மதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி! (இறுதிப் பகுதி)

கடந்த வாரம்: மதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி!

உங்களுக்கு ஏற்பட்ட கார் விபத்து பற்றி…

‘மாப்பிள்ளை’ பட ஷூட்டிங்கிற்காக திருநெல்வேலி போனோம். அப்போது, அங்கிருந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நான், டிரைவர் மற்றும் உதவியாளர் மூன்று பேர் காரில் போகிறோம். போகும்போது எதிரில் ஒரு மாடு வர, அதற்காக டிரைவர் வண்டியைத் திருப்ப, வண்டி ஐந்து முறை உருண்டு ஒரு பெரிய பாறாங்கல் மேல் மோதியது. அப்படியே அப்பளமாக நொறுங்கிப்போனது. எனக்கு நினைவிருந்தது. காரின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து, டிரைவரையும் உதவியாளரையும் வெளியே இழுத்தேன். கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. நான் உடனே ஷூட்டிங் போகலாம் என்று சொன்னேன். அங்கு பார்த்து நின்றவர்களுக்கெல்லாம் ஒரே பதைபதைப்பு. கார் அப்படி அப்பளமாய் நொறுங்கியிருந்த பயங்கரத்தைப் பார்த்துக் கண்ணீர் விடாத குறை. ‘அத்தனை செலவு செய்து ஷூட்டிங்கிற்காக வந்திருக்கும் தயாரிப்பாளர்களைக் காக்க வைக்கக்கூடாது. அதான் ஒன்றும் ஆகவில்லையே’ என்று அங்கிருந்து படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டோம்.

நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளிலெல்லாம் திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களைச் சொல்கிறீர்கள் – அது எப்படி?

நான் டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், எம்.எஸ்.வி, கண்ணதாசன், நம்பியார் என்று எல்லாருடனும் நன்றாகப் பழகுவேன். அப்போது -அவர்களுடன் பழகும்போது- கிடைக்கும் சின்ன சின்னத் தகவல்களைச் சொல்லும்போது நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

ஒருமுறை எம்.எஸ்.வி ஒரு படத்திற்கு இசை அமைக்கிறார். கண்ணதாசன் பாடல். எப்போதுமே இசை அமைக்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதன் சீக்கிரம் வந்து விடுவார். ஆனால், அன்று கண்ணதாசன் முன்னால் வந்து காத்திருக்கிறார்; எம்.எஸ்.வி தாமதமாக வருகிறார். கண்ணதாசன் எம்.எஸ்.வி-யிடம் "ஏன் லேட்? தூங்கிவிட்டு வருகிறாயா?" என்று கேட்க, எம்.எஸ்.வி, "இல்லை, நான் கோவிலுக்குப் போய்விட்டு வந்தேன். அதான் தாமதமாகி விட்டது" என்கிறார். கண்ணதாசன் விடாமல், "நீ தூங்கிவிட்டாய்…" என்று சொல்ல, விஸ்வநாதன் மறுக்க, இது தொடர்ந்தது. அப்போது நான் அங்கு இருக்கிறேன். கடைசியாக அன்று கண்ணதாசன் எழுதிய பாடலின் முதல் வரி என்ன தெரியுமா? ‘அவனுக்கென்ன? தூங்கிவிட்டான். அகப்பட்டவன் நானல்லவா’ என்பதுதான். (குபீர் சிரிப்பு).

இசை, நடிப்பு இவை இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது?

இரண்டுமே எனக்குப் பிடிச்சவைதான். ஒரு தொழிலை ரசிச்சு செய்யறப்போ கட்டாயம் அது பிடிக்கும். நான் ஒரு ஃபேன் ஆகவோ, லைட் ஆகவோ, அல்லது ஃபிரிட்ஜ் ஆகவோ இருக்க விரும்பவில்லை. இவற்றையெல்லாம் இயக்கும் கரண்ட்டாக இருக்கவே விரும்புகிறேன்.

இன்றைய திரைப்பட காமெடியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மக்கள் எப்போதுமே எதாவது புதிதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். என்.எஸ்.கே காலத்திலிருந்து புதிது புதிதாக காமெடி நடிகர்கள் வந்து போகிறார்கள். காமெடியில் கேலி செய்வது, நையாண்டி, கோமாளித்தனம், அரசியல் பற்றிய நகைச்சுவை என்று பல வகை இருக்கிறது. என்.எஸ்.கே இருந்தபோது அந்த வகையான காமெடியை மக்கள் ரசித்தார்கள். ஒரு படத்தில் இரண்டு பேர் ஊர்வம்பு பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் வந்து ஒருவரிடம், "உன் பாக்கெட்டில் என்ன இருக்கிறது சொல்?" என்பார். அதற்கு அவர் விழிப்பார். அப்போது என்.எஸ்.கே "உன் பாக்கெட்டில் இருப்பதே உனக்குத் தெரியவில்லை. ஏன் ஊர் வம்பு பேசுகிறாய்?" என்று கேட்பார். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வரும் காமெடி. ஒருவர் மாட்டை விற்பதைப் பற்றிப் பேசுவார்; அடுத்தவர், பெண்ணைக் கல்யாணம் பேசுவதாய் நினைத்து பதில் சொல்லுவார். அவர்கள் பேச்சு ஒருவரை ஒருவர் தப்பாக நினைத்து தொடரும்.

