மடை திறந்து… (9)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே எல்லாம் அமோகமா இருக்கு!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நம்ம நண்பர் குழாமோட ரொம்ப ரொம்ப அனுபவிச்சுப் பார்த்தோம். ஜெயிச்சதும் ராஜு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டார்னா பாத்துக்கோங்களேன். கத்து கத்துன்னு கத்தி பக்கத்து வீடுகளையெல்லாம் அதிரவச்சிட்டோம்ல (படத்தில பாருங்க).


ஆட்டம் ஆரம்பிச்சு ஒரு பத்து பதினெஞ்சு ஓவர்ல இலங்கை எவ்வளவு அடிப்பாங்கன்னு பெட் கட்டினோம். நானும் ஜானியும் 270ன்னு predict பண்ணி பெட் ஜெயிச்சோம். அதை வச்சு எல்லா நண்பர்கள் சார்பாவும் லாட்டரி வாங்கிருக்கோம். பில்லியனர் ஆகறதுன்னு முடிவோட இருக்கோம்ல .

ஆனா கிரிக்கெட் காய்ச்சல் இந்தியர்கள்கிட்டே அளவுக்கதிகமா இருந்ததோன்னு எனக்குத் தோணுச்சு. ஜெயிச்சதுனால தப்பிச்சோம். இல்லைன்னா எத்தனை பேர் தீக்குளிச்சிருப்பாங்களோன்னு நினைக்கவே பயமா இருக்கு. தவிர, ‘கோப்பையை ஜெயிக்கறோமோ இல்லையோ, பாகிஸ்தானைத் தோற்கடிக்கணும்’ங்கற வெறியை பரவலா பாக்க முடிஞ்சது. ஒரு விளையாட்டை போர் மாதிரி பார்க்கணுமாங்கற கேள்வி வந்தது. என்னவோ போங்க… மொத்தத்துல, Very deserving victory for Indian team & the whole nation.

போன வாரம் நாம விளையாண்ட கேள்வி பதில் விளையாட்டு நல்லா இருந்துதுல்ல? விளையாட்டை சுவாரஸ்யமாக்கினதோட இல்லாம அருமையான கொடைகளை எழுதிய மினிக்கும் கீதாவுக்கும் திரும்பவும் நன்றி. Proud of you both…

கீதாவோட தேன்சிட்டும் மினியோட கடலைமிட்டாயும் எனக்குப் பிடிச்ச கொடைகள். கீதா ஏற்கெனவே ஒரு பரிசு ஜெயிச்சதுனால மினிக்கு மின்னூல் பரிசு அனுப்பறேன்.

மினி detatched attachment பற்றி கேட்டிருந்தாங்க. அதைப் பற்றிப் பேசறதுக்கு முன்னால அதையொட்டி இன்னும் சில விஷயங்கள்… சின்ன வயசுல கடவுளை நான் நம்பினது பயத்துனால. எனக்குள்ள அப்பவே நிறைய கேள்விகள் இருந்தாலும் கேட்க பயம். பின்னால கேள்விகள் பெருகி இனியும் என்னால பாசாங்கு செய்ய முடியாதுங்கற நிலைமைக்கு வந்தப்பறம் கடவுள் நம்பிக்கை கொஞ்ச நாள் இல்லாம இருந்தது. பின்ன பற்பல போதனைகளைப் படிக்க ஆரம்பிச்சதும் கடவுள்ங்கறது ஒரு ஆள் இல்லை ஒரு நிலைங்கற எண்ணம் வந்திருச்சு. இந்த நிலையை அடையறதுக்கு பற்பல வழிகளைப் பலர் காட்டிருக்காங்க. சில போதனைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கற மாதிரி கூட தோணுது. எனக்கே ஒரு சமயம் சரியாத் தோணற தர்க்கம் மற்ற சமயம் ஒப்ப மாட்டேங்குது. அதே போதனை வேறொரு சமயம் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும். முன்னால எனக்கு இது ரொம்ப வினோதமா தோணும். சில சமயம் ‘சே, என்ன இது புரிபடவே மாட்டேங்குதே’ங்கற ஆயாசம் கூட வந்திருக்கு. ஆனா க்ரையான் சொன்ன ஒரு கதைல தெளிவு வந்திருச்சு. இது பற்றி ‘அமுதென்றும் நஞ்சென்றும்’ல எழுதிருந்தேன் இருந்தாலும் இன்னொரு தடவை சொல்றேன்.

