மடை திறந்து… (22)

என்னப்பா, வாழ்க்கை உங்களை நல்லா நடத்துதா? நீங்க வாழ்க்கையை நல்லா நடத்தறீங்களா? நான் வழக்கம் போல என்னோட வாழ்க்கை நாடகங்கள் மூலமா புதுசு புதுசா கத்துக்கிட்டிருக்கேன்…

இந்த வாரம் எப்படி நம்மோட நம்மோட ஆழ்மனசில இருக்கும் குறுக்கும் நம்பிக்கைகளை எளிமையா நீக்கறதுன்னு கத்துக்கிட்டேன். மைய நம்பிக்கைகள்/ குறுக்கும் நம்பிக்கைகள் பற்றி மனசே சுகமா தொடர்ல விரிவா எழுதிருக்கேன். யாராவது படிச்சிருக்கீங்களா? அந்தத் தொடரோட இரண்டாவது பாகத்தை எப்பவோ ஆரம்பிச்சிருக்கணும்,… ஆனா இதயம் இன்னும் வழிகாட்டலையேப்பா….

சரி… குறுக்கும் நம்பிக்கைகளுக்கு வருவோம்… ஒரு வாசகி கேட்டிருந்தாங்க… நீங்க சொல்றதெல்லாம் புரிஞ்சாலும் என் இதயம் ஏனோ நான் ஒரு துரதிர்ஷ்டக்காரின்னுதான் சொல்லுது. அதை எப்படி நீக்கறதுன்னு. நான் கேட்டேன், உங்க இதயம் இதை நம்பிக்கைன்னு நினைக்குதா நிதர்சனம்னு நினைக்குதான்னு.. அவங்க நிதர்சனம்னு பதில் சொன்னாங்க.

இங்கே நாம நல்லா கவனிக்கணும். பால் வெள்ளைங்கறது நிதர்சனம். பால் சுவையானதுங்கறது நிதர்சனமா? நிறைய பேருக்கு பால் பிடிக்கமாட்டேங்குதேப்பா… அப்படின்னா அது நிதர்சனமில்லை இல்லையா? அது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட அனுபவம்/ நம்பிக்கை/அனுபூதி. (Perception)

அதே போல, ‘ரம்யா துரதிர்ஷ்டசாலி’ங்கறதும் நிதர்சனமாக முடியாது. அது ரம்யாவோட தனிப்பட்ட நம்பிக்கை. இந்த மாதிரி நம்பிக்கைகள் நம்மகிட்டே இருக்கும்போது அதை மெய்ப்பிக்கற அனுபவங்களைத்தான் நாம வாழ்க்கைல ஏற்படுத்துவோம். வாழ்க்கையோட எல்லா அனுபவங்களையும் இந்த கறுப்புக் கண்ணாடி வழியாத்தான் பார்ப்போம்.

இதை ஒரு எடுத்துக்காட்டு வழியா பார்ப்போம். ரமயாவுக்குக் கல்யாணம். உறவுக்காரங்க, நட்பு வட்டம் எல்லாரும் வந்திருக்காங்க. அன்னிக்குப் பார்த்து நல்ல மழை. சரியா?

ரம்யாவோட குட்டித்தங்கை சௌம்யாவுக்கு மழைன்னா கொள்ளைப் பிரியம். தன்னோட தோழிகளோட மழையில நனைஞ்சு ஒரே கும்மாளம். ஜாலி. சௌம்யா நினைச்சா, ‘ரொம்ப ஜாலி. வெரி லக்கி டே’

ரம்யாவோட மாமனார் ஒரு விவசாயி. அவர் நினைச்சார், "பயிருக்குத் தேவையான நேரத்தில மழை. கடவுள் என்னைக் கைவிடவே மாட்டார்"

அண்ணி ராஜி, ‘அடடா வாசல்ல போட்டிருந்த கோலமெல்லாம் அழிஞ்சிருக்குமே. தெரிஞ்சிருந்தா அவ்வளவு கஷ்டப்பட்டு போட்டிருக்க வேண்டாம்’

