மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒரு மனிதன் (3)

கழுத்து கொஞ்சம் வலி கொடுக்கவே. அதனை இடப்பக்கமும் வலப்பக்கமும் திருப்பி உடைத்துக் கொண்டு தலையைக் கீழே குனிந்து பெருமூச்சு விட்டார். பேச யாரும் அருகில் இல்லாததாலும், இதுவரை அங்குமிங்கும் நகர்ந்த மனிதரில் தெரிந்தவர் என்று யாருமில்லாத காரணத்தாலும் மீண்டும் தனக்குத்தானே பேசத் துவங்கினார்.

‘போக்கத்தவனுக்கு போஸ்ட்மேன் வேலை, பொறுப்பத்தவனுக்கு போலீஸ் வேலை’ன்னு சொல்வாங்க. நான் எவ்வளவுதான் பொறுப்பா இருந்தாலும் நடக்குற தப்பைத் தடுக்க முடியாது. இங்க ஒருத்தர் சரியா இருந்து என்ன ஆகப் போகுது. போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குறதா எல்லாரும் சொல்றாங்க. எங்களைப் பார்த்து யாரும் பயப்படுறதும் இல்ல லஞ்சம் கொடுக்கிறதும் இல்லை. சாராயக் கடை பக்கமோ, திருட்டு வீடியோ பக்கமோ இல்ல இந்த சூதாட்ட விடுதி பக்கமோ போனா எப்பவாவது பத்து ரூபா கிடைக்கும். அதுவும் எதாவது சீனியர் சாப் வந்துட்டுப் போயிருந்தார்னா, அவரு பேரைச் சொல்லி எங்கள விரட்டிருவாங்க.

எங்கள மாதிரி கான்ஸ்டபிள்கள் இந்த காய்கறி விக்குற ஆளுங்ககிட்ட எப்பவாவது கொஞ்சம் காய்கறி வாங்கிக்கலாம். அதுவும் ரெகுலரா போக முடியாது. அங்க போய் அதிகாரம் பண்ணி வாங்குறதா நாங்க காட்டிகிறோம் மத்தவங்களும் நினைக்கிறாங்க. ஆனா அவங்க எங்களுக்கு பிச்சை போடுற மாதிரிதான் போடுறாங்க. எங்களுக்கு முன்னால அரே சாப்புன்னு மரியாதையா கைய தூக்குறவங்க. முதுகுக்குப் பின்னால போடா பிச்சக்கார நாயே, உங்கய்யா எப்ப கோமணத்தை அவுத்தானோ, கேடுகாலம்னுதான் எங்க காதுபடவே திட்டுறாங்க. திரும்பி அவங்ககிட்ட போகவே வெட்கமா இருக்கும். ஆனா என்ன பண்ண. பெரிய எடத்துலயிருந்து பெரிய அளவுல பணம் சீனியர் ஆபிசர்களுக்குத்தான் போகும். சிலப்ப எங்ககிட்டியே எண்ணி குடுத்து விட்ருவாங்க. நாங்க பிரிச்சி பாக்க முடியுமா. தொட முடியுமா?

அன்னைக்கு ஒருநாள் ரொம்ப அவசரமா போக ரிக்‌ஷாகாரன கூப்பிட்டேன். என்னை போலீஸ்காரன்னு தெரிஞ்ச அவன் வண்டிய நிப்பாட்டல. ஐய இந்த விடியா மூஞ்சிலயா முழிச்சிட்டம்னு ஃபுல் ஸ்பீடுல எடுத்திட்டான் வண்டிய. நான் கண்டிப்பா காசு கொடுத்துதான் போயிருப்பேன். ஆனா அவனுக்கு அது தெரியாது. எங்களை பத்தி யாருக்கும் பெரிசா நல்ல அபிப்ராயமே இல்லை.

பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றி கொப்பளித்தார். பின் தலையைத் தூக்கி தண்ணீர்
குடித்தார். தலையைக் கீழே இறக்குகையில் எதிரே பக்யா போய்க் கொண்டிருப்பதை கண்டு விட்டார்.

