“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்

1985ல் பூவே பூச்சூடவா படத்தில் பார்த்த அதே நதியாதான் இப்போது பட்டாளம் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது. இந்த 23 வருடங்களில் அவர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மட்டும் மாறாமல் அச்சு அசலாய் இப்போதுதான் சினிமாவுக்கு வந்த புது ஹீரோயின் போல ச்சோ சுவிட் … ஆக இருக்கிறார். மூத்த ஆர்டிஸ்ட் என்ற பந்தா எதுவுமில்லாமல் செட்டில் செம ஜாலியாக பழகுகிறார்.

தன் ஷாட் பற்றி கவனமாக டைரக்டரிடம் டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தவரிடம், “மேடம் நாங்க பத்திரிக்கையிலிருந்து…” என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டு நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ரெடியாகிறார். மாலை நேரத்திற்கு இதமாக டீ வர…. சூடாக இருந்த டீயை வைக்க அந்த ஸ்பாட்டில் நாம் இடம் தேடினோம். பக்கத்தில் ஷூட்டிங்கிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டையை நேராக நிமிர்த்தி வைக்கிறார் நதியா. இப்ப உங்களுக்கு டீபாய் ரெடி என்று எதார்த்தம் பேசுகிறார். உங்ககிட்ட மூணு சீக்ரட் பத்தி கேட்கணும்னு சொல்லவும், சீக்ரட் ரொம்ப ஜாலியான விஷயம்.. சொல்லுங்க அந்த மூணு சீக்ரட்டையும்…. இனி எல்லாருக்கும் தெரியப்படுத்திரலாம் என்கிறார்.

யூத்தாவே இருப்பது, எனர்ஜியோடு இருப்பது, இன்றைக்கும் உங்க ரூட் தனியா இருப்பது என்று நாம் அடுக்க …

நான் மட்டுமில்லங்க. எங்க குடும்பத்தில எல்லோருமே இப்படித்தான்… எந்த டயட்டும் இல்லை.. எல்லா சாப்பாட்டையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடற ஆள். அதை உடற்பயிற்சி செஞ்சு சரிக்கட்டிடுவேன். எப்போதும் என் நலன் மீது எனக்கு அக்கறை இருக்கும். மனசளவில், உடலளவில் நான் என்னை எப்போதும் ஃபிரஷ்ஷா வைத்திருக்கிறேன். இன்றைக்கு நான் பிசியாக இருப்பதற்குக் காரணம் என் கேரக்டர் மட்டும்தான் பார்க்கிறேன். எவ்வளவு அந்த கதைக்கு முக்கியம், அதில் எந்தளவு என் நடிப்புத் திறமை வெளிப்படுத்த முடியும். இதை மட்டும்தான் நான் பார்க்கிறேன்.

பட்டாளம் படத்தில என்ன ரோல் பண்றீங்க ?

பட்டாளம் படத்தில் மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பவராக வருகிறேன். உண்மையாகவே இந்த கதாபாத்திரம் என்னை ரொம்ப பாதிச்சது. மனவளர்ச்சி இல்லாதவங்களுக்கு சிறியதா ஒரு ஸ்கூலும், ஹோமும் நடத்தறேன். இந்த கேரக்டர் நடிக்க ஆரம்பித்த பின்பு எனக்குள் நிறைய அமைதி வந்திருக்கு. இந்தக் கேரக்டரை பார்க்கிற ஒவ்வொரு பொண்ணுக்கும் தன்னம்பிக்கை வரும். நாமும் நிறைவான விஷயங்களை செய்யணும்னு எண்ணங்கள் வரும். கண்டிப்பா படம் பார்த்துட்டு வெளில வரும்போது என்னோட கேரக்டர் அவங்க மனச வருடியிருக்கும். என்னோட சினிமா பயணத்தில மறக்க முடியாத ஒரு கேரக்டர். எல்லாத்தையும் நானே சொல்லிட்டா… மற்றதை தியேட்டர்ல வந்து பார்த்து தெரிஞ்சுக்கங்க.

நதியா கம்மல், நதியா வளையல்னு ஒரு காலத்துல நீங்க போடுற காஸ்டியும்ஸ் கூட பேசப்பட்டதே?

அந்த விஷயம்தாங்க எம் குமரன்ல என்னோட ரீஎன்ட்ரில ரசிகர்களை ஏத்துக்க வைச்சது; அதன் பிறகும் தொடர்ந்து படங்கள் கொடுக்க வைச்சதும். இது வரை 37 படங்கள் பண்ணியிருக்கேன். பூவே பூச்சூடவா ரோல் அதுவரை வேற நடிகைகள் பண்ணாதது அந்த கேரக்டரை இன்னும் அதிகமா பேச வைச்சது. சின்னப் பிள்ளையிலிருந்து எனக்கு டிரஸ் பண்ணிக்கிறது ரொம்பப் பிடிக்கும். நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும். அது தாங்க… இந்த 23 வருஷத்தில சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. டெக்னாலஜில எங்கேயோ போயிடுச்சு. நிறைய கிரியேட்டிவிட்டி கொண்டு வர்றாங்க. சினிமாவுல ஜெயிக்கறதுக்காக வெறித்தனமா உழைக்கிறாங்க. அதுதான் சினிமாவை இந்த உயரத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்கு. என்னை அதிகம் சந்தோஷப்படுத்திய விஷயம் மதுரைப் பக்கம் இன்னும் நதியா கம்மல் விக்குதாம். எனக்கு ஆசையா இருக்குங்க… போய் வாங்கணும்னு.