லஷ்மி பாட்டி, ‘முகூர்த்த நேரத்தில நல்ல மழை. ரொம்ப நல்ல சகுனம்’

ரம்யா என்ன நினைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க… அது அது அதேதான்… ‘நான் துரதிர்ஷ்டக் காரி. என்னோட கல்யாணத்தன்னிக்குன்னு பார்த்து இப்படி நசநசன்னு மழை’

நிகழ்வு ஒண்ணேதான். ஆனா, மகிழ்ச்சி, நன்றியுணர்ச்சி, வருத்தம், நிறைவு, துக்கம்னு எத்தனை வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் மனிதர்கள்கிட்டே இருந்து வருது பார்த்தீங்களா? நிதர்சனத்துக்கும் நம்பிக்கைக்குமுள்ள வித்தியாசம் இதுல தெரியுதில்லையா?

மற்ற பல பிரச்சினைகளை த் தீர்க்க உதவும் சுதந்திர உத்தியும், சுகம் செயல்முறையும் இந்த குறுக்கும் நம்பிக்கைகளை நீக்க ரொம்பவே உதவும். ஆனா குறுக்கும் நம்பிக்கைகளை நீக்கறதுக்குன்னே விசேஷமான ஒரு உத்தியை நான் இந்த சுட்டிலர்ந்து கத்துக்கிட்டேன்:

http://www.youtube.com/user/TheHappyGuruTV#p/u/3/lk_8qKNW23M

இந்த உத்தில மேலும் விளக்கம் தேவைன்னா, நேயம் குழு மூலமா கேள்வி அனுப்புங்க. விளக்கறேன். யாருக்காவது இதைத் தமிழ்ல இதுக்கு செயல்முறை விளக்கம் எழுதினால் பலருக்கும் பயன்படும்(னு நினைக்கிறேன்).

என்னோட குட்டியஸ்ட் தம்பி ஒருத்தன் பற்றி எழுதிருந்தேனில்லையா… அவன்கிட்டே சமீபத்தில ஒன்றரை மணி நேரம் பேசினேன் – எனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. அவன் வயசில நானிருந்தது மாதிரியே இருக்கறான்; பேசறான்… அவனுக்கு பதினெட்டு வயசு ஆகுது. முழு நேரமும் நாங்க ஆன்மீகம் பற்றிதான் பேசிருக்கோம்னா பார்த்துக்குங்களேன்.. ரொம்ப சுவாரஸ்யமா போச்சு பேச்சு.

நாங்க பேசின ஒரு விஷயம் பற்றற்றிருப்பது. ஆசையை அடக்கறது வேற, பற்றற்றிருப்பது வேறன்னு விளக்கறது கொஞ்சம் சவாலாதானிருந்தது. உதாரணத்துக்கு சக்திக்கு ரொம்ப நாளா லாப் டாப் மேல ஆசைன்னு வச்சுக்குவோம். ஆனா வாங்க வசதியில்லை. அதனால அது மேல ஆசைப்படக் கூடாதுன்னு ரொம்ப மனசைக் கட்டுப்படுத்திக்கறா. கடைகள் பக்கம் போகறதையும். தோழிகளோட லாப் டாப்பை பயன்படுத்தறதையும் தவிர்க்கறா. இது ஆசையை அடக்கறது. நாளடைவில என்ன ஆகும்? லாப் டாப்பைக் கண்டாலே வெறுப்பு வரும். பின்ன வாழ்க்கை மேல கசப்பா அது மாறும்… ஒரு கட்டத்துல எதுக்கு இந்த வாழ்க்கைங்கற விரக்தி வரும்.

மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட எந்த உணர்ச்சியுமே அழிவதில்லை. வேற ஏதாவது ஒரு ரூபத்தில வரும் – சில சமயம் அது திட உடல்ல நோயா கூட வெளிப்படும். அதனால என்ன உணர்ச்சிகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டு விடுவிப்பதுதான் நிரந்தரத் தீர்வைத் தரும்.

