மதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி!

சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்ட அவருடனான ஒரு ஜாலியான நேர்முகம் இது. பேட்டிக்கு இடையே பல வெடிச் சிரிப்புக்களையும் அவரது இயல்பான நகைச்சுவை உணர்வையும் காண முடிந்தது. இனி ‘மதன்பாப்’-உடன்…

மதன் பாப் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது உங்கள் டிரேட் மார்க் சிரிப்புதான். அது உங்கள் இயற்கையான சிரிப்பா, அல்லது திரைக்காக நீங்கள் கொண்டு வந்ததா?

பொதுவாகவே எனக்கு ரொம்ப நகைச்சுவை உணர்வு உண்டு. அது என்னோடு உடன்பிறந்தது. இதனாலேயே நான் பல சங்கடங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். நான் இசையமைக்கும் டிராமாக்களில் தப்பு பண்ணினால் நான் வாசிக்கும் கிடாரைக் கூடக் கீழே போட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன். எதாவது ஜோக் சொல்லணும்னா நான் சிரிச்சுண்டே சொல்றதனால் என்னால ஜோக்கே முழுசாக சொல்ல முடியாது. என் சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு டி.வி நிகழ்ச்சியில பார்த்துட்டு அதை வைத்து கேரக்டர் உருவாக்கி என்னை நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் முன்னால் பதிந்து போயிருக்கிறது.

பொதுவாக உங்களை ரசிகர்கள் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பெரிதும் அறிவார்கள். உங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் இசைத் திறன் பற்றி…

முதல் முதல்ல புல்புல்தாரா வாசிச்சேன். நான் வாசிச்சுப் பாக்கறப்போ அதில கொஞ்சம் சங்கீதம் வந்தது. அதுல முதல் முதல்ல நான் வாசிச்சதே நம்ம தேசிய கீதம் ‘ஜன கண மண’தான். (கணகணவென சிரிக்கிறார்). பிறகு கிடார்; பின்னர், லண்டன் டிரினிடி காலேஜில் எட்டாவது கிரேட் வரை பாஸ் செய்தது; அதற்குப் பிறகு எஸ்.ராமநாதனிடம் கர்நாடக இசைப் பயிற்சி என இசைப்பயணம் தொடர்ந்தது. அதற்குப் பிறகு எனக்கு வெளியிலிருந்து வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தன.
எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பல இசையமைப்பாளர்களின் குழுவில் பங்கு பெற்றிருக்கிறேன். சோ, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, வி.எஸ்.ராகவன், பிரியதர்ஷன் என்று பலருடைய நாடகங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். பி.பி.சி-க்கு, ‘இந்திய கிராமங்கள்’ (வில்லேஜஸ் ஆஃப் இந்தியா) என்ற ஒரு நிகழ்ச்சிக்கு இசை அமைத்ததற்காக எனக்குத் தங்க மெடல் கிடைத்தது. ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பிறகு, நானே ‘மதன் பாப் மெல்லிசைக் குழு’ என்று ஆரம்பித்து, தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினேன். சினிமாக்களில் வாய்ப்பு வர ஆரம்பித்த பிறகு மெல்லிசைக் குழு தொடரவில்லை. இப்போதுதான் ஐந்து வருடங்களாக ‘மதன் உத்சவ்’ என்ற பெயரில் மறுபடியும் மெல்லிசைக் குழு ஆரம்பித்து நடத்தி வருகிறேன். கமலஹாசன்தான், "உன்னிடம் திறமை இருக்கிறதே, ஆரம்பிக்கலாமே?" என்று சொன்னார். அவரும் கே.எஸ்.ரவிகுமாரும் துவங்கி வைத்தார்கள். என் குடும்பத்தில் என் பையன் அர்ச்சித் எம்.சி.ஏ, எம்.பி.ஏ படித்திருக்கிறான். திரைப்படங்களில் பின்னணியும் பாடுகிறான். அவன்தான் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலைப் பாடியது. என் பெண் ஜனனியும் எம்.பி.ஏ முடித்திருக்கிறாள். அவளும் நன்றாகப் பாடுவாள். ஒருமுறை சிறந்த பாடகிக்கான பரிசு வாங்கியிருக்கிறாள். என் மனைவி சுசீலாவும் நன்றாகப் பாடுவாள் நாங்கள் இணைந்து இந்தக் குழுவைக் குடும்பமாக நடத்துகிறோம். முதலில் எல்லாம் கல்யாணங்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த மாட்டேன் – சபாக்களில் மட்டும்தான் நடத்துவேன். இப்போது நிறையப் பேர் வற்புறுத்துவதால் கல்யாணம் போன்ற விசேஷங்களிலும் கச்சேரி செய்கிறேன். நிறையப் பேர் நான்தான் நடத்த வேண்டும் என்பதற்காக கல்யாண, ரிசப்ஷன் தேதியைக் கூட மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் – அந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது.

உங்களுக்கு மதன் பாப் என்ற பெயர் எப்படி வந்தது?

