மடை திறந்து… (31)

என்னப்பா, வாழ்க்கை எப்படிப் போகுது? இங்கே எல்லாம் சமத்தா போயிட்டிருக்குப்பா…

போன வாரம் புதுசா ஒரு சுகமளிக்கும் உத்தி கத்துக்கப் போயிருந்தேன். இந்த வார இறுதில இன்னொரு உத்தி கத்துக்கப் போறேன்…. அதனால அலுவலகம் முடிஞ்சு வந்து மடை திறந்து எழுதறேன் (ப்ராமிஸ் பண்ணிருக்கேனே!)

போன வாரம் நான் போயிருந்த பயிற்சி ரொம்ப நல்லா இருந்தது. இப்போ நான் ஒரு ‘Access Consciousness Bars Practitioner’.
தலையிலருக்கற 32 புள்ளிகளைத் தூண்டி விடுறது மூலமா நம்ம வாழ்க்கையைக் குறுக்கற நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் நீக்கறதுதான் இந்த உத்தியோட அடிப்படை. இந்த உத்தியை தூரத்தில இருக்கறவங்களுக்கும் உருவகப்படுத்துதல் மூலமா செயல்படுத்தலாம். கத்துக்கிட்டு வந்த அடுத்த நாளே ராஜூவுக்கு ஒரு செஷன் கொடுத்தேன். ரொம்ப ரிலாக்ஸ்டா தியானம் பண்ணின மாதிரி இருக்கறதா சொன்னார். இதுல என்ன விசேஷம்னா சுகமளிக்கறவ்ங்களுக்கும் சுகம் கிடைக்கும். இந்த வாரம் அலுவலகத்தில ‘நீங்க இன்றைக்குப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கீங்க’ ‘ரொம்ப நிம்மதியா இருக்கற மாதிரி தெரியறீங்க’, ‘உங்க டாப்ஸ் நல்லா இருக்கு’ன்னெல்லாம் எதிர்பாராத மக்கள் என்கிட்டே சொன்னாங்க. இந்த உத்தியோட மகிமைதான்னு நினைக்கிறேன். இனி கொஞ்ச கொஞ்சமா வெளிலேயும் இதைப் பரப்பணும். கையில ஏற்கெனவே ஒரு பட்டியல் இருக்கு. அவங்களுக்கெல்லாம் கொடுத்த பிறகு உங்கள்ல யாருக்காவது தேவைப்பட்டா தர்றேன்.

இந்த உத்தியோட நோக்கம் என்னன்னா வாழ்க்கையை எளிதா வாழணும்கறதுதான். உங்களுக்கு வாழ்க்கை எவ்வளவு எளிதா இருக்குன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா எப்பவோவாது?

தாரா ப்ராக்கோட ஒரு சொற்பொழிவுல கேட்டது கொஞ்சம் ஆச்சர்யத்தைத் தந்தது. எல்லாருக்குமே மகிழ்ச்சியோட செட் பாயின்ட்னு (உச்ச வரம்புன்னு சொல்லலாமோ?) ஒண்ணு இருக்குன்ன்னு ஆராய்ச்சில கண்டு பிடிச்சிருக்காங்களாம். அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு குறிப்பிட்ட அளவு மகிழ்ச்சியாக இருக்கத்தான் பழகி இருக்காங்களாம். அந்த அளவு தாண்டி ரொம்ப நேரம் அவங்களால இருக்க முடியாதாம். அந்த அளவைக் குறைச்சிக்கற மாதிரி எண்ணங்கள் தன்னாலேயே ஏற்படுமாம். இந்த வரம்புக்கு 60% மரபணு ரீதியான காரணமிருந்தாலும் மீதி 40% நம்ம பழக்கத்திலிருந்துதான் வருதுன்னு ஒரு ஆய்வு சொல்லுது. தியானமும் மற்ற சுகமளுக்கும் உத்திகளும் இந்த வரம்பை அதிகரிக்க உதவும். நான் அடிக்கடி சொல்ற ‘கொடைகளை எண்றது’ இதுல முக்கியமான உத்தி. உங்களை நீங்க கேட்க வேன்டிய கேள்வி: உங்களுடைய மகிழ்ச்சியின் வரம்பு உங்களுக்குப் போதுமானதா இருக்கா?