‘அப்படின்னா நான் கோபத்தில கன்னா பின்னான்னு அடுத்தவங்களைக் கத்தறது சரின்னு ஆயிடுமா?’ன்னு கேட்டாங்க ஒரு தோழி. ஒரு சின்ன பயிற்சி மூலமா அவங்களுக்கு பதில் சொன்னேன்:

"நீ ரொம்பக் கோபப்பட்ட ஒரு நிகழ்வை மனசில உருவகப்படுத்திக்கோ"
"ம்"
"ஏன் கத்தினே?"
"எங்கம்மா என்னோட உடையை விமரிசிச்சது எனக்குப் பிடிக்கலே"
"என்ன உணர்ச்சி இருந்தது?"
"கோபம்"
"அதை நினைக்கும் போது இப்போ என்ன உணர்ச்சி இருக்கு?"
"வெட்கமா இருக்கு. தேவையில்லாம ரொம்பக் கத்திட்டேன்"
"சரி… அதனால என்ன?"
"இனிமே அம்மாகிட்ட அதிகம் வச்சிக்கறதில்லைங்கற முடிவுக்கு வந்திருக்கேன்"
"ஏன்?"
"இது இனிமே நடக்காம இருக்கத்தான்"
"நடந்தா என்ன ஆகும்?"
"இதே போல அசௌகரியமா இருக்கும்"
"ஏன் இது அசௌகரியம்?"
இங்கே மௌனம்… பின்னே, "அம்மாவைப் பிடிச்சு கத்தறது தப்பில்லையா?"
"ஏன்?"
நான் இப்படிக் கேட்டதும் ஒரு அதிர்ச்சியான பார்வை பார்த்தா – எனக்கு ஏதாவது மூளை பிசகிருச்சோன்னு… (கவனிங்க… கவனிங்க… நாட்டாமையோட இருப்பை). நானே தொடர்ந்தேன்.

"சரி… நீ இப்போ இருக்கற இதே சூழல்ல இன்னொரு நெருக்கமான தோழி இருக்கறா. என்ன செய்வே?"
தயக்கம்… தீவிர சிந்தனை.
"பரவாயில்லைப்பா. ரொம்ப வருத்தப்படாதேன்னு ஆறுதல் சொல்லுவேன்."
"ஏன்?"
"அவ பாவமில்லையா…. வேணும்னேவா செய்யறா? கோபம் தானா வருது"
"அதே கருணையை ஏன் நீ உன் மேல கொஞ்சம் காட்டக் கூடாது? உனக்கே இதைக் கொஞ்சம் சொல்லிப் பாரேன்"
ஆழ்ந்த அமைதி… கொஞ்ச நேரத்தில கரகரன்னு கண்ணுல இருந்து தண்ணி. அப்பறம் தேம்பித் தேம்பி அழுதா.
அழுது முடிச்சப்பறம்,"எப்படி இருக்கு?" னு கேட்டேன்.
"ஏதோ பெரிய பாரம் இறங்கினாப்பல இருக்கு"ன்னு சொன்னா கண்ணைத் துடைச்சிக்கிட்டே.

இந்தப் பயிற்சில நாம என்ன செய்தோம்னா அவளோட குற்ற உணர்ச்சி தப்புன்னு அதுகூட சண்டை போடறதுக்கு பதிலா அதை ஏத்துக்கிட்டு அதுக்கு கருணை காமிச்சோம். தன்னால கரைஞ்சிருச்சி.

