மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒரு மனிதன் (2)

‘"போலீஸ் வேலையின்னா இவங்களுக்கு என்னமோ பெரிய ராஜ உத்யோகம் மாதிரி நினைப்பு. அவனவன் படுற பாடு அவனுக்குத்தான் தெரியும், ஆயிலா காய் சாங்காச்சா" என்று பெரிதாய்ப் புன்னகைத்துக் கொண்டார். உதட்டிற்கு அடியில் அடக்கிய புகையிலையின் காரணமாக தலை லேசாக கிறுகிறுவென்றிருந்தது. வாயில் எச்சில் ஊறிக் கொண்டே இருந்தது. ஜனார்தன் சத்தமாக வாயு கழித்தார்.

"ஆயிகா, இந்த வைசாலிகிட்ட என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா. உருளைக் கிழங்கும் பருப்புமா திண்ணு திண்ணு உடம்பெல்லாம் வாயு. குனிஞ்சா நிமிர்ந்தா படீர் படார்ங்குது, குண்டியே கிழிஞ்சாப்ல பாவம் அவளும் என்ன பண்ணுவா? வேற காய்கறி வாங்க வக்கிருக்கா’" வாயில் நிறைந்த எச்சிலைத் துப்பினார். நூலாய்த் தொங்கிய துளி எச்சில் வாய்க்குத் திரும்பியது. வலது கையால் துடைத்துக் கொண்டார்.

தன் மகன் ராஜேஷ், படிப்பை முடித்து விட்டு, அப்பாவுக்கு ஒத்தாசையாக இருப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவனோ பதிமூன்று வயதில் காதல், இருபத்திமூன்று வயதில் கல்யாணம் என்று செட்டில் ஆகி விட்டான். இன்னும் இரண்டு வருஷம் பொறுத்திருக்கலாம் என்று ஜனார்தன் நினைத்துக் கொள்வார்.

"தேவா…! கால் இப்படிக் குடையுதே! வயசு ஐம்பத்திநாலு ஆச்சு. இன்னும் கொஞ்சம் வருஷம்தான். ரிடையர் ஆயிடுவேன். அதுக்குள்ள இந்த ரெண்டு பொட்டப் பிள்ளைகளுக்கும் லக்னா பண்ணிட்டா. நிம்மதியா இருக்கும். ஹே! கண்டோபா! தேவா ரே..!"என்று ரைபிளை ஒரு கையால் தரையில் குத்தி நிப்பாட்டிய நிலையில் மறுகையைத் தூக்கி வானத்தைப் பார்த்து வணங்கிக் கண்களை மூடித் திறந்தார்.

நான் இந்த போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு வரல. எங்கப்பா பிடிவாதமா என்னை இந்த வேலையில சேர்த்து விட்டுட்டார். அவரும் போலீஸ் கான்ஸ்டபிள்தான், இதுல என்னாத்தைக் கண்டாரோ …ஓளி என்னிய மாட்டி விட்டுட்டாரு. ம்… அவருக்குத் தெரிஞ்ச சிபாரிசு பிடிச்சிருப்பாரு. ஒரு மணல் மூட்டையில் இருந்த துவாரத்தில் விரலை விட்டு மணலை விழச் செய்தார்.

முன்னெல்லாம் ஊருல ஒரு சின்ன பிரச்சனைன்னா கூப்பிடுறா அந்த போலீஸ்காரனைன்னு இருக்கும். பெரிசா எதாவது கேஸ்ன்னா மட்டும்தான் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போவாங்க. இல்லன்னா, என்ன மாதிரி கான்ஸ்டபிள்ங்கதான் வக்கில், நீதிபதி எல்லாம். காக்கிசட்டைன்னா போதும் செத்த எலி தேடுற கழுகுங்க கூட கலவரப்பட்டுப் போயிடும். ஆனா இப்ப நாங்களெல்லாம் நாயிங்கறாங்க, பிச்சைக்காரங்கறாங்க. இந்த காக்கிச் சட்டைக்கு காலணா மதிப்பு இல்லை. இப்ப காலணாக் காசே புழக்கத்துல இல்லங்கறது வேற விஷயம். கத்திச் சொல்லிட்டமோ? மீண்டும் அக்கம்பக்கம் பார்த்து கொஞ்சம் சத்தம் எழுப்பியே சிரித்துக் கொண்டார்.