பழக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது… செல்லப் பிராணிகள் மாதிரி மனிதர்களும் பிறந்ததிலர்ந்து பழக்கப் படறாங்கன்னும் அதனாலதன் தங்களுடைய உண்மையான சாரத்தை இழந்திடறாங்கன்னும் சொல்ற இந்த வித்தியாசமான சொற்பொழிவை இங்கே பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு…. 20 நிமிஷமான்னு மலைக்காம கேளுங்க… வொர்த் இட்:

http://www.youtube.com/watch?v=GIjy4vfvEWo&feature=fvst

தாரா ப்ராக்கோட இன்னொரு சொற்பொழிவு கேட்டுட்டிருந்தப்போ அவங்க கேட்ட ஒரு கேள்வி முகத்தில அறைஞ்ச மாதிரி இருந்தது. "அந்த இன்னொருவரா வாழ்றது எப்படி இருக்கும்?" அதாவது நமக்குப் பிடிக்காத ஒரு மனிதரா வாழ்றது எப்படி இருக்கும்னு எப்போவாவது நம்மைக் கேட்டுப் பார்த்திருக்கோமா?

எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணிக்கு சுத்தம் அதீத முக்கியம். எப்பவும் கையைக் கழுவிட்டே இருப்பாங்க; வீட்டைத் துடைச்சிட்டே இருப்பாங்க; வெளில போனா உடனே வந்து உடைகளைத் துவைச்சுக் குளிச்சிருவாங்க. அது மட்டுமில்லாம, வீட்டில எதெது எங்கெங்கே இருக்கணும்னு கண்டிப்பான நிபந்தனைகள் கூட உண்டு. அவங்களைப் பார்த்து கேலி செய்யறவங்களும் குறை சொல்றவங்களும் நிறையப் பேர். ஒரு நாளாவது அவங்கள்ல யாராவது அந்தப் பெண்மணியா வாழ்றது எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பாங்களா? அந்தப் பெண்மணிக்கு வாழ்க்கை எவ்வளவு சங்கடமா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தா அவங்க மேலே பரிதாபம்தானே வரும்?

பை தி வே, இந்த கண்டிஷனுக்குப் பேர் ஓ.சி.டி (Obsessive Compulsive Disorder). உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாருக்காவது இது இருந்தா கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்கப்பா… பாவமில்லையா? இது ஒரு உதாரணம்தான். இந்தக் கேள்வியை நாம எல்லோருக்குமே கேட்கலாம். குறிப்பா இது மன்னிக்கற மனப்பான்மையை வளர்க்கும். விஷத்தைக் குடிச்சிட்டு எதிரி சாவான்னு காத்திருக்கற மாதிரிதான் வஞ்சத்தையும் வைராக்கியத்தையும் மனசில வச்சிருக்கறது. ஏம்பா இதையெல்லாம் சுமந்து கஷ்டப்படணும்? சமத்தா… நீங்க வெறுக்கற ஒரு ஆளை நினைச்சுக்கிட்டு ‘அவரா இருக்கறது எப்படி இருக்கும்?’னு உருவகப்படுத்தித்தான் பாருங்களேன்… பாரம் இறங்குமில்லையா… செஞ்சு பார்த்து உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கங்க… (ஆமா, எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கீங்களே… படிக்கறதுல ஒருத்தராவது முயற்சி செய்யறீங்களா?)

என்னோட சுகவர் சான்றிதழ்களை எல்லாம் எடுத்து வெளில வச்சிருக்கேன். ஃப்ரேம் போட்டு மாட்டி தினமும் பார்த்திட்டிருந்தா சீக்கிரம் முழு நேர சுகவராயிடுவேன்னு நினைக்கிறேன்… நிசமே… இதுவும் ஒரு உத்தி.