நதியா எப்படிபட்ட ஆள்?

ரொம்ப ஜாலியான பார்ட்டிங்க. அதே நேரத்துல உணர்ச்சிவசப்படற ஆள். எது செஞ்சாலும் ரொம்ப சரியா பண்ணணும். வெள்ளை ரொம்ப அழகா, அமைதியா காட்டக்கூடிய நிறம். அதுதான் எனக்குப் பிடிக்கும் . எனக்கு அமைதி பிடிக்கும். எங்க அம்மாதான் எனக்கு மிகவும் பிடிச்ச பெண்மணி. அவங்ககிட்ட இருந்து கத்துக்க எனக்கு நிறைய விஷயம் இருக்கு. வேலைக்குப் போற பெண்மணியா இருந்துக்கிட்டு எங்களை சரியான முறையில் வளர்த்துருக்காங்க. புத்தகம் படிக்கிறதுனா எனக்கு அதிக இஷ்டம். இந்த எழுத்தாளர்தான் என் சாய்ஸ்னு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மஹாராஷ்டிரா சமையல் நல்லா சமைப்பேன். ஸ்ரீகண்ட்னு ஒரு ஸ்வீட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை நானே வீட்ல செய்வேன்.

நதியா ரியல்ல எப்படிப்பட்ட அம்மா?

எம் குமரன்ல நீங்க பார்த்த மாதிரியான ஜாலியான அம்மாதான். சனம், ஜானம்னு இரண்டு பொண்ணுங்க. வாழ்க்கையில ஒரு நல்ல அம்மாவா இருக்கிறதுதான் கடினமான விஷயம். இன்றைய குழந்தைகளை சமாளிப்பதற்கே தனியாக படிக்க வேண்டிய சூழல் இருக்கு! என் குழந்தைகளுடைய தேவைகளை நிறைவு செய்ற அம்மாவா இதுவரை சரியாதான்
செஞ்சிருக்கேன். நான் மற்றும் என் கணவர் இருவரும் பிசியாக இருந்தாலும் எங்க குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதிலும், அவர்களை ரிலாக்ஸ் பண்ணுவதிலும் ஒருநாளும் தவறியதில்லை. நிறைய வெளி இடங்களுக்கு கூட்டிட்டுப் போவோம். அப்போதுதான் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாக நேரம் செலவழிக்க முடியும். நான் தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஸ்டிரிக்டான அம்மாவாகவும் அதே நேரத்தில அவர்களுக்கு ஒரு நல்ல ஃபிரண்டாகவும் இருப்பேன். சமீபத்தில என் பொண்ணொட ஃபிரண்ட் அலாவுதீன் கார்ட்டூன் ஷோவில் வரும் ஜாஸ்மின் கேரக்டர் மாதிரி இருக்கீங்கன்னு சொன்னாங்க. என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச பெரிய அவார்டு அதுவாதான் இருக்கும். அந்த 6 வயது குழந்தைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிற அளவுக்கு அறிவு இருக்கேனுதான் எனக்கு ஆச்சர்யம்.

இது வரை நீங்கள் சந்தித்த ஆண்கள் பற்றி?

என் கணவர், என் அப்பா… இப்படி என் வாழ்வில் நான் சந்தித்த இரண்டு முக்கிய ஆண்களுமே என்னை அதிகம் புரிந்து கொண்டவர்கள். அவர்கள் என் பயணத்தை சரியாகப் பகிர்ந்து கொள்கிறவர்கள். நானும் அவர்களுடைய வாழ்க்கையில் தோள் கொடுத்து உதவுகிறேன். எம் குமரன்ல ஒரு சின்ன பிட் பாட்டுல பரத நாட்டியம் ஆடியிருப்பேன். அது ஜெயம் ரவியே கம்போஸ் பண்ணினது. அவர் நல்ல நடிகர்னுதான் எல்லாருக்கும் தெரியும். அவர் நல்ல பரத கலைஞரும்கூட! என்னுடைய ஃபிரண்ட்ஸ் எல்லோருடனும் இன்றும் ‘டச்’சில இருக்கேன். எனக்குக் கிடைக்காத வாய்ப்பு இப்ப என் குழந்தைகளுக்குக் கிடைச்சிருக்கு. லண்டன்ல இருக்கிற ஃபிரண்ட்கிட்ட இமெயில் மூலம் பேசுறாங்க.

சென்னை பற்றி…?

நான் பார்த்த பழைய சென்னை இப்ப இல்லை. என் பிரண்ட்ஸோட வெளில போறதுக்கு பார்ட்டி, டிஸ்கோ, நல்ல ரெஸ்டாரன்ட்ஸ் எல்லாம் வந்திருக்கு. ஆனா ஷூட்டிங் முடிந்து டிராஃபிக்கில ரூமுக்குப் போகத்தான் முடியல. கண்டிப்பா இன்னும் நம்ம நாகரிகம் உயரணும். நேரத்தோட மதிப்பு இன்னும் தெரியல. சுத்தம் பற்றிய விழிப்புணர்வில்லை. மேலை நாடு மாதிரி எல்லாத்துலயும் மாறுறாங்க.. ஆனா அவங்களோட பெர்பக்ஷன் மற்றும் நேரத்தை சரியாகக் கையாளுதல் இவை இரண்டையும் மட்டும் காம்பிரமைஸ் பண்ணிக்கிறாங்க. இதையும் அவங்கள மாதிரி செய்தா சென்னை இன்னும் சிங்காரமா மாறும்.

(நன்றி : தினமலர்)

About The Author

1 Comment

Comments are closed.