கீழே குனிந்து கொஞ்சம் நேரம் நின்றார். இடுப்பை அப்படியிப்படி வளைத்து ஆட்டிக் கொண்டார். முன்பக்கமாக குனிந்து நிமிர்ந்தார். துப்பாக்கியை மணல் மூட்டைகளின் மீது சாய்த்து வைத்து விட்டு மணல் மூட்டையின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு இடுப்பை வளைத்து தலையை மேல்பக்கமாகத் தூக்கினார். பின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நின்றார். எதிரே கேஷவ் மாமா வருவதைக் கண்டவுடன் அவரை சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

"மாமா… ஹே கேஷவ் மாமா… அரே இக்கடே பஹா.." கூப்பிட்டபடியே உதட்டிற்கடியில் அடக்கிய புகையிலை உருண்டையைத் துப்பினார். பின்னர் இரண்டு மூன்று முறை தொண்டைக்குள் பிரளயம் ஏற்படுத்தி எச்சில் துப்பினார்.
"காய் ரே? காய் ஹாக்மார்லாஸ்? கொஞ்சம் அவசர வேலை, லவ்கர் சாங்" கேஷ்வ சொல்லிக் கோண்டே வேகமாக வந்தார்.

"காய் மாமா..! ஜரா தாம்பனா. இத்கியா கசாலா காய்?" என்றார் ஜனார்தன்.

"மகளும் மருமகனும் வீட்டுக்கு வந்திருக்காங்க. அதான் பஜார் போயிட்டுருக்கேன். உனக்கு எத்தனை நாள் டியூட்டி? எப்ப பார்த்தாலும் நீதான் நின்ன மாதிரி இருக்கு?"

"மாமா.. பாரா தாஸ் டியூட்டி. ஸ்டேஷன் டியூட்டின்னா எட்டு மணி நேரம் போதும். இது ஸ்பெஷல் டியூட்டில்லா அதான், முழுசா பன்னெண்டு மணிநேரம்."

"அட பனிரெண்டு மணி நேரம் ஒரே இடத்துல எப்படிப்பா நிக்குறது? மனுசன் ஒண்ணுக்கு தண்ணிக்கு எப்டிப் போறது? இது என்ன வேலையோ! சரி! வைசாலி எப்படி இருக்கா? மீனாவுக்கு எதாவது வரன் பாத்தியா? உன் மகன் எதாவது காசு பணம் கொடுக்கிறானா?" கேள்விகளை அடுக்கினார். மேலும் அடிக்கடி தான் போய்க் கொண்டிருந்த திசையையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்று கேள்விகள் கேட்கப் பட்ட வேகத்தில் பதிலை எதிர்பார்த்தார் அல்லது பதிலே வேண்டாம் என்றும் நினைத்துக் கொண்டார்.

ஆனால் ஜனார்தனின் நிலை வேறு. பொழுது போகாமல் வருவோர் போவோரையெல்லாம் கூப்பிட்டு வைத்து பேச வேண்டும் போல் இருந்தது. மேலும் தனியாக பேசிக் கொள்வது குறித்து பயமும் உண்டாகி விட்டது.

"என்ன மாமா, இவ்வளவு வேகமா கேட்டா எப்படி? கொஞ்சம் பொறுமையா கேளுங்க"

"இல்லப்பா, நேரம் ஆயிட்டு. காலையில போஹா பண்ணி சாப்பிட்டோம். இப்ப சீக்கிறம் எதாவது வாங்கிட்டுப் போனா மதியச் சாப்பாடு, நேரத்துல ஆகுமில்லையா. நான் வேணா அப்புறம் வாரேனே?" என்று புறப்பட்டார்.