பக்யாவை ஜனார்தன் கூப்பிடவில்லை. அவனைப் பார்த்து விட்டு ஒரு சின்ன புன்னகை மட்டும் செய்து விட்டு தண்ணீர் பாட்டிலைக் கீழே வைத்தார். அவர் குனிந்து நிமிர்வதற்குள் பக்யா ஜனார்தனின் மணல் மூட்டைகளுக்கு அருகில் நெருங்கி விட்டான்.

பக்யா அப்பகுதியில் சுற்றித் திரியும் விடலைப் பையன். மாத்தாடி வேலை செய்கிறான். அவன் திருடன் என்று ஒரு முறை கைது செய்யப் பட்டு லாக்கப்பில் அடைக்கப் பட்டிருந்தான். அதற்குப் பின் அந்தப் பகுதியில் எந்தத் திருட்டு நடந்தாலும் அவனைப் பிடித்துக் கொண்டு அடைத்து விடுவார்கள்.

அந்த வட்டத்தில் அவனைத் தெரியாத போலீஸ்காரர்களே கிடையாது எனலாம். ஜனார்தனிடம் வந்து சேர்ந்தவன் "கியா சாஹேப். டெர்ரிஸ்ட் கோ மார்னே பைட்டே ஹை கியா? நீங்க இப்படி துப்பாக்கி சாச்சி வெச்சிக்கிட்டு கொட்டாவி விட்டுக்கிட்டு வெளியில தெரியற மாதிரி நின்னா அவன் உங்களை சுட்டுற மாட்டானா? ஹெல்மெட் மாட்டிக்கோங்க சாஹேப்" என்று ஜோராகச் சிரித்தான்.

"அஹ துஜா ஆயிலா! ரைபல் லொட் கருண் டேவ்லா ஆஹே. சூட்டிங்சா ஆர்டர் பன் ஆஹே மாஜாக்கடே. லே டிரிகர் கீஞ்ச்சலா நா. குத்ரா மருன் படேல்" என்று ஜனார்தன் கண்களை உருட்டினார். பக்யா வந்தது அவருக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. பக்யா எப்பொழுதும் இப்படித்தான் பேசுவான். ஜனார்தன் மட்டுமல்ல மற்ற போலீஸ்காரர்களும் அவனிடம் கோபிக்காமல் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

"அரே, சாஹேப், குஸ்சா காயகோ ஹோத்தா ஹை. நான் சும்மா தமாஷ் பண்ணுறேன். இந்த ரைபிள்ல நீங்க சுட்டு நான் சாகுறதா? முப்பது மீட்டர தாண்டி ஓடிட்டா உங்க ரைபிள் ரவையை கேட்ச் பிடிச்சுடுவேன். நீங்க அடுத்த புல்லட்ட டப்பாவுலயிருந்து எடுத்து லோட் பண்ணுறதுக்குள்ள நான் காயப் ஆயிடுவேன்" என்று மீண்டும் ஹாஹாவென சிரித்தான்.

"டேய்! டப்போரி. என்ன மஸ்தி ஜாஸ்தி ஆயிடுச்சு உனக்கு. உள்ள தூக்கிட்டுப் போய் சர்பி எல்லாம் எடுத்துடுவேன்"

"ஹே சாஹேப்! உள்ள கொண்டு போற ரைட்டு இப்ப ஒங்கிட்ட இல்ல. அது சரி தம்பாக்கு வச்சிருக்கியா?"

"என்னடா எல்லார்க்கிட்டயும் நாங்க வாங்குறோம் எங்கிட்ட நீ புடுங்குறியா? பூட் இக்டூன்"

"அரே சாஹேப், சாஹேப்! கியா இத்னா குஸ்சா கர்தா ஹை. சல். தம்பாக்கு தே. கொடு சாஹேப்"

(தொடரும்)

About The Author