"அம்மா மேல இன்னும் கோபம் இருக்கா?"
"அவ்வளவா இல்லை"
"அம்மாவைத் தவிர்ப்பியா?"
"இல்லை"

இந்த உரையாடல்ல அவ சத்தம் போட்ட அந்த குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி நாம எதுவுமே தீர்ப்பிடலை. ஆனா அந்த நிகழ்வினால அவ சுமந்துக்கிட்டிருந்த பாரம் இறங்கி வாழ்க்கையோடான அவளோட உறவு மேம்பட்டிருக்கு.
அப்படின்னா ‘அந்த நிகழ்வில அவ நடந்துக்கிட்டது சரியா தவறா?’ங்கற பட்டிமன்றமே தேவையில்லாமப் போயிடுது இல்லையா?

அதனால எப்பவும் நீங்க உங்களைக் கேட்க வேண்டிய முதல் கேள்வி, "இந்த கணம் நான் என்ன உணர்றேன்?"

அடுத்து நீங்க செய்ய வேண்டியது அதை உணர்ற உங்க மேல கருணை காட்டறது. நீங்களும் பாவம்தானே? செஞ்சு பாருங்க. கண்ணாடி பார்த்து வாய்விட்டுப் பேசினா இன்னும் நலம்!

******

குமார் போன வாரம் சுகவர்னா யாரு, அவங்களை எப்படி அடையாளம் காணறதுன்னு கேட்டிருந்தார். நான் பின்னூட்டத்திலேயே பதில் சொல்லிருந்தாலும் கவனிக்காதவங்களுக்காக இங்கேயும் எழுதறேன். சுகவர்ங்கற வார்த்தை Healer என்ற ஆங்கில வார்த்தையின் என்னோட தமிழாக்கம்.

உடல் நலத்தைப் பேண இருக்கற மருத்துவர்கள் மாதிரி வாழ்க்கை நலத்தைப் பேணறவங்க சுகவர்கள். உடல் – மனம் – ஆன்மா மூணுமே ஒருங்கிணைஞ்சு செயல்பட்டா வாழ்க்கை சுமுகமா இருக்கும்கற கோட்பாட்டின் அடிப்படையில சுகமளிக்கறவங்கதான் சுகவர்கள். சுகமளிப்பதில பற்பல வழிமுறைகள் இருக்கு. இதுல எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டில அதிகமா நடைமுறையில இருக்கறது – Yoga, Reiki, Pranic healing, Hypnotherapy, Meditation, Homeopathy (இதை ஆங்கிலத்தில கொடுக்க காரணம் நீங்க கூகிள்ல தேட வசதியிருக்கும்ங்கறதுதான்). முதல்ல இந்த முறைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. அப்புறம் எது உங்களுக்குச் சரியா படுதோ அதை பயன்படுத்தற சுகவர்களை இணையத்தில தேடலாம்.

ஆனா எல்லா சுகமளிக்கும் முறைகளுக்கும் நீங்க நேர்ல இருக்கணும்னு அவசியமில்லை. உதாரணமா நான் அதிகமா பயன்படுத்தற சுகம் செயல்முறை, சுதந்திர உத்தி, உருவகப்படுத்துதல் எல்லாமே தொலை உரையாடல்கள் மூலம் செய்ய முடியும். இந்த உத்திகளைக் கையாள்ற சுகவர்கள் வட இந்தியாவில இருக்காங்க. ஆனா நான் தமிழ்நாட்டில யாரையும் இன்னும் பார்க்கலை… இன்னும் கொஞ்ச நாள்ல குமார், பாரதி, யஷ் இப்படி நம்ம வாசகர்களே இதைவிட நிறைய தெரிஞ்ச சுகவர்கள் ஆவாங்களா இருக்கும். அந்த நாளை ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