ஜனார்தன் அவரை நிறுத்தி "அரே மாமா, தாம்பானா! என்ன அவசரம். மீனாவுக்கு எதாவது பையன் இருந்தா சொல்லுங்க. எனக்கு எங்கயும் போக முடியல. இந்த தீவிரவாதிங்க தாக்குதலுக்குப் பின்னால வேலை கொஞ்சம் ஸ்டிரிக்ட் ஆயிட்டு. எனக்கு எதாவது ரயில்வே ஸ்டேஷன்ல டியூட்டி கொடுங்கன்னு காம்ரே சாப் கிட்ட கேட்டுப் பார்த்தேன். மனுஷன் கருணை காட்டல. முட்டி வேற வலி தாங்கல. எட்டு டூ எட்டு இப்படி நின்னு காலெல்லாம் மரத்துப் போகுது. ரத்தம் கட்டி ராத்திரியில வீங்கிடுது. ஏற்கெனவே ஹைட்ரசல் வேற உள்ள தேன்கூடு கட்டினாப்ல… இந்த ரெண்டு புள்ளைகளையும் கரை சேத்துட்டேன்னா நிம்மதியா இருக்கும்" என்று ஜனார்தன் பொழுது போகவேண்டி இல்லாமல் முக்கியமான விஷயமாகச் சொன்னான். கேஷவ் மாமாவும் அவனது இந்தப் பேச்சை தவிர்க்க முடியாமல் நின்று பதில் சொன்னார்.

"அட நீ என்னப்பா, தின பஜனை பாடுற மாதிரி இதேப் பாட்டப் பாடிக்கிட்டிருக்க. எல்லாம் சரியாயிடும். காலுக்கு நம்ம அப்துல் சாச்சா கிட்ட போ. மனுஷன் ஏதோ எண்ணெய் வச்சிருக்கான் ஒரு வாரம் போட்டுப் பாரு. கால் வலி சரியாயிடும். அவரு காசும் அதிகம் வாங்க மாட்டாரு. ரொம்ப நல்ல மனுஷன். இன்னைக்கு ராத்திரி டூட்டி முடிஞ்சது பார்த்துட்டுப் போ. இல்ல எதிர்ல ஒட்டிருக்கான் பாரு போஸ்டர்"

சுவரில் ‘விரைவீக்கம், மூலம், ஆண்மைக்குறைவு, சொப்பனஸ்கலிதம்… நீங்க உத்திரவாதமான சிகிச்சை. பத்தியம் இல்லை’ என ஏதோ நோட்டிஸ்.

"சரி மாமா, நம்ம பொண்ணு வைசாலிக்கு உங்க மருமககிட்ட சொல்லி ஒரு வேலை ஏதும் பார்க்கச் சொல்லுங்க"

"அவதான் எங்கயோ வேலைக்குப் போயிட்டுருக்கால்ல" கேஷவ் மாமா தாடை சொரிந்து நினைவு கூரும் பாவனை செய்தார்.

"ஆமா, நம்ம பையாக்காரன் டாக்டர் திவாரி கிட்டதான் வேலைக்குப் போறா. அவரும் நல்ல மனுஷன். பார்ட் டைமுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறாரு. ஆனா என்ன, இதிலேயே இருந்திட முடியாதுல்ல. அதான்" என்று துப்பாக்கியை கை மாற்றிக் கொண்டார் ஜனார்தன்.

"ஹோ! மீ நிஹதோ! நந்த்தர் பேட்டுயா. வேலையப் பத்தி நான் சொல்றேன். நீ கண்டிப்பா அப்துல் சாச்சாக்கிட்ட போய் கால காட்டு, என்ன" என்று சொல்லிக் கொண்டே கேஷவ் மாமா வேகமாகப் போனார். ஜனார்தன் அமைதியாக நின்றபடி அங்குமிங்கும் பார்த்தார். அவரைக் கடந்து போகும் மனிதர்களைக் கூர்ந்து கவனித்து அவர்கள் நகரும் திசையில் தலையை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டு நின்றார். கடமை என்று செய்யவில்லை. வேறு வழியில்லாமல் இதைச் செய்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

About The Author