யாரையும் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க முடியாது. ஒருவர் சிரிக்காமலே இருந்தால் அவரை நரசிம்மராவ் என்போம். தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீனிவாசன், கவுண்டமணி – செந்தில் ஜோடி, அப்புறம் வடிவேலு, சந்தானம், சூரி என்று வந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் எதாவது வித்தியாசமாய் புதிதாய் வேணுமென்று விரும்புவதால் சில காலங்களுக்கு பிரபலமாக இருந்த ஒருவர் மாறி அடுத்தவர் பிரபலமாகிறார். ஏன் இப்போது கவுண்டமணி நடிக்க முடியவில்லை? மக்கள் ரசனை மாறுகிறது. தயாரிப்பாளர்களைக் கேட்டால் மக்கள் விரும்புகிறார்கள் என்பார்கள். ரசிகர்களைக் கேட்டால் தயாரிப்பாளர்களைச் சொல்லுவார்கள். எப்போதுமே இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போரடித்துவிடும். பூரி சாப்பிடலாம் என்று தோன்றும். அது போலத்தான், சினிமாவில் சில காலங்கள் நீடித்த பிறகு புதிதாய் ஒருவர் வந்து விடுகிறார். இசையமைப்பாளர்களையே எடுத்துக் கொண்டால், “இளையராஜா போல் உண்டா?” என்று சொல்வார்கள். ஆனால், பிறகு ரஹ்மான் வந்தார்; இன்று அனிருத் என்று ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது. இளையராஜாவின் பழைய பாடல்களைக் கேட்டு "ஆஹா" என்பவர்கள் இன்று இளையாராஜாவின் இசைக்கு அவ்வளவு ஆதரவு தருவதில்லையே! பழையன கழிதலும் புதியன புகுதலும் சினிமாவிலும் உண்டு. நான் இன்னும் 600 படங்களுக்கு மேலும் நிலைத்து நிற்கிறேன் என்றால், நான் எப்போதுமே நம்பர் 1 ஆக இருக்க ஆசைப்பட்டதில்லை. கிரேசி மோகன் சொன்னதுபோல ‘எப்போதுமே நாட் அவுட்!’

நீங்கள் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்…?

ரஜினிகாந்த் படம் ‘லிங்கா’, ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம், சுராஜ் சாரின் படம், அப்புறம் அபிஷேக் பச்சன் நடிக்கும் படம், ஹரி இயக்கி சூரியா நடிக்கும் படம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இசை, நடிப்பு, டி.வி நிகழ்ச்சிகள் என்று பல வேலைகளில் ஈடுபடுகிறீர்களே? எப்படி உங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது?

என்னைப் பொறுத்த வரையில், நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்க வேண்டும் என நினைக்கிறேன். அளவை விட தரம்தான் முக்கியம். நான் என் பையனுடன் இரண்டு மணி நேரம் அமர்ந்து ஒன்றும் உபயோகமில்லாமல் பேசுவதை விட, பத்து நிமிஷம், தேவையானதை – பயனுள்ளதை மட்டும் பேசினால் போதும். எதை முதலில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து அதை முதலில் செய்யவேண்டும். எனக்கு ஷூட்டிங் இருக்கும்; இசை நிகழ்ச்சியும் இருக்கும். இசை நிகழ்ச்சி இருந்தால் ஷூட்டிங்கை சீக்கிரம் முடித்துக் கொள்வேன். வெளியூர் போக வேண்டியிருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடுவேன். ‘ஆதித்யா’ டி.வி-யில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் பற்றிப் பேசியிருக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு பல இடங்களிலிருந்து பேசக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

ஒசாமாவாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை எப்படி திட்டமிட்டு உபயோககரமாகச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட 45 நிமிஷங்கள், பொழுது போனதே தெரியாமல் சுவாரசியமாக நடந்த இந்தப் பேட்டியில் இந்தச் சிரிப்பு முகத்திற்குள் மறைந்திருக்கும் பல்வேறு முகங்களைக் காண முடிந்தது. நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு விடைபெறுகிறோம்.

About The Author