ஒரு மிகப்பெரிய ஓவியம் இருந்ததாம். அதைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு ரெண்டு எறும்புகள் ஆசைப்பட்டு ஒண்ணு ஓவியத்தின் மேல் பக்கத்திலருந்தும் இன்னொண்ணு கீழ்ப்பக்கமிருந்தும் கிளம்பிச்சாம். மேலேருந்து வந்த எறும்பு ரொம்ப தூரம் பயணம் செஞ்சும் கண்ணுக்குத் தெரிஞ்சது மஞ்சள் வண்ணம்தான். அதனால அது ஓவியம் மஞ்சள் வண்ணமுடையதுன்னு நெனச்சுட்டுத் திரும்பிடுச்சாம். அடுத்த எறும்புக்கு ஓவியம் சிகப்பு வண்ணமாத் தெரிஞ்சதாம். ரெண்டுக்குமே ஓவியத்தோட முழுமை தெரியலை. திரும்பி வந்த ரெண்டு எறும்புமே தான் நினைச்சதுதான் சரின்னு நிச்சயமா சொல்லிச்சாம். ஆனா ரெண்டுமே முழுமையான ஓவியத்தின் சின்ன துண்டுகள்தான் அப்படிங்கறதை ரெண்டு எறும்புகளுமே உணரலை. இந்த எறும்புகளைப் போலத்தான் நாமும்னு நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

இதையொட்டி இன்னொரு சம்பவமும் படிச்சேன். அமெரிக்கப் பழங்குடியினரைப் பற்றி விவரணப்படம் எடுக்கப் போயிருந்த குழுவில ஒருத்தருக்கு பயங்கர இருமல் இருந்ததாம். அவங்க காட்டு வழியா நடந்து போயிட்டிருந்தப்ப அந்தப்பழங்குடியினர் ஒருத்தர் ஒரு மரத்தோட இலையைப் பறிச்சு இருமல் இருந்தவர்கிட்டே கொடுத்து சாப்பிடச் சொன்னாராம். கொஞ்ச நேரத்துல அவருக்கு சரியாயிடுச்சாம். படக்குழுவினர் அந்த மரத்து இலை மருத்துவ குணம் உடையாதான்னு பழங்குடியினரைக் கேட்டாங்களாம். அதுக்கு அவங்க சொன்னாங்களாம் ‘அந்தக் குறிப்பிட்ட நேரத்தில அந்த மரத்தோட இலை அந்தக் குறிப்பிட்ட மனிதருக்கு குணமளிக்க ஏதுவானது’ன்னு.

இதைப் படிச்சப்பறம் எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு வந்திருச்சு. இந்தப் பிரபஞ்சத்தோட எல்லையை இன்னும் அளக்க முடியலைன்னு அறிவியலாளர்கள் சொல்றாங்க. இந்த பூமியிலேயே புரிஞ்சுக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்க, எல்லையில்லா இந்தப் பிரபஞ்ச விதிகளை எப்படி நம்மால புரிஞ்சிக்க முடியும்? அதுனால எப்போ எது நமக்கு சரியாத் தெரியுதோ அது அப்போ சரின்னு எடுத்துக்கறேன். அதே மற்றவங்களுக்கும் சரியா இருக்கணும்னோ, அது எப்பவும் நமக்கு சரியா இருக்கணும்னோ அவசியமில்லைன்னு இப்போதைக்கு எனக்குத் தோணுது. இதுவே நாளைக்கு மாறலாம். இருப்பினும் எல்லாம் நலமே!

இதை ஏன் சொல்ல வந்தேன்னா புத்த மதத்தின் பற்றின்மை தத்துவத்தில எனக்கு மிகுந்த ஈர்ப்புண்டு. அதே சமயம் ‘இந்த உலகத்துக்கு நாம வந்திருக்கறதே ஆனந்தமா இருக்கத்தான். அதனால எல்லாத்துக்கும் ஆசைப்படு’ன்னு சொல்ற புதுயுகத் தத்துவங்களும் ரொம்பப் பிடிச்சிருக்கு. பார்த்தீங்கன்னா ரெண்டுமே absolute opposite போலத்தான் தெரியுது. ஆனா புத்தமதம் துன்பத்தைத் தவிர்க்க பற்றின்மையைப் பரிந்துரை செய்யுதுன்னா துன்பமற்ற நிலை ஆனந்தம்தானில்லையா?
அதே போல விரும்புறதை அடைய பரிந்துரை செய்யப்படற கவர்ச்சி விதி கூட என்ன சொல்லுதுன்னா ஆசைப்படறதை அடைய பற்றின்மை வேணும்னு. அதாவது ஆசைப்படறதை முழுமையா படணும்; அது கிடைச்சிட்டது போல முழுமையா உணரணும்; அதுக்கப்பறம் அதை மறந்துடணும். அப்போதான் அது கிடைக்கும். அதில்லாம ‘நான் ஆசைப்பட்டது கிடைக்குமா? எப்போ கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்?’ன்னு குழம்பிக்கிட்டிருந்தோம்னா அது கிடைக்காது. அதாவது பற்றற்ற ஈடுபாடு வேணும்.