******

தாமரை இல்லத்துப் பெண்களுக்கு என்னென்ன நூல்கள் ஒலி வடிவில வேணூம்கற பட்டியல் நேயம் குழுவில இருக்கு. கார்த்திகாதான் அதை முன்னால நின்னு செயல்படுத்தப் போறாங்க. உங்களுக்கும் விருப்பம் இருந்ததுன்னா பங்கெடுக்கலாம்:

http://groups.google.com/group/neyam

பார்வையற்றோருக்கு வங்கில இருக்கற வேலை வாய்ப்புகள் பற்றியும் மேலதிக பயிற்சி விபரங்கள் பற்றியும் யஷ் நிறைய தகவல்கள் சேகரிச்சிருக்காங்க. அதை எப்படி செயல்படுத்தறதுங்கற அடுத்த கட்ட திட்டமிடல்ல இருக்கோம். தாமரைப் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டறதுக்கான பயிற்சி வகுப்புகளும் தேவைன்னு நினைக்கறோம். சொற்பொழிவோ பயிற்சியோ நேர்ல போயிதான் நடக்கணும்கறதில்லை. அதனால யாருக்காவது திறமையும் ஆர்வமுமிருந்தா சொல்லுங்கப்பா… தொலை உரையாடல் ஏற்பாடு செய்வோம்.

******

சுவாதிப்ரியாங்கற ஒரு மாணவியோட விபரங்கள் அனுப்பிச்சிருந்தார் ராதாகிருஷ்ணன். +2வில 93% அக்ரிகேட் வச்சிருக்கற சுவாதியோட அப்பா மே மாதம் திடீர்னு தவறிட்டார். தச்சு வேலை செய்து வந்த அவரோட வங்கிக் கணக்குல இருந்த பணம் சுவாதியோட மேல்படிப்புக்கான நூல்கள் வாங்கவே பத்தாது. சுவாதியோட அம்மா வீட்டில தையல் வேலை செய்யற எளிமையான பெண்மணி. கணவர் இறந்த அதிர்ச்சில இருக்காங்க. சுவாதிகிட்டே பேசினேன். வீட்டு செலவுக்காக டியூஷன் எடுக்க ஆரம்பிச்சிருக்கற ரொம்பப் பொறுப்பான, தெளிவான பொண்ணு. தனக்காகவும் தன் அப்பாவுக்காகவும் பொறியியல் படிக்கணும்கறது விருப்பம். ஆனா கவுன்சலிங்ல சென்னையில சீட் கிடைக்குமான்னு தெரியலை. அம்மாவையும் தம்பியையும் இந்த நிலையில விட்டுட்டு வெளியூர் போக முடியாத நிலைமை. நன்கொடை கொடுத்து சீட் வாங்க வசதியில்லை.

ராதா கிருஷ்ணன் வங்கிக் கடனும் ஏனைய உதவிகளும் பெற முயற்சி செஞ்சிக்கிட்டிருக்கார். விசுவோட மக்கள் அரங்கம் மூலமா தகுதியான மாணவர்களுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரில 10 சீட் தர்றாங்கன்னு ஒரு நண்பர் சொன்னார். யஷ்ஷும் ராதா கிருஷ்ணனும் இதைப் பற்றிய விசாரணைல இறங்கி இருக்காங்க. சூர்யாவோட அகரம் மூலமா உதவி பெறவும் முயற்சி நடக்குது.

15ம் தேதி சுவாதிக்கு கவுன்ஸலிங். அவங்க விரும்பற கோர்ஸும் கல்லூரியும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம். இது தவிர, உங்க செல்வாக்கை பயன்படுத்தி சுவாதியோட படிப்புக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்னா எங்களைத் தொடர்பு கொள்ளுங்க.

சரி, அப்புறம் பார்ப்போமா? அன்பான அன்பம் எல்லாருக்கும்….

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

2 Comments

  1. janani

    Hello madam, your way of writing is cho sweet, past 2 weeks you are not tell about your dresses. what happened?

  2. Barathi (vs) Karthiga

    Hi Nila,
    Barathi here, i mean Karthiga here. yeah when i am really upset or depressed i used to call myself as Barathi(the person i like most, its our great barathiyar. i feel when iam despressed he should be with me so i call myself like that).
    i felt that there is a miscommunication that you took Barathi ad Karthiga as two different ppl.

    BTW nowadays i dont call myself as barathi, i started understanding Univers. 🙂

Comments are closed.