பிரபஞ்சத்தில நாம விரும்பற எல்லாமே எப்பவுமே இருக்கு. அதை நாம அடைய முடியாததற்குக் காரணம் நம்மோட அதிர்வு சரியா இல்லாததுதான். எப்போ நாம விரும்பறது நம்ம கிட்ட இருக்குன்னு உணர்றோமோ, அப்போ அது நம்மகிட்டே வந்துடும். இந்த அதிர்வை பல வழிகள்ல உருவாக்கலாம். சம்பந்தப்பட்ட படங்களை சேகரிக்கறது எனக்கு நல்லா வேலை செஞ்சிருக்கு. முதல்ல இதைக் கேள்விப்பட்டப்போ சோதனை செய்து பார்க்கறதுக்காக சலங்கை படங்களை சேகரிச்சேன். வெளில எங்கே போனாலும் சலங்கையைப் பார்க்க நேர்ந்தது. அப்பறம் சலங்கை பரிசுகளா வந்தது. அசந்திட்டேன். அதுக்கப்பறம் அதைப் போல நிறைய நடந்திருக்கு. நீங்களும் முயற்சி செய்து பாருங்க. இருக்கவே இருக்கார் கூகிளாண்டவர். அவர்கிட்டே கேட்டா படங்களா கொண்டு வந்து குவிச்சிடுவாரே!

ஏழாம் அறிவு பார்த்து நொந்து போயிட்டேன்பா… ரொம்ப ரொம்ப சொதப்பலா எனக்குத் தெரிஞ்சது. ஒரு காட்சிகூட சுவாரஸ்யமா இல்லை… (அரவிந்த்) சூர்யா ஏமாற்றிட்டார் – நடிப்பு படுசெயற்கையா இருந்தது. படத்தில பாஸிடிவா சொல்லணும்னா ஷ்ருதியோட நடிப்பு மட்டும்தான். அவங்ககிட்டே இயற்கையான திறமை இருக்கறது வியப்பில்லைதான்! இந்தப் படம் பார்த்து வெறுத்துப் போய் ஒரு சுமாரான படமாவது பார்க்கணும்னு ஆசைப்பட்டு ‘தகிட தகிட’ (தெலுங்கு) பார்த்தேன். நாட் பேட் அட் ஆல். புதுமையா எதுவும் இல்லைன்னாலும் போரடிக்கலை. இதன் இயக்குனர் தமிழர்னும் இது தமிழ்லயும் வரப் போகுதுன்னும் கேள்விப்பட்டேன்.

‘பிரபஞ்சத்தைப் பற்றி எல்லாத்தையும் சொல்லுங்க… எப்படி பிரபஞ்சத்து கூட தொடர்பு கொள்றதுன்னு படிப்படியா விளக்குங்கன்னு’ ஒரு வாசகர் ஃபேஸ் புக்ல கேட்டிருந்தார். நான் முன்னாலேயே சொன்னது போல பிரபஞ்சம்கறது எல்லாமேதான்… இருக்கறது, இல்லாதது, தெரிஞ்சது தெரியாதது, நீங்க, நான், சரி, தவறு… எல்லாத்தையுமே உள்ளடக்கினதுதான் பிரபஞ்சம்.

நாமே பிரபஞ்சத்தோட ஒரு அங்கம்தான்னா ஏன் பிரபஞ்சதைத் தொடர்பு கொள்ள விசேஷமா ஒரு வழி தேடணும், சொல்லுங்க? பிரச்சினை என்னன்னா… நாம எல்லாருமே ஒருமையில ஒரு துளிங்கறதை உணரமுடியாதபடி நம்மோட மனம் ஒரு மாயையை உருவாக்கிடுது. அதனால அந்த மனதை அமைதிப்படுத்திட்டாலே பிரபஞ்சத்தை உணரமுடியும். எப்படி மனதை அமைதிப்படுத்தறதுங்கறதுக்கு தியானம் உட்பட பல வழிகள் இருக்கு. உங்களுக்கு எது சரியா வரும்னு உங்களாலதான் தீர்மானிக்க முடியும். தியானத்தில ஆரம்பிக்கலாம்கறது என்னோட பரிந்துரை…

வேற கேள்விகள் ஏதாவது இருந்தா கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு கொள்ளலாம்:

எல்எல்ஜே.நிலா@ஜிமெயில்.காம்

http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663

http://groups.google.com/group/neyam

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் உங்களை நல்லா பார்த்துப்பீங்கதானே?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author