இதுக்கொரு நல்ல உவமை இருக்கு. ஒரு வண்ணத்துப் பூச்சியை நாம வச்சுக்கணும்னு ஆசைப்பட்டோம்னு வச்சுக்கங்களேன் – அதை உள்ளங்கைக்குள்ள மென்மையா பொத்தி வச்சிருக்கணும். அதை அழுத்திப் பிடிச்சோம்னா செத்துப் போயிடும். சரியா கையை மூடலைன்னா பறந்து போயிடும். அதுதான் detached attachment. இப்படித்தான் நான் இப்போ நிலாச்சாரலை வச்சிருக்கேன்.

போன வாரம் மூணு நண்பர்கள் எங்கிட்ட கோவிச்சுக்கிட்டாங்க ஒரு கேள்வி கேட்டதுனால. அந்தக் கேள்வி – ‘ஏன் இப்படி நடந்திச்சு?’ மூணு பேருமே அவங்க மேல தப்பிருக்குன்னு நான் சொல்றதா அதைக் கற்பிதம் பண்ணிட்டு ரொம்ப அப்செட் ஆகி எங்கிட்டே கோபப்பட்டாங்க. (இது பலசமயம் நாம எல்லாருமே செய்யறதுதான்) ஆனா எனக்கு பதிலுக்கு கோபம் வரலை. அவங்ககிட்டே நான் அமைதியா ‘நான் கேட்ட அந்தச் சின்னக் கேள்விக்கு எந்த உள்ளர்த்தமுமில்லை’ன்னு மட்டும் சொன்னேன். எல்லாரும் சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. அந்த உடனடி மாற்றத்துக்குக் காரணம் என்னோட வார்த்தைகள் இல்லை. என்னோட சாந்தம்னு டோலே சொல்றார். ஒரு வார்த்தை எவ்வளவு விழிப்புணர்வோட (அல்லது பிரக்ஞையோட) வருதோ அதைப் பொறுத்துத்தான் அதனோட பலன் இருக்கும்கறார் அவர். டோனியோட சாந்தம் இந்திய அணியோட முக்கியமான பலம்னு சொல்றது இதனாலதான்.

சாந்தம் அல்லது அமைதிங்கறது மௌனமா இருக்கறதில்லை. ராஜு சொல்வார் நான் என்ன நினைக்கிறேங்கறதைச் சொல்லவே தேவையில்லைன்னு. ஒரு வார்த்தை கூட இல்லாமல் என்னோட எண்ணங்கள் என்னோட உடல் மொழியிலயும் முக பாவத்திலேயும் அப்படியே பிரதிபலிச்சிரும்னு. அதனால நான் கோபமா இருந்தேன்னா நான் ஒரு வார்த்தை சொல்லலைன்னா கூட கூட இருக்கறவங்க ரொம்ப அசௌகரியமா உணர்வாங்க. எனக்கு முன்னெல்லாம் ரொம்ப கோபம் வரும். இப்போ ரொம்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு. ஆனாலும் போகவேண்டிய தூரம் அதிகம். எதுக்கு இதைச் சொல்ல வந்தேன்னா, மௌனமும் சாந்தமும் வேற வேறன்னு சுட்டிக்காட்டத்தான். இந்த அமைதி மனதோட சத்தம் குறையும் போது கிட்டும். எப்படி இந்த சத்தத்தைக் குறைக்கறது? தியானம் உட்பட ஏகப்பட்ட வழிமுறைகளிருக்கு. So-hamங்கற மந்திரத்தை உச்சரிச்சு செய்யற மூச்சுப் பயிற்சி இதில ஒரு முறை. விபரங்கள் இந்த சுட்டில இருக்கு:

http://www.swamij.com/soham-mantra.htm

சமீபத்தில ஒரு நண்பர், சில உறவினர்கள் தன்னைப் பற்றிச் சொன்ன கருத்துக்கள் பற்றி ரொம்ப வருத்தப்பட்டார். எனக்கும் அவருக்குமிடையே நடந்த உரையாடல்:

நான்: ஏன் அவங்க கருத்து உங்களைப் பாதிக்குதுன்னு நினைக்கறீங்க?
அவர்: அவங்க சொல்றது தப்பு. அதனால வருத்தமா இருக்கு
நான்: யாராவது பால் கருப்புன்னு சொன்னா வருத்தப்படுவீங்களா?
அவர்: இல்லை
நான்: ஏன்?
அவர்: அது வெள்ளைன்னு எனக்குத் தெரியும்
நான்: அப்போ உங்களுக்கு உங்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சுதுன்னா மற்றவங்களோட கருத்து ஒரு வேளை உங்களை பாதிக்காதோ?