நான் என் வீட்டில் எட்டாவது பையன் – அதனால் எனக்குக் ‘கிருஷ்ணமூர்த்தி’ என்று பெயர் வைத்தார்கள். ஆனால், என் சித்தப்பா பெயரும் கிருஷ்ணமூர்த்தி. அவர் பெரியவர், அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட முடியாது – என்னைக் கிருஷ்ணமூர்த்தி என்று கூப்பிடுவது சங்கடமாக இருந்தது. நான் எட்டாவது பையனாக இருந்தாலும் அப்போதே கொழுகொழுவென்றிருப்பேன் – பத்து பவுண்டு இருப்பேன் – அப்போது என்னை ‘மதன்’ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்னர், அது ‘மதன் பாபு’ ஆகி, கடைசியில் ‘மதன் பாப்’ ஆகிவிட்டது.

உங்கள் அப்பா பற்றி…

என் அப்பா பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். பாரதியாருடைய நண்பர். காமராஜரும் என் அப்பாவும் ‘வாடா போடா’ என்று கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு நட்பு கொண்டவர்கள். ராஜாஜிக்கு என் அப்பாவை ரொம்பப் பிடிக்கும்.
‘வெள்ளையனே வெளியேறு’, ‘உப்பு சத்யாக்கிரகம்’ போன்ற போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர் – அவர் பெயர் மதுரமித்ரன் என்.சுப்பிரமணியன். அவர் பெயரில் அவர் வாழ்ந்த இடத்தில் ஒரு தெருவே இருக்கிறது.

இணையத்தில் உங்கள் அப்பா ‘காக்கா’ ராதாகிருஷ்ணன் என்று ஒரு தகவல் இருக்கிறதே? – என்றபோது

அய்யய்யோ! அப்படி ஒரு தகவல் இருக்கிறதா? ‘காக்கா’ ராதாகிருஷ்ணன் என் மரியாதைக்குரியவர். ‘தேவர் மக’னில் அவருடன் நடித்திருக்கிறேன். வயது வித்தியாசம் பார்க்காத நண்பர். ஆனால், அவர் எனக்கு அப்பா இல்லை – நான் அவருக்குப் பையனில்லை! (முத்திரைச் சிரிப்பு!)

நீங்கள் ஹாலிவுட் படத்திற்கும் இசை அமைத்திருக்கிறீர்கள். இசைதான் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. பிறகு எப்படி சினிமாவில் நுழைந்தீர்கள்?

முதலில் பாலசந்தர் சார்தான் என்னைக் கூப்பிட்டார். நான், அவர் படத்தில் இசை அமைக்கக் கூப்பிடுகிறார் என்று நினைத்தேன். பிறகுதான் நடிக்கக் கூப்பிடுகிறார் என்று தெரிந்தது. அப்போது எனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை. அவர்தான் நடிக்க வைத்தார். பிறகு, ‘தேவர் மகன்’, ‘ஜாதி மல்லி’ என்று பல படங்கள். ‘ரோஜா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், செய்ய முடியவில்லை. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று கிட்டத்தட்ட 600 படங்கள் பண்ணி விட்டேன். இப்போது ‘மதன் உத்சவ்’ இசை நிகழ்ச்சி நடத்துகிறேன். அதில் என் பெண், பையன், மனைவி என்று குடும்பத்தோடு செய்வதில் ஒரு மகிழ்ச்சி. அதோடு இதன் மூலம் ரசிகர்களையும் நேரில் சந்திக்க முடிகிறது. நானும் கிதார் வாசிப்பதால் எனக்கும் இசை வாசனை போகாமல் இருக்கிறது.

பொதுவாக, சினிமா என்றாலே தொழில் போட்டி நிறைய இருக்கும். ஆனால், நீங்கள் நடிகர்கள் அனைவரிடமும் எப்படி நட்புடன் பழகுகிறீர்கள்?

சினிமா என்பது ஒரு தொழில் – அது ஒரு பெரிய கடல். அதிலிருந்து யார் வேண்டுமானாலும் தேவையான அளவு அள்ளிக் கொள்ளலாம் – ஒரு பீப்பாயில் அல்லது கூஜாவில், கப்பில் என்று அவர்கள் திறமைக்குத் தகுந்தபடி. யார் வாய்ப்பையும் யாரும் குறைக்க முடியாது. இரண்டாவது, கடவுள் புண்ணியத்திலே எல்லாருடனும் நட்பாகப் பழகுவேன்; அவர்கள் கஷ்டங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன்; ரோடில் போகும்போது எதாவது ஆம்புலன்ஸ் போனால் கூட, "ஆண்டவா, நல்லபடி பிழைக்கணுமே" என்று வேண்டிக் கொள்வேன். இதனால்தான் எனக்கு இணைபிரியாத நல்ல நட்பு கிடைக்கிறது.
உங்களுக்கு ஏற்பட்ட கார் விபத்து பற்றி…

–இதற்கு மதன் பாப் அளித்த அதிர்ச்சி பதில் அடுத்த வாரம்..
.

About The Author