத்துக்காட்டு!

    கிராமப் பின்னணியில் பிறந்து வளர்ந்து இந்தளவுக்கு நீங்கள் உயர்ந்திருப்பதை அறியும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. வள்ளுவரின் ’உள்ளத்தனையது உயர்வு,’ என்ற குறளின் கருத்தில் தான் எவ்வளவு உண்மை?

    ஏழாவது கொடையில் என் நினைவலைகளைப் பாராட்டியுள்ளமை எனக்குப் புத்துணர்ச்சியை அளித்து மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்குகிறது. நன்றி நிலா.

    இந்த வாழ்வில் என்னோட உறவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இல்லாததால் ஏமாற்றங்களும் பெரிய அளவில் இல்லை.
    அடுத்த பிறவியில் நான் நானாகப் பிறக்க விரும்புவேனா? யோசித்துச் சொல்கிறேனே!

  7. கவிதா பிரகாஷ்

    நிலாக் குடும்ப அங்கத்தினர் ஒருவர் “நிலாவும் நிலாக் குடும்பமும் எனக்குக் கிடைத்த பெரிய கொடை. இந்த நட்பு விலை மதிப்பற்றது” என்று எழுதியிருந்தார்.(அவர் அனுமதியில்லாமல் பெயர் சொல்வது சரியில்லை), – அவர்- கொங்கு நாட்டு சிங்கி.

    நிலாவும், நிலாக் குடும்பமும் எனக்குக் கிடைத்த பெரிய கொடை என சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!

    நிலாக் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்!

  8. R.Panneer selvam, madurai

    மம்சாபுரத்து மஙகையே!

    தஙகளின் சிறப்பான எண்ணஙகள் என்னை வியக்க வைக்கிறது

  9. rvishalam

    அன்பு நிலா நல்லாசிகள் நலமா ? பிறந்த நாள் நெருங்கிய நிலையில்
    இருக்கிறது இல்லையா ? என் அன்பு கனிந்த இனிய வாழ்த்துகள்

    இந்தப்பிரபஞ்சத்தில் நாம் கேட்பது நடப்பதை நானும் அனுபவித்திருக்கிறேன் ,ஒரு தடவை தெருவைத்தாண்ட முடியாத நிலையில் பல கார்கள் ஓடியபடியே இருந்தன . நான் பிரபஞ்சத்தின்
    சக்தியை நினைத்து அதில் சாயிராம் என எழுதிய காரையும், பின் அது
    நகர்ந்தப்பின் ஒரு காரும் வராமல் நான் தெருவைத்தாண்ட வேண்டும் என்றபடியே சில சிம்பல்கள் மனதில் இட்டேன் .அவ்வளவுதான்.
    ஒரு ஸந்த்ரோ கார் வந்தது அதில் சீரடி பாபாவின் படமும் கீழே
    சாயிராம் என்றும் எழுதியிருந்தது .பின் நிம்மதியாக நான் கிராஸ் செய்யவும் முடிந்தது .இதே போல் கோபமாக இருப்பவருக்கு பிங்க் கலர் ஒளியை அவர் மேல் அனுப்ப அவர் கோபம் கட்டுப்படும் சாந்தமாகிவிடுவார் .பூரண நம்பிக்கையும் இதில் பங்கு பெறுகிறது

Comments are closed.