இப்படியெல்லாம் நான் ரொம்ப "அறிவோட" கேள்வி கேக்கறதுனால இதையெல்லாம் நான் ஃபாலோ பண்ணி சாந்த சொரூபிணியா இருப்பேன்னு மட்டும் நினைச்சிறாதீங்க . இப்பத்தான் பூனை நடை நடந்து அந்த இடத்துக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன்.

பாருங்க, இந்தக் குட்டிப் பொண்ணு எப்படி தன்னோட கொடைகளை வெளிப்படுத்துதுன்னு:
http://www.youtube.com/watch?v=qR3rK0kZFkg

என்னோட இந்த வாரக் கொடைகள்:
1) ஒரு வரலாற்று நிகழ்வை நண்பர்களோட அனுபவிச்சுப் பார்த்தது
2) போன வாரம் நாம விளையாண்ட Personality Game
3) திங்கட்கிழமை விடுமுறை எடுத்து ஓய்வெடுத்தது
4) ஒரு தோழிக்கு சுகமளிக்கும் உத்தியைக் கத்துக் கொடுத்து அவங்களோட வலியைக் குறைச்சது
5) புதுச்சட்டை போட்டது (புது டிரெஸ் போடறதுன்னா குழந்தை போல அவ்வளவு குஷி எனக்கு)
6) குட்டி குட்டி ஆட்டுக்குட்டிகள் நிறைய பார்த்தது (என்னவொரு அப்பாவித்தனம் அதுங்க முகத்தில… எப்படிங்க அது? Cho chweet)

பாத்தீங்களா, அஞ்சுதான் எழுதணும்னு ஆரம்பிச்சேன்… ஆனா அடக்க முடியாம பாயுதே… நீங்களும் எழுந்துங்க… படிக்கற யாராவது ஒருத்தருக்காவது ஒரு நொடியாவது இதனால நல்ல அதிர்வு ஏற்பட்டதுன்னா நாம இந்த உலகத்துக்கே நல்லது செய்யறோம்.

சரிப்பா… நேரமாச்சு…

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் சமத்தா இருங்க…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

5 Comments

  1. radha

    அன்பு நிலா,
    உங்கள் கட்டுரைகள் மனதுக்கு மிகவும் வலிமையும் சந்தியும் தருகிறது.
    சுகமளித்தல் என்றால் என்ன அதை எல்லோரும் கற்றுக்கொள்ள முடியுமா
    அதை நிலாச்சாரல் ஊடாக எமக்கு கற்றுத்தருவீர்களா
    அன்புடன் வாசகி
    ராதா

  2. கீதா

    இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றதற்கு என் வாழ்த்துகள். இந்தியாவின் நெடுநாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியே நம் எல்லோருக்கும் சென்றவாரக் கொடையாக அமைந்துவிட்டது.

    நிலா நீங்க சொன்ன அந்த detached attachment தத்துவம் எனக்குப் பிடிச்சிருக்கு. தாமரை இலைத் தண்ணீர்னு சொல்வாங்களே… அதுபோலொரு வாழ்க்கை.

    அப்புறம்…மினிக்கு என் வாழ்த்துகள்.

  3. Suresh

    nila,
    ur writings bring back to me to the real world(everyone in different world now.. isn’t it).. It is good read all the time.. thanks to u.

    Suresh
    Brisbane (Australia)

  4. கலையரசி

    கீதா சொன்னது போல் இந்தியாவின் வெற்றி நம் எல்லோருக்குமே சென்ற வாரக் கொடையாக அமைந்து விட்டது.
    மூன்றரை வருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த என் தம்பி குடும்பத்தைச் சந்தித்தது என் இன்னொரு கொடை.

    அன்புடன்
    கலையரசி

  5. Suhanya

    Hi Nilla
    Intha Vara kodai
    1.Ckt parthathu
    2.I am in some otherthought,my daughter asked ennachu,u wnt a hug
    and huged me with a good kiss(unexpected)
    3.Lindit with orange peel ennoda fav too,neengha sonnathum nabagam
    vanthathu,vangavum mudinththu,sapittu enjoy panninen.Inthakodai ku en nanregal to u too.
    4.Enn husband dinner panni ready ya vachu irunthathu( nan nalla pasi)
    5.Nalla oru thzhi pakathil utkarthu pasuvathu pola ulla madaithiranthu va padichadu.( nan athigama pasa maten but i enjoy my friends talking very much.aathuvm tamil pachu)
    Kodaiya count pannurathu nalla iruku nilla thanks a lot

